கடுமையான பிரதிஷ்டைக்காரன்

அமைதியில்லா வாழ்க்கை
ஆர்வமில்லா உள்ளங்கள்
ஓயாத பரபரப்பு
அர்த்தமில்லா ஆரவாரம்
அடிக்கடி ஆர்ப்பாட்டம்
மனித சமுதாயத்தின்
அன்றாட வாழ்க்கை!

எதிலுமே இனம்புரியாத வேகம்.
மதம் பற்றிய சிந்தனைகளிலும்
ஒரு உணர்ச்சிப் பூர்வமான வெறி
இவைகள் இன்றைய மனிதனை
தினமும் ஆட்கொண்டிருக்கிறது
ஆட்டிப்படைக்கிறது

இதற்கிடையில்தான்
வனாந்தரத்திலிருந்து
ஒரு தெளிவான சத்தம்
மனித குலத்தை
விழித்தெழச்செய்கிறது.

அவன் வனாந்தரத்திலே
கூப்பிடுகிற சத்தமாய்
காணப்பட்டான்.
இதை ஏசாயா தீர்க்கன்
முன்னறிவித்திருக்கிறார்.

உன் பெயர் என்ன என்று கேட்டால்
சத்தம் என்று சத்தமாய்ச்
சொல்லுவான்

வருகிறவர் நீர்தானா?
(மத்தேயு 11:3)
இந்த ஒரு கேள்விக்காகத்தான்
அவன் வாழ்வே காத்திருந்தது

கர்த்தருக்கு வழியை
ஆயத்தப்படுத்திய
யோவான் ஸ்நானனின் கேள்வி 
மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் 
சமீபித்திருக்கிறது என்ற
செய்தியின் அறைகூவல்

உலகத்தாருக்கும் அவனுக்கும்
உடையில்,
உணவில்கூட வித்தியாசம்.


உலகத்தில் இருந்தாலும்
வனாந்திர வாழ்க்கை

ஊருக்குள் உலா வரும் பழக்கம்
அவனுக்கில்லை 

அவனது வாழ்க்கையும்
கர்த்தருக்குப் பாதைகளை
செவ்வைபண்ணுங்கள்
என்ற
செயலாக்கமான சொற்களும்
நகரத்தாரையும் தேசத்தாரையும்
சுற்றுப்புறத்தார் யாவரையும்
அவன்பால் ஈர்த்தன

ஜனங்கள் அவனிடம்
பாவங்களை அறிக்கையிட்டார்கள்
யோர்தான் நதியில்
ஞானஸ்நானமும் பெற்றார்கள்

இயேசுவுக்கே
ஞானஸ்நானம் கொடுத்த
தேவனின் வேலைக்காரன்

(மத்தேயு 3:16)

பிளாட்பாரத்திற்குத் தகுந்த பேச்சு
அவனுக்கு கிடையாது
அவனுக்கு மேடை ஏதுமில்லை,
மேடான இடங்களில் நின்று பேசுவான்

விரியன்பாம்புக் குட்டிகளே! 
என்று அடைமொழியிட்டு அழைத்து,
வரும் கோபத்திற்கு
தப்பித்துக்கொள்ள
வகை காட்டியவன்


அவனது பிரத்தியட்சமான பேச்சு

அநேகரை பிரமிக்க வைத்தது.
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளை
எதிர்பார்த்து காத்திருந்தவன்

மனதைக் குளிரவைக்கும்
மயக்கப் பேச்சு அவனிடம் இல்லை

அவனது வார்த்தைகள்
மனதை வெடிவைத்து
தகர்க்கும் வார்த்தைகள்


மகிமை தேவனுக்கு முன்பாக
மண்டியிடச் செய்யும்
அக்கினி வார்த்தைகள்


மரங்களின் வேர் அருகே
இப்பொழுதே கோடரி
வைக்கப்படுகிறது என்பான்.

மிகப்பெரிய பரிசுத்தவான்
கடுமையான பிரதிஷ்டைக்காரன். 
எலியா, எலிசா போன்ற
தீர்க்கதரிசிகளின் பிரதிபலிப்பை
இவனது ஊழியத்தில் காணமுடியும்

தன்னைப் புகழ்ந்தது கிடையாது
கர்த்தருக்கு முன் தன்னை
அதிகம் தாழ்த்துவான்.
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்
(யோவான் 3:30) என்றவன்.  

அவருடைய பாதரட்சையைச்
சுமக்கிறதற்கு நான்
பாத்திரன் அல்ல என்றவன்

மனுஷரின் கிரியைகளைக்
குறித்தே கவனமுள்ளவன்.

ஸ்திரீகளிடத்தில்  பிறந்தவர்களில்
யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும்
பெரியவன் ஒருவனும்
எழும்பினதில்லை (மத்தேயு 11:11) என்று
இயேசுவானவரால் நற்சாட்சி பெற்றவன்

அவன் காற்றில் அசையும் நாணலல்ல,
மெல்லிய வஸ்திரம் தரித்து
மேட்டுக்குடியினரோடு
பவனிவருபவனுமல்ல.
பணமும் பகட்டும் அவனிடமில்லை.
அவன் உண்மையுள்ள ஊழியக்காரன்.

இயேசுவின் வருகையைப் பற்றித்
தெளிவாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவர் வருகைக்காக
ஆவலோடு காத்திருந்தான்

யோவான் ஸ்னானனின் ஊழியம்
இயேசுவின் வருகைக்காகவே விளங்கியது.
அவன் காத்திருப்பு
வீண் போகவில்லை. இயேசு வந்தார்.

அவன் பிறப்பு,
பேச்சு, சிந்தனை, செயல்,
ஊழியம் எல்லாம்
இயேசுவின் வருகையைப்
பற்றியே இருந்தது.

ஐஸ்வரியம், ஆஸ்தி, செல்வம்,
செழிப்பு போன்ற வார்த்தைகள்
அவனது சொல்லகராதியில் இல்லை.

ஊழியனே விசுவாசியே
உன் சிந்தனை செயல் பேச்சு
எல்லாம் எதைப்பற்றி? யாரைப் பற்றி?

நிந்திக்கும் உலகில்,
உன்னை சிந்திக்க அழைக்கிறேன்.

வந்த இயேசு, மீண்டும் வருகிறார்.
வருகையில் அவரைச் சந்திக்க
ஆயத்தமா?

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
போதகர்/ எழுத்தாளர்

ஆசிரியர் :
வழிப்போக்கனின் வார்த்தைகள்

தொகுப்பு:
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவத்தண்ணீர் ஊழியங்கள் மதுரை -14