
சகல வித வாதைகள், கொள்ளை நோய்
யாத்திராகமம் 9: 13 – 15.
இங்கு கர்த்தர் மோசேயை பார்த்து, கூறினதாவது, நீ
1. அதிகாலமே எழுந்து, போய்,
2. பார்வோனுக்கு முன்பாக நின்று,
3. எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பி விடு.
அனுப்பாவிடில்,
1. சகலவித வாதைகளையும் உன் மேலும், உன் ஜனங்கள் மேலும் அனுப்புவேன். எதற்காக? பூமியெங்கும் என்னை போல வேறொருவரும் இல்லை என நீ அறியும் படி.
2. உன்னையும், உன் ஜனங்களையும் கொள்ளைநோயினால் வாதிப்பேன். எதற்காக? நீ பூமியில் இராமல் நாசமாய் போகும் படி.
இது நமக்கு திருஷ்டாந்தமாய் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியானால் நாம் செய்யவேண்டியது என்ன? என தியானிப்போம்.
1. அதிகாலையில் எழும்ப வேண்டும். எதற்காக? ஜெபிக்க, வேத வசனங்களை தியானிக்க, கர்த்தரோடு உறவாடி பெலன்பெற.
2. பார்வோனாகிய சத்துருவை, பிசாசை அவன் முன் நின்று அவனை நம்மை விட்டு, நம் ஜனத்தை விட்டு துரத்த,
3. நாமும், நம் ஜனங்களும் கர்த்தரை ஆராதிக்க வேண்டும். அதாவது பார்வோனின் (பிசாசின் )அடிமை தனத்திலிருக்கிற ஜனங்கள், எகிப்தின், அதாவது பாவத்தின் அடிமைதனத்திலிருந்து விடுதலையாகி கர்த்தரை ஆராதிக்கிறவர்களாய் மாற வேண்டும். இன்று நாம் இவ்விதமாய் கர்த்தரை ஆராதிக்கிறோமா? நம் ஜனங்களை ஆராதிக்க நடத்துகிறோமா? நம்மை ஆராய்ந்து பார்ப்போம்.
அன்று கர்த்தரை ஆராதிக்க இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிப்பு கூடாரம், ஆலயம் என பரிசுத்த ஸ்தலங்களை ஸ்தாபித்தார்கள். ஆனால் இன்றோ நம்மையே அவருடைய ஆலயமாக மாற்றி, 24/7 எப்போதும் கர்த்தரை ஆராதிக்க நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஆனால் நாம் அவரை எவ்விதம் ஆராதிக்கிறோம்? என்பதை பார்ப்போம்.
புறஜாதியார் அறியாமையினால் கர்த்தரை ஆராதிக்க முடியவில்லை. ஆனால் கர்த்தரை அறிந்தவர்கள், ஆவியோடும், உண்மையோடும் கர்த்தரை ஆராதிக்கிறோமா? முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவரில் அன்புகூர்ந்து அவரை ஆராதிக்கிறோமா? பயத்தோடும், பக்தியோடும், பரிசுத்த உள்ளத்தோடும் ஆராதிக்கிறோமா? பணிந்து குனிந்து ( தாழ்மையோடு) நம்மை ஜீவபலியாக அர்ப்பணித்து ஆராதிக்கிறோமா? இல்லாவிடில் ஞாயிறு கிழமை கடமைக்காக ஆலயம் சென்று ஆராதித்துவிட்டு, மற்ற நாட்கள் நம் விருப்பபடி வாழ்கிறோமா? பரலோகத்தில் நாம் செய்ய வேண்டியது கர்த்தரை ஆராதிப்பது தானே.
ஆராதிக்கவிடாதிருந்தால் சகல வாதைகளையும் அனுப்புவேன் என இங்கு கர்த்தர் கூறியிருக்கிறார். இன்று எத்தனை ஆராதனை ஸ்தலங்கள் இடிக்கப்பட்டன? பல தேசங்களில் ஆலயங்கள் வியாபார ஸ்தலங்களாக விற்கப்பட்டன. எத்தனை ஆராதிக்கும் ஊழியர்கள், விசுவாசிகள், அடிக்கப்பட்டு இரத்தம் சிந்தினார்கள்! கொலை செய்யப்பட்டார்கள்! சிறையில் அடைக்கப்பட்டார்கள்! ஆகவே தான் உலகத்தில் பஞ்சம், புயல், பூமிஅதிர்ச்சி, வெள்ள பெருக்கு, வெட்டுக்கிளி, கொள்ளை நோய் ஆகிய வாதைகள், கர்த்தரை போல் ஒரு தேவன் இல்லை என்பதை தேசம் அறியும் படி அனுப்பப்பட்டிருக்கிறது. மட்டுமல்ல, நீ பூமியில் இராதபடி நாசமடையும் படி கொள்ளை நோயினால் வாதிப்பேன் என்கிறார்.
இன்று கர்த்தரை நாம் எவ்விதமாய் ஆராதிக்கிறோம்? அனேக கிறிஸ்தவர்கள் ஆயத்தமின்றி, உள்ளான பரிசுத்தமின்றி, புறம்பான ஆடை அலங்காரத்தோடு கடமைக்காக, ஞாயிறு மட்டும், இரட்சிப்பின் வஸ்திரம் இல்லாதவர்களாய் ஆராதித்து கொண்டிருக்கிறோம் அல்லவா? மனம் திரும்புவோம்.கர்ததருக்கு பிரியமானபடி, வசனத்தின் படி ஆராதிக்க தீர்மானிப்போம். நினிவேக்கு இரங்கின கர்த்தர் நம்மையும் மன்னித்து வாதைகள்,கொள்ளை நோய்களிலிருந்து நம்மை விடுவிப்பார். ஆமேன். அல்லேலூயா.
Dr. Padmini Selvyn.