சிறுகதை : இரக்கமுள்ளவர்கள், இரக்கம் பெறுவார்கள்
அன்று அரசனின் பிறந்த நாள், சிறை கைதிகளில் ஒருவனை விடுவிக்க வேண்டும் என்று மனதில் தீர்மானம் கொண்டார், ஆனால் யாரை விடுவிப்பது என்பதில் அவருக்கு மிகப்பெரிய குழப்பம்.
தன் திட்டத்தை தன் மத குருவிடம் இரகசியமாய் பகிர்ந்தார், அவரும் அதை கேட்டு அழகான ஒர் ஆலோசனை கொடுத்தார், மன்னருக்கு அது திருப்தியாக இருந்தது.
அதன்படி சிறைக்கைதிகள் எல்லோரும் அழைக்கப்பட்டனர். உங்களை அரசர் விடுவிக்க போகிறார், அதற்காக இந்த பெட்டியில் ஆளுக்கு ஒரு முத்திரை சீட்டு கொண்டு வந்திருக்கிறேன், மாலையில் அரசவைக்கு வந்து இந்த முத்திரை சீட்டை காண்பித்து நீங்கள் விடுதலை பெற்று கொள்ளுங்கள் என்று சொல்லி அவ்விடத்தைக் கடந்தார் மதகுரு.
மாலையில் எல்லா கைதிகளும் முத்திரை சீட்டோடு வந்தனர். ஒருவர் மட்டும் வரவில்லை. மன்னர் அந்த வராத கைதியை அழைத்து வாருங்கள் என்றார், காவலர்கள் அவனை அழைத்து வந்து மன்னன் முன்பாக நிறுத்தினர்.
மன்னர் அவனிடம் கேட்டார், ஏன் நீ வரவில்லை, உன்னை தனியாக அழைக்க வேண்டுமா என்று கேட்டார்?
அதற்கு பதிலாக, அக்கைதி கூறினான், ஐயா, மத குரு கொடுத்த முத்திரை சீட்டில் ஒரு கைதிக்கு முத்திரை சீட்டு குறைவாக இருந்தது, அதோ அந்த பக்கம் நிக்கிறாரே கைதி, அவருக்கு மனைவி, குழந்தைகள் மட்டுமல்ல, வயதான பெற்றோரும் உண்டு, ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை அவரை குற்றவாளியாக்கியது, அவரின் நிலையை நான் தெளிவாக அறிந்திருக்கிறேன், அவருக்குதான் முத்திரை சீட்டு கிடைக்கவில்லை, நான் என் முத்திரை சீட்டை அவருக்கு கொடுத்துவிட்டேன், என்னை மன்னிக்கவும் என்று பதில் கூறினான் அக்கைதி.
சபாஷ், நீயே சிறந்தவன், உன்னைத்தான் நான் விடுவிக்கபோகிறேன், இவ்வளவு இரக்கமுள்ள நீ சிறையில் இருப்பது அர்த்தமல்ல என்று சொல்லி, மத குரு தந்த ஆலோசனையை அவையில் பாராட்டியவாரே, அக்கைதியை பார்த்து உன் நல்ல குணத்துக்கு ஏதோ என் உள்ளம் பரிசளிக்க தூண்டுகிறது, உன் ஆசையை சொல், இன்று அதை இவ்வரசன் நிறைவேற்றுவான் என்றவாறே சிங்காசனத்தில் அமர்ந்தான்.
அக்கைதி தயங்கியவாரே, மன்னா நான் விடுதலை பெற்றால், நான் விடுதலை பெற வேண்டுமென யாரை நினைத்தேனோ அவன் விடுதலை பெற முடியாதே, எனவே தயவு செய்து அவன் விடுதலையை எனக்கு பரிசாக தர வேண்டும் என வேண்டினான்.
மன்னன் உள்ளம் மேலும் பூரிப்படைந்தது, சரி உன் விருப்பப்படியே ஆகட்டும், நீ சொன்னவனையே நான் விடுவிக்கிறேன்.
ஆனால் இனி உன்னை விடுவிக்க முடியாது, ஆம் உன்னை விடுவிக்க முடியாது…..
மத குரு அதிர்ச்சியடைந்தவராய் மன்னனை பார்க்கும் போது …
மன்னர் சொன்னார். ஆம் உன்னை சிறையிலிருந்து விடுவிக்கவில்லை, உன்னை சிறைத்துறைக்கு அதிகாரியாக உயர்த்துகிறேன் என்று மகிழ்வோடு சொன்னார். இப்படிப்பட்ட நீ அதிகாரியாய் இருந்தால், சிறையில் இருப்பவர்கள் திருந்துவதற்கு அதிக வாய்ப்புண்டு என்று சொல்லி பூரித்தான் மன்னன்.
அவையும் மகிழ்ந்தது, மன்னனின் பிறந்த நாள் மேலும் சிறப்பானது. ஆம் இரக்கமுள்ளவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
அன்புடன்.
S மெர்லின்@ நல்ல நிலமாகு நண்பா