பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு

பதினாறாம் நூற்றாண்டு வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு காலப்பகுதி. இந்தக் காலப்பகுதிக்கு முன்பு வேதப் புத்தகம் மக்கள் வாசிக்க முடியாதபடி லத்தீன் மொழியில் மட்டும் ரோமன் கத்தோலிக்க மதத்தால் வைக்கப்பட்டிருந்தது. அதுவும் பல நூற்றாண்டுகளாக அந்த நிலைமை இருந்தது. எவரும் வாசிக்க வழியில்லாதபடி மக்களுக்குத் தெரிந்திராத மொழியிலும், வாசிப்பதற்குத் தடையுமிருந்தது. கத்தோலிக்க மதம் சத்தியத்தை மறைத்து தன்னுடைய போதனைகளை மட்டுமே மக்கள் பின்பற்றும்படி செய்துவந்துகொண்டிருந்த காலப்பகுதி அது. சுவிசேஷத்தின் அடிப்படையிலான மெய்க்கிறிஸ்தவம் தலையெழுப்பமுடியாதபடி செய்து தன்னுடைய போலிச்சமயத்தை மெய்யானதாக மக்களை நம்ப வைத்துக்கொண்டிருந்தது ரோமன் கத்தோலிக்க மதம்.

இந்தக் காலப்பகுதியில்தான் கடவுள் வரலாற்றில் அற்புதமாக செயல்பட்டார். பதினைந்தாம் நூற்றாண்டில் மக்கள் மத்தியில் எதையும் ஆராய்ந்தறிய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி, நாடுகளைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி, மொழி, கலை ஆகிய விஷயங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அச்சுக்கூடத்தையும் கண்டுபிடிக்கும் வழிகளை அவர் உருவாக்கினார். இதெல்லாம் ஆவிக்குரிய பெரும் எழுப்புதல் பதினாறாம் நூற்றாண்டில் ஏற்படப் பேருதவி புரிந்தன. இவையெல்லாம் நிகழ்ந்திருக்காவிட்டால் வேதம் எல்லோரும் வாசிக்கும்படியாக மொழிபெயர்க்கப்படும் பணிக்கு வழி இருந்திருக்காது.

பதினாறாம் நூற்றாண்டில் கத்தோலிக்க மத குருவாக இருந்த ஜெர்மனியைச் சேர்ந்த மார்டின் லூத்தரின் வாழ்க்கையில் கடவுள் கிரியை செய்தார். அந்த மனிதன் தன்னுடைய பாவத்தை உணரும்படிச் செய்தார். ரோமன் கத்தோலிக்க மதத்தில் ஆத்தும விடுதலையைத் தேடிப்பார்த்து சகல முயற்சிகளையும் எடுத்து அது கிடைக்காமல் போனதால் லூத்தர் லத்தீன் மொழியில் இருந்த வேதத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பலமொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த லூத்தருக்கு லத்தீன் மொழியில் இருந்த வேதத்தை வாசிக்க முடிந்தது. ஆத்தும விடுதலை அடைய வேண்டும் என்ற ஆதங்கத்தில் அதை வாசித்ததால் லூத்தர் வேதத்தைக் கருத்தோடு வாசித்தார். பாவ உணர்வு பெற்று, அந்தப் பாவத்திலிருந்து விடுதலை அடைய வேதம் வழிகாட்டுமா என்ற வெறியோடு அதை இரவு பகலாக வாசித்தார். சத்திய வசனம் என்று வேதத்திற்கு காரணமில்லாமல் பெயர் சூட்டப்படவில்லை. பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தை வாசித்தபோது லூத்தரின் இருதயத்தில் பவுலின் வார்த்தைகள் சம்மட்டியைப் போலப் பதிந்தன. ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை விசுவாசம் மட்டுமே இரட்சிப்புக்கு வழி என்ற சத்தியம் அவரைப் பிழிந்தெடுத்தன. கிரியை, கிரியை என்று கிரியையே வாழ்க்கையாக நம்பி வாழ்ந்துகொண்டிருந்த லூத்தருக்கு விசுவாசம் மட்டுமே இரட்சிப்புக்கு அவசியம், அதுவும் தேவனுடைய கிருபையின் மூலம் மட்டுமே விசுவாசத்தை அடைய முடியும் என்ற உண்மை சாகக் கிடந்தவனுக்கு உயிர் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அன்றே கடவுளின் கிருபையால் லூத்தர் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்தார். பல ஆயிரம் மாசும், சடங்குகளும், பாவமன்னிப்பு ஜெபங்களும் செய்ய முடியாததை கடவுள் வேதசத்தியத்தின் மூலம் லூத்தரின் வாழ்க்கையில் செய்தார்.

தனியொரு மனிதனாகிய லூத்தரின் வாழ்க்கையில் தலையிட்டு இலவசமாக இரட்சிப்பை அவருக்கு அளித்த கடவுள் அவர் மூலம் ஜெர்மனியில் சீர்திருத்தத்தை ஆரம்பித்து வைத்தார். ரோமன் கத்தோலிக்க மதத்திற்கெதிரானவர்கள் இருக்கும் இடத்தில் புல் முளைக்க வழியில்லாமல் ஆக்கிவிடும் கொடியவனாக இருந்த போப்பிற்கு எதிராக சீர்திருத்தத்தில் ஈடுபடுவதென்பது அந்தக் காலத்தில் தற்கொலை செய்துகொள்வதற்கு சமமானதாக இருந்தது. ஏற்கனவே ஜோன் ஹஸ் போன்றவர்கள் தீயிலிட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள். ஆனால், லூத்தர் சாதாரண மனிதரல்ல. போப்பை எதிர்க்க சரியான ஒரு மனிதனைக் கடவுளே தயார் செய்திருந்தார். இளகிய மனதும், நெஞ்சுரமும் இல்லாத எவராலும் போப்பை அன்று எதிர்த்து நின்றிருக்க முடியாது. அஞ்சா நெஞ்சரும், எதிர்ப்புக்களுக்கு மசியாதவரும், சத்திய வெறிகொண்டவருமான மார்டின் லூத்தரே அன்று சீர்திருத்தத்திற்கு அவசியமாயிருந்த மனிதராக இருந்தார். வேதத்தை ஆராய்ந்து சத்தியத்தை உணர்ந்த லூத்தர் கத்தோலிக்க போப்புக்கு எதிரான 95 காரணங்களை எழுதி விட்டன்பேர்க் கோட்டைக் கதவில் ஆணியால் அறைந்து சீர்திருத்தப் போராட்டத்தை ஜெர்மனியில் 1517ம் ஆண்டு ஆரம்பித்து வைத்தார். போப்பின் கண்ணில்படாமல் ஒரு வருடத்துக்கு தான் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்பேர்க் கோட்டையில் இருந்து லூத்தர் முதலில் புதிய ஏற்பாட்டையும் பின்பு பழைய ஏற்பாட்டையும் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். உயிரையே குடித்திருக்கக் கூடிய இந்தப் பணியை உயிரைக் கொடுத்து செய்தார் லூத்தர். வரலாற்றை உலுக்கி ரோமன் கத்தோலிக்க மதத்தின் அடித்தளத்தையே சுக்கு நூறாக்கிய இந்த செயலின் முழுத்தாக்கத்தையும் லூத்தர் அன்று நிச்சயம் அறிந்திருக்க வழியில்லை. லூத்தருக்குத் தெரிந்திருந்ததெல்லாம் கத்தோலிக்க மதத்தின் பொய்யை வேரறுக்க வேண்டும் என்பது மட்டுமே.  முழு உலகத்தையே இந்தச் செய்கை அசைக்கப் போகிறதென்றும், வேதம் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவதற்கு இது காரணமாக இருக்கப்போகிறதென்றும் லூத்தருக்கு அன்று நிச்சயம் தெரிந்திருக்க வழியில்லை.

Luther

கடவுளால் பெருங்காரியங்களை நிகழ்த்தப் பயன்படுத்தப்பட்ட அனைவருமே அவர்களுடைய செய்கைகளின் முழுத்தாக்கத்தையும் உணர்ந்து அவற்றைச் செய்யவில்லை. அதைச் செய்யாமல் இருக்க முடியாது என்பது மட்டுமே அன்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்களுக்குப் பின்னால் இருந்து அவர்களை இயக்கிக் கொண்டிருந்த கடவுளுக்கு மட்டுமே அந்தச் செய்கைகளின் முழுத் தாற்பரியமும் தெரிந்திருந்தது. இந்த வகையில்தான் சீர்திருத்தம் பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஆரம்பித்து ஐரோப்பா முழுவதும் பரவியது. அதன் காரணமாக வேதம், ஜெர்மனி, பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளிலெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு மக்கள் சத்தியத்தை அறிய பெரும் வாய்ப்பு ஏற்பட்டது. கிருபையின் மூலம் விசுவாசத்தை அடையும்படி சுவிசேஷம் எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கப்பட வழியேற்பட்டது.

இந்தப் பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தத்தின் விளைவாகவே இன்றைக்கு நாம் தமிழில் வேதத்தை வாசிக்கவும், சுவிசேஷத்தைக் கேட்கவும் சுதந்திரம் கிடைத்திருக்கின்றது.  ஆனால், உண்மை என்ன தெரியுமா? எந்தப் பதினாறாம் நூற்றாண்டின் காரணமாக நாம் இன்றைக்கு வேதத்தை வாசிக்க முடிகிறதோ, எந்த லூத்தரின் காரணமாக நாம் இன்றைக்கு சுவிசேஷத்தைக் கேட்க வழியேற்பட்டிருக்கிறதோ அந்த வரலாற்றை நம்மவர்கள் இன்றைக்கும் பெரிதாக அறியாமலும், அந்த அறிவில்லாமல் இருக்கிறோமே என்ற உணர்வில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பட்டிதொட்டியெல்லாம் வேதம் போவதற்கு வழியேற்படுத்திய சீர்திருத்த வரலாறு தெரியாத போதகர்களும், சபைகளும் நம்மினத்தில் ஏராளம், ஏராளம். தம் தேவைகளுக்கெல்லாம் கடவுளைப் பார்த்து நேரடியாக ஜெபிக்கத் தெரிந்திருக்கிற நம் மக்களுக்கு அந்த விசுவாசத்திற்கும், சுதந்திரத்துக்கும் வாய்க்காலிட்டுத் தந்திருக்கும் வரலாற்று அற்புதம் இன்றும் தெரியாமலிருக்கிறது. அதை விளக்கும் நூல்களும் தமிழில் இல்லாமலிருக்கிறது. அந்தக் குறையை நான் வெளியிட்டிருக்கும் நூல் ஓரளவுக்காவது தீர்த்து வைக்கும் என்று நம்புகிறேன்.

அரசியலும், பொருளாதாரமும், நாட்டு நடப்புகளும், தொழில் நுட்ப வளர்ச்சி பற்றியும் அறிந்திருக்கின்ற அளவுக்கு கிறிஸ்தவ வரலாறு பற்றி அரிச்சுவடியும் தெரியாமலிருக்கிற அறியாமையின் மைந்தர்களாக நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் இருந்து வருகிறார்களே என்ற ஏக்கம் என்னைப் பிடித்தாட்டாமலில்லை. நம்முடைய பூர்வீகம் நமக்குத் தெரியாமலிருக்க முடியுமா? நம் தாத்தா யார்? கொள்ளுத்தாத்தா யார்? அவர்கள் எப்படியிருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள்? என்றெல்லாம் நாம் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம் இல்லையா, ஏன் ஆசைப்படுகிறோம்? நம்முடைய வம்சத்தின் பெருமைகளையும், சிறப்புகளையும் நாம் அறிந்துகொள்ளவும் நம்முடைய குழந்தைகளுக்கு அதைச் சொல்லிக்கொடுக்கவும்தான்; நாம் எப்படிப்பட்ட குடும்ப வரலாற்றைக் கொண்டிருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக்கொள்ளத்தான்; நம் குழந்தைகளுக்கு அதை நினைவுபடுத்தி அவர்கள் சிறப்பாக வாழவேண்டும் என்று சொல்லித்தரத்தான். இதற்காகத்தான் நம் கிறிஸ்தவ வம்ச வரலாறான பழைய ஏற்பாடும், அப்போஸ்தலருடைய நடபடிகள் நூலும் வேதத்தில் தரப்பட்டிருக்கிறது. அவையில்லாமல் கிறிஸ்தவம் உருவாகவில்லை; உருவாகியிருக்கவும் வழியில்லை. அப்படியிருக்கும்போது முதல் நூற்றாண்டுக்குப் பிறகு நடந்த கிறிஸ்தவ வரலாற்றை நாம் எப்படி அறிந்துகொள்ளாமல் கிறிஸ்தவர்களாக வாழ முடியும்?

Reformers

இந்த வருட ஆரம்பத்தில் என்னுடைய மூதாதையர்கள் வாழ்ந்த ஊருக்குப் போய்வர வேண்டும் என்ற ஆசை எனக்குள் ஏற்பட்டது. எப்படியோ அதற்காக நாட்களை ஒதுக்கி அந்த ஊரைக் கண்டுபிடித்துப் போய் பார்த்தேன். ஊருக்குள் நுழையுமுன்பே ஒரு சிறுபிள்ளையைப் போல நான் மாறிவிட்டேன். எவ்வளவோ காலத்துக்குப் பிறகு நான் ஓடியாடி விளையாடிய ஊருக்குள் நுழையப்போகிறோமே என்ற ஓர் உணர்வுதான் என்னை அப்படியாக்கியது. ஊரில் ஒருவருக்கும் உங்களைத் தெரிந்திருக்க வழியில்லை என்று என் தம்பி என்னை எச்சரித்திருந்தான். ஊருக்குள் நுழைந்தவுடன் முதல் ஆளே என்னைப் பார்த்து ‘நீங்கள் அவர் மகனா’ என்று கேட்டது என்னை அதிர வைத்தது. ஊருக்குள் என் தந்தை எந்த நிலையில் இருந்திருக்கிறார் என்பதையும் அது காட்டியது. ஊரைச் சுற்றி நடந்து வீடுகளையும் அங்கிருந்தவர்களையும் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். சிலர் என்னை அழைத்து காப்பி சாப்பிடச் சொன்னார்கள்; ஒருநாள் இருந்துவிட்டுப் போகச் சொன்னார்கள். அவர்களுடைய அந்த அப்பட்டமான எளிமையான அன்பு என்னைத் தொட்டது. அந்த மண்ணை மிதித்து, தெருவெல்லாம் நடந்து, அந்த ஊர் மக்களோடு பேசி, அங்கிருந்த வீடுகள் சொன்ன கதைகளையெல்லாம் கேட்டபோது எனக்குள் விபரிக்க முடியாத உணர்வுகள் ஏற்பட்டன. இந்த மண்ணோடு சம்பந்தப்பட்டவன் என்ற பெருமையும் ஏற்பட்டது. நம் வரலாற்றைச் சொல்ல நமக்கென்று ஒரு மண்ணிருக்கிறது என்ற உணர்வே என்னைப் புல்லரிக்கச் செய்தது. சாதாரண இந்த உலக அனுபவங்களே நம்மை அசைத்து நமக்குள் இத்தனைப் புல்லரிப்பை ஏற்படுத்தும்போது நாம் விசுவாசிக்கும் கிறிஸ்து இந்த உலகில் ஏற்படுத்திய திருச்சபை வரலாறு விசுவாசிகளான நமக்குள் எத்தனை பெரிய உணர்வுகளை ஏற்படுத்தும் தெரியுமா? ஆபிரகாம், மோசே, தாவீது, சாலமோன், பவுல், பேதுரு மட்டுமல்ல லூத்தர், கல்வின், லத்திமர், ரிட்லி, டின்டேல், விஷ்சார்ட், நொக்ஸ், சுவிங்லி, கொலிக்னி போன்ற நம் தாத்தாக்களையும், கொள்ளுத் தாத்தாக்களையும் பற்றி நமக்குத் தெரியாமலிருப்பது எப்படித் தகும்? நம் பூர்வீகம் தெரியாமல், பூர்வீகமே இல்லாதவர்கள்போல அரைகுறை கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பது எப்படிச் சரியாகும்?

‘ஊர் பேர் தெரியாதவன்’ என்று ஒருவர் நம்மினத்தில் பெயர் வாங்கினால் அது அந்த மனிதனுக்கு மரியாதைக் குறைவானது. ‘ஊர் பேர் தெரியாத’ கிறிஸ்தவர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருப்பது இழுக்கு என்பதுகூட நமக்குப் புரியாமலிருக்கிறதே!

ஆர். பாலா