சிறு தியானம்

(For Leaders)

“அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்”. (2இராஜா 2:12)

எலியாவைக் குறித்து எலிசா புலம்பிய வார்த்தைகள் இது.

எலியா இஸ்ரவேலுக்கு “இரதமும் குதிரைவீரருமாய்” இருந்தான் என்பது, தேவனுடைய சபைக்கு “பாதுகாப்பாகவும் பராக்கிரமசாலியாகவும்” எலியா இருந்தான் என்பதை நமக்கு தெரிவிக்கிறது.

எலிசாவுக்கோ நல்லதொரு தலைவனாய் எலியா இருந்தான் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.

ஆனால் எலியா பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகையில் இந்த எலிசா, “என் தலைவனே என் தலைவனே” என்று புலம்பவில்லை. மாறாக, “என் தகப்பனே என் தகப்பனே” என்று புலம்பினான்.

எலிசாவுக்கு ஒரு தலைவனாக மட்டுமல்ல, ஒரு தகப்பனாகவும் தன்னைக் காண்பித்துள்ளான் இந்த எலியா.. எனவேதான், தலைவன் போய்விட்டான் அவனது ஸ்தானம் தனக்கு கிடைக்கப் போகிறது என ஆனந்தம் கொள்ளவில்லை இந்த எலிசா. தன் தகப்பனாக இருந்தவனை இழந்த துக்கத்தினால் புலம்பி அழுதான் இந்த எலிசா.

நல்லதொரு தலைவன், நல்ல தகப்பனாகவும் ஜொலிப்பான்.

நல்ல தலைவன் என்பவன், பிறருக்கு “நல்ல வழியைக்” காண்பிப்பான். ஆனால் நல்ல தகப்பனோ, தன் வாழ்க்கையையே பிறருக்கு “நல்ல வழியாக” அமைத்திடுவான்.

“கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே” (1கொரி 4:15)

தகப்பனுடைய இருதயமுள்ள தலைவர்களாய் எழும்பிடுவோம்.. நம்மைவிட தேவனுக்காக பற்றியெரியும் சந்ததியை பூமிக்குத் தந்திடுவோம்.

பாஸ்டர். ரீகன் கோமஸ்
Pastor Reegan Gomez