வித்தியாசாமான போதகர்: புற ஜாதியாரிடம் காணிக்கை வாங்கவில்லை!

1975 ம் ஆண்டு, திருச்செந்தூரில் தென்னிந்தியத் திருச்சபையின் கமிட்டியார் சபைக் கட்டிடத்தை இடித்து புதிய ஆலயம் கட்ட தீர்மானம் இயற்றி, பழைய ஆலயத்தையும் அதன்படி இடித்து விட்டனர். ஆனால் அதற்குள் புற மதத்தினர் வழக்கு மன்றத்தில் இந்த ஆலயத்தை கட்ட முடியாதபடி வழக்கு தொடர்ந்து அது உயர் நீதிமன்றம் வரைச் சென்றது.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது திருச்செந்தூரின் அருகில் உள்ள காயாமொழி என்ற கிராமத்தைச் சார்ந்தவரும், தினத்தந்தி செய்தி தாள் நிறுவனரின் இரண்டாவது மகனுமான இராமச்சந்திர ஆதித்தன் எழுத்து வழியாக கிறிஸ்தவ ஆலயம் புதுப்பிக்கப் பட இருக்கும் இடம் அவர்களுக்கே சொந்தமானது என்றும், மெஞ்ஞானபுரத்தில் அருட்பணியாளராகப் பணிபுரிந்த ஜான் தாமஸ் ஐயரால் வாங்கப் பட்டது என்றும் உறுதியளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதியரசர்களும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து கிறிஸ்த்தவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தாராம்.

எனவே, இந்த ஆதித்தனாருக்கு நன்றி சொல்லும் படியாக சென்னையிலுள்ள அவரது இல்லத்திற்கு சபையின் போதகர் டேவிட் பால்ராஜ் தலைமையில் சபை கமிற்றியார்கள் சென்றனராம். ஆதித்தனாரும், அவர்களை அன்புடன் வரவேற்று விருந்து அளித்து முடிவில் அந்த ஆலயத்தைக் கட்டுவதற்கான செல்வினத்தை வினவினார். போதகரும் ஏறக் குறைய 7 இலட்சம் ஆகும் என்று சொன்னாராம். உடனே ஆதித்தனாரும் தம் தனிச் செயலரை அழைத்து அதற்கான காசோலையைக் கொடுக்கச் சொன்னாராம். போதகரோ அதனை மறித்து, ‘எங்கள் வேதாகமத்தில் 3 யோவார் 7ம் வசனத்தில் புற ஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் புறப் பட்டுப் போனார்கள் என்று எழுதியிருக்கின்றது. எனவே நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவராக மாறினீர்கள் என்றால் இந்தப் பணத்தை வாங்கிக் கொள்ளுகின்றோம்’ என்று துணிச்சலாகப் பதிலளித்தாராம். ஆதித்தனாரோ இவ்விதமான கிறிஸ்த்தவரை நான் பார்த்ததில்லை என்று வியப்போடு சொன்னாராம்.

இன்று காசே தான் கடவுள் என்று கிறிஸ்தவ சபைகளும், தலைவர்களும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தப் போதகரைப் போன்ற பினகாஸ்கள் திறப்பின் வாயிலில் நிற்க மாட்டார்களா? எனது உறவின் முறை என்றும், எனது ஜாதிக்குப் பாத்தியப் பட்டவர்கள் என்றும், எனது பங்காளி என்றும் சொல்லிக் கொண்டு திருச்சபையின் வளர்ச்சிக்கான பணங்களை யாரிடமிருந்து நாம் பெறுகின்றோம்? இதனால், நாம் கிறிஸ்த்துவின் உறவிலிருந்தும், அவருடைய பரிசுத்த ஜாதி யென்ற தகுதியிலிருந்தும், இயேசுக் கிறிஸ்த்துவின் உடன் சுதந்திரர் என்ற தகுதியிலிருந்தும் நீக்கப் பட்டிருக்கின்றோம் என்பதை அறிவோமா?

தேவனுக்குப் பிரியமல்லாத முறையில் ஜெபக் கோபுரங்கள் கட்டி விடலாம். அந்த ஜெபங்கள் தேவனுடைய சந்நிதிக்கு வந்து சேராது. அழகான ஆலயங்களைக் கட்டி நேர்த்தியாகப் பாடல்களைப் பாடலாம்; ஆனால் அவை தேவனுடைய காதிலே அலறல்களாக மாறும். உணர்ச்சிப் பட ஆராதனைகளை ஏறெடுக்கலாம். ஆனால், அதிலே தேவனுடைய மகிமையையும், அவருடைய பரிசுத்த அக்கினியையும் கொண்டு வராது.

நமது தேவன் பட்சிக்கின்ற அக்கினியாய் இருக்கின்றார்.

…படித்ததில் பிடித்தது…