
திருச்சபைகள் ஆயிரங்களாக பெருகட்டும் என்பது தான் எனது இதயம் கனிந்த விருப்பமும் ஜெபங்களும் ஆகும். ஒரு மரத்தில் கிளைகள் இருக்க வேண்டும் அது தவறல்ல ஆனால் அவைகள் இடறலுக்கு ஏதுவாக இருக்குமென்றால் வெட்டப்பட வேண்டும் என்பது நியதி.
பல திருச்சபைகள் மற்றும் பல ஊழியக்காரர்கள் மாம்சத்தின் படி தீர்மானம் செய்து எப்படியாவது நூறுக்கும் மேற்பட்ட கிளை சபைகளை ஸ்தாபித்து விடவேண்டும் என்ற பெயரில் தங்களுக்கு இருக்கும் பணபலத்தை கொண்டு ஏற்கனவே திருச்சபை மற்றும் ஊழியங்கள் நடைபெறும் கிராமங்களில் அல்லது மற்ற திருச்சபையின் அருகிலேயே இடம் வாங்கி ஆலயம் கட்டி அதில் ஒரு ஊழியக்காரர் குடும்பத்தை வைத்து அமர்க்களமாக தலைமை சபை விசுவாசிகளை பஸ் மற்றும் கார்களில் கொண்டு வந்து சாப்பாடு போட்டு பிரதிஷ்டை செய்து விட்டு போய்விடுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் தவறான ஊழியம் ஆகும்.மற்ற ஊழியங்களுக்கு இடறலாக இருக்கும் படி பரிசுத்த ஆவியானவர் இப்படி ஒரு நாளும் நடத்த மாட்டார். காரணம் அவர் ஒழுங்கின் ஆவியானவர்.
இன்னும் ஒரு தவறு செய்கிறார்கள் அது என்னவென்றால் தங்கள் திருச்சபையில் நல்ல தசமபாகம் காணிக்கை கொடுக்கும் விசுவாசிகள் தங்கள் பணியினிமித்தமாகவோ அல்லது தொழில் வேலையின் நிமித்தமாகவோ இடம்பெயர்ந்து பட்டணங்கள் மற்றும் நகரங்களுக்கு செல்லும் போது போதகர்கள் தசமபாகம் மற்றும் காணிக்கையின் மேல் இச்சை கொண்டு இடம் மாறுதலாகி போகும் விசுவாசிகள் வீடுகளிலோ அல்லது அவர்கள் குடியிருக்கும் வீடுகள் அருகிலோ ஒரு கிளை சபையை ஆரம்பித்துவிடுகின்றனர். இவர்கள் அருகில் உள்ள சபை மற்றும் ஊழியர்களை பற்றி கவலைபடுவதே இல்லை. இதுவும் மிகப்பெரிய இடறலாகவே அமைந்துவிடுகிறது.
எங்கே எதிர்ப்புகள் அதிகமாக உள்ளதோ எங்கே ஊழிய வாடையே இல்லையோ எங்கே சபைகள் இல்லையோ அந்த மாதிரியான இடங்களில் ஊழியக்காரர்கள் தேவ சித்தத்தின்படியும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் பேரிலும் கிளை சபைகளை ஸ்தாபிக்கலாம். அதை விட்டு விட்டு ஏற்கனவே இருக்கும் சபைகளுக்கும் ஊழியர்களுக்கும் இடறலாகவே ஆரம்பிப்பீர்கள் என்றால் கழுத்தில் எந்திரக்கல்லை கட்டி கடலில் ஆழ்த்தும் சமயம் அருகில் உள்ளது என்பதை மறந்து விடவேண்டாம்.
David Livingston