வேர்த்தால்  விசிறி உதவுகிறது,
விசிறிக்கே வேர்த்தால் என்ன செய்வது?
 
வாசகங்கள் வேடிக்கையாக இருக்கலாம்.
அநேகருக்கு அப்படி அமைந்துவிடுகிறதே! 

அநேகருக்கு விசிறிகள் உண்டு (Fans),
அதாவது ரசிகர்கள் உண்டு.
தலைவனுக்குத் தொண்டன் விசிறி,
தலைவனுக்கு வேர்த்தால் தொண்டன் விசுறுகிறான்,  தொண்டனுக்கு வேர்த்தால்,
தலைவன் விசுறுவானா? விசும்புவானா?


வேர்க்க வேர்க்க வேலை செய்யாத
அனைவருக்கும் வியாதி வருகிறது.

வியாதியிலிருந்து தப்பித்துக்கொள்ள,
வேர்க்கும்வரை காலையிலும்
மாலையிலும் வாக்கிங் மற்றும்
ஜாக்கிங் போகிறார்கள்.
 
நீங்கள் யாருக்கு விசிறி?

உலகில் தங்களுக்கு விசிறிகள்
உண்டாக வேண்டும் என்று
விதவிதமான ஜாலங்களை காட்டும்
மாயை நிறைந்த உலகம் இது. 

அரசியலில் இது அதிகம்.
ஆன்மீகமும் இப்போது அதை
கற்றுக்கொண்டு வருவது

ஆபத்தான காரியமே.

ஆண்டவரால் படைக்கப்பட்ட
ஆதிமனிதன் ஆதாம்,
வேர்வையற்ற உயர்ந்த
வாழ்க்கை வாழ்ந்தான்.


ஆனால் அவனே, ஆண்டவரின்
வார்த்தைக்குக் கீழ்படியாதபோது 
சாபம் அவனை ஆட்கொண்டது. 
உன் முகத்தின் வேர்வையால்
ஆகாரம் புசிப்பாய்’’
என்று
தேவன் கூறினார் (ஆதியாகமம் 3:19).

மனிதன் ஏதேனைப் பண்படுத்தும்போது
அவனுக்கு வேர்க்கவில்லை.

ஏதேனுக்கு வெளியே அவன்
உழைக்கும்போது வேர்வை சிந்த நேரிட்டது

வேர்வை, உழைப்பிற்கு
அடையாளமாகவும் காணப்படுகிறது.
உழைப்பவனுக்கு வியர்க்கிறது.
வியர்வை வெளியேறினால் சரீரம்
களைத்துப்போகிறது.
மனிதன் சோர்வுக்குள்ளாகிறான்.

உடல் வேர்த்தால் விசிறி இருக்கிறது.
உள்ளம் வேர்த்தால்? 
இது என்ன கேள்வி! 
மனதிற்கு வேர்க்குமா?


மன உளைச்சல் மனச்சோர்வை
உண்டுபண்ணுகிறது.
உடலுக்கு வரும் வேர்வையைக் காட்டிலும்
உள்ளத்திற்கு வரும் வேர்வையைத்
தாங்காது தத்தளிக்கும் மக்கள்தான் ஏராளம்.

வருத்தப்பட்டுப் (பாவப்) பாரம்
சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும்
என்னிடத்தில் வாருங்கள்
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்
என்று ஆண்டவர் இயேசு கூவி அழைக்கிறார் . 

பாவப் பாரம்  மனிதனின் மனதை அழுத்த,
அவன் மனம் வேர்க்கிறது. 

களைப்பும் சோர்வும் 
அவனை ஆட்கொள்கிறது.
அவன் இளைப்பாறுதலைப் 
பெற்றுக் கொள்ளும்படியாய்
ஆண்டவர் அவனுக்காக என்ன செய்தார்?

தெரிந்து கொள்ள வேண்டுமா?

இயேசு நம்முடைய பாடுகளை
ஏற்றுக்கொண்டு நம்முடைய
துக்கங்களைச் சுமந்தார்.
சமாதானத்தை உண்டுபண்ணும்
ஆக்கினை அவர்மேல் வந்தது
(ஏசாயா 53:5).
அவர் ஆத்துமா மரணத்திற்கு
ஏதுவான துக்கம் கொண்டிருந்தது. 
அவர் மிகவும் வியாகுலப்பட்டு 
அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்.  

அவருடைய வேர்வை இரத்தத்தின்
பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. 
அவருக்கு உடல் உழைப்பால்
வந்த வியர்வையைக் காட்டிலும் அதிகமாக, 
நம்முடைய ஆத்தும மீட்பிற்காக
அவரின் உள் மனம்  நெருப்பாய்
கனன்று சரீரத்தில் இரத்த வேர்வை
சிந்தினார். 

இவை எல்லாம் யாருக்காக?
நமக்காக. நமது ஆத்துமாவுக்காக. 
உன் மனம் வியர்க்கக்கூடாது  என்பதற்காக.  
இப்படிப் பாரப்படுகிற, விசாரிக்கிற 
ஒரு தலைவன் உனக்கு உண்டா?

ஊழியம் கொள்பவர்களுக்கு ,
அதாவது ஊழியம் செய்யாமல்
ஊழியத்தைப் பணம்கொடுத்து
விலைக்கு வாங்குபவர்களுக்கு

வியர்க்காது. 

சபை என்ன விலை?
என்று கேட்கிறவர்களும்,
இடத்தோடு சபையை விலைகொடுத்து
வாங்குகிறவர்களும் பெருகிவிட்டார்கள்.
இதற்குப் பெயர், 
ஊழியம் கொள்வது (Purchase). 

ஊழியம் செய்வதற்கே இயேசு வந்தார்.
உலகில் இருக்கையில்
அவர் உயர்ந்த இடத்தில்
தன் இருக்கையைப் போடவில்லை.
மக்களின் உள்ளத்தில்
இருக்கையைப் போட்டார்.

தாழ்ந்தவர்களின் கால்களைக் கழுவினார்.
அதன்மூலம் தன் தாழ்மையை வெளிப்படுத்தி,
நமக்கு முன்மாதிரியைச் செயலில் காண்பித்தார்.

வேர்ப்பவர்களுக்கு அவர் விசிறி. 
அந்த விசிறிக்கும் இரத்த வேர்வை

உனக்கு ஆத்தும இளைப்பாறுதலைத்
தரும்படியாகவே!

முரசுக் கட்டிலில் படுத்துறங்கிய
முதிய வீரனுக்கு வெஞ்சாமரம் வீசிய
தலைவனின் பண்பாடு
உள்ள
தமிழ் வரலாறு. நீ படித்திருப்பாய். 

இன்றைக்கு அனேகத் தலைவர்கள்
உன் வேர்வையால் இளைப்பாறுகிறார்கள். 
அவர்களுக்கு விசிறியாய்  இருப்பதில் 
உனக்கு ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை.

சிந்திக்க வேண்டுகிறேன்

உனது தலைவன் இயேசு ஒருவரே.
ஆண்டவருக்கு மட்டும் விசிறியாக இரு. 

வேறு யாருக்கும் விசிறியாகாதே.

அவர்களுக்கு விருப்பமில்லாவிட்டால்
உன்னை விசிறி எறிந்துவிட,  
அதாவது  தூக்கி எறிந்துவிடத்
தயங்கமாட்டார்கள்.
 

இயேசுவே உனக்கு இளைப்பாறுதல். 
அவரே உனக்குக் கிச்சிலி  மரத்தின் நிழல்.

அவர் உன்னைத் தாங்குவார், 
ஏந்துவார், சுமப்பார், தப்புவிப்பார் .
உன் முகத்தின் வேர்வையைத் துடைத்து, 
உன் களைப்பை நீக்கி உன்னை
உற்சாகப்படுத்துவார்.

நீ தொடர்ந்து உழைத்துக் கொண்டிரு.
உழைப்பை விட்டுவிடாதே. 
நீ களைத்து வியர்த்தால் 
உன் அருகில் இயேசு உண்டு
என்பதை மறந்துவிடாதே.

உனது தலைவன் இயேசு ராஜன்.
அவரது மார்பில் சாய்ந்து மகிழ்ந்திரு.

இளைப்பாறுதல் தரும் தேவன் 
களைத்துப்போயிருக்கிற
உன்னைத் தேற்றுவார். 
சிலுவை நிழல் உன் தஞ்சம்.
சுகமாய் அங்கு தங்கி,
அவர் வரும் வரை
உழைத்துக்கொண்டிரு,
ஊழியம்செய்துகொண்டிரு.


வேதத்தை வாசித்து, விசுவாசித்து
உபவாசித்து முன்னேறிக்கொண்டிரு.
ஜெபித்து ஜெயமெடு.

மறந்தும் நீ யாருக்கும்
விசிறியாகிவிடாதே!
பின்னர் உன்னை விசிறி எறிந்தவுடன்

விசுவாசத்தைவிட்டு விலகிவிடாதே

நீ
உன்னை அழைத்தவருக்கே சொந்தம். 

உன்னை விசாரிக்கும் அவருக்கே
விசிறியாயிரு!

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
போதகர் | எழுத்தாளர்

ஆசிரியர்:
வழிப்போக்கனின் வார்த்தைகள் (பாகம் 1) 

தொகுப்பு:
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்
ஐயர்பங்களா, மதுரை -14