பிரபல வேத ஆராய்ச்சி நூலை எழுதிய தமிழ் வேதாகம அறிஞர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

பிரபல வேத ஆராய்ச்சி நூலை எழுதிய தமிழ் வேதாகம அறிஞர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

தமிழ் கிறிஸ்தவ உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் வேதாகம ஆய்வு புத்தகத்தை எழுதிய தமிழ் வேதாகம அறிஞர். டாக்டர். ஆல்ஃபிரட் தேவதாசன் (Dr. Alfred Devadason ) அவர்கள் 25 ஆகஸ்ட் 2021 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். 1943 ம் ஆண்டு ஜனவரி 9 அன்று பிறந்த அவருக்கு வயது 78.

ஆரம்ப காலங்களில் பிரபலமான பல கல்லூரிகளில் கணித பேராசிரியராகவும், அரசு சார்ந்த தலைமை ஆசிரியராகவும் சிறப்புடன் பணி செய்தார். பி.எச்டி பட்டம் பயின்ற இவர் கல்விப்பணி, சமூகப்பணி, இறைப்பணி, இலக்கியப்பணி என்ற நான்கு பணிகளை மிக நேர்த்தியாகவும், பலர் கண்டு ஆச்சரியப்படும் வண்ணமாகவும் தேவ கிருபையினால் நிறைவேற்றினார். இவர் ஒரு சிறந்த இறையியல் அறிஞர். இவரது வாழ்வியல் விளக்க வேதாகமம் (Vazhviyal Vilakka Vedhagamam) என்னும் தமிழ் வேதாகம ஆராய்சி நூல் இன்று இந்தியாவில் பல முறை அச்சடிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது. 2007ம் ஆண்டு வெளிவந்த இப்புத்தகமானது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்றால் மிகையாகாது.

பல வேதாகம கல்லூரிகளில் இவர் எழுதிய பல புத்தகங்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பல தரமான பயிற்சி நூல்களை இவர் எழுதியுள்ளார். குறிப்பாக நற்செய்தி பணி செய்வது எப்படி?, இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுவது எப்படி?, வேதத்தை தியானிப்பது எப்படி? போன்ற புத்தகங்கள் மிக புகழ்பெற்றவையாகும். இவரது வாழ்வியல் விளக்க வேதாகமத்தை இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் ஸ்தாபகர் சகோ. மோகன் சி லாசரஸ் (Mohan C Lazarus) அவர்கள் தனது நிகழ்ச்சிகளில் அதிகமாக இது பற்றி விளக்கி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013 வருடம் அவரது சரீரத்தில் மூளை பகுதியில் ஏற்பட்ட பெலவீனத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டார். மருத்துவர்களின் கண்காணிப்பில் கடந்த 8 வருடங்களாக வைக்கப்பட்டிருந்த இவர், இந்த மாதம் ஆகஸ்ட் 25ம் தேதி கர்த்தருடைய ராஜ்யத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். (25.08.2021) இவரது இழப்பு தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு மாபெரும் இழப்பாகும். இன்று இவர் மறைந்தாலும் இவரது படைப்புகள் காலத்தால் மறையாதது. ஆம், மரித்தும் நம்முடன் பேசுகிறார் என்ற தேவ வார்த்தைக்கு பொருத்தமானவர்.

இவரது மனைவியின் பெயர் திருமதி ரூபி ஆல்ஃபிரட். இவர்களுக்கு திருமணமான மகள்கள் மல்லிகா எபினேசர், ஸ்வீட்டி ராஜகுமார், மக்தலீன் சாம் ஜான் ஆகியோர் உண்டு. மேலும் இவருக்கு ஐந்து பேரக்குழந்தைகள் உண்டு. இவர்களின் மன ஆறுதலுக்காகவும், ஊழியங்களுக்காகவும் நாம் அதிகம் ஜெபிக்க கடமைப்பட்டுள்ளோம்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி