
கர்த்தர் அனுப்பிவைத்த கரடிகள்! (வித்யா’வின் பார்வை)

(2 இராஜாக்கள் 2:23,24)
இயேசுவுக்கு நிழலாட்டமாக
இருந்தவர் எலிசா
விவசாயி, பணியாள், தீர்க்கதரிசி
எனப் பல பரிமாணங்களை உடையவர்.
போவாஸ் போல ஏராளமான
ஏக்கர்களுக்கு சொந்தக்காரர்.
ஆபேல் மெக்கல்லா (1 இராஜாக்கள் 4:12)
என்ற ஊரைப் பிறப்பிடமாகவும்,
உறைவிடமாகவும் கொண்டு
விவசாயத்தில் வேரூன்றியிருந்தவர்.
வயலில் பன்னிரெண்டாம் ஏரை
ஓட்டிக்கொண்டு உழைப்பிலும்
விதைப்பிலும் அறுப்பிலும்
மும்முரமாக ஈடுபட்டிருந்த எலிசாவை
பரலோகம் பார்த்துக்கொண்டே இருந்தது
பக்தியுள்ளவனைத் தமக்காக
தெரிந்து கொள்கிற கர்த்தரின் கண்கள்
எலிசாவைத் தெரிவு செய்தது (சங்கீதம் 4:3).
சர்வ வல்லவரின் உத்தரவு கிடைத்தவுடன்
சாமுவேல், ஈசாய் வீட்டுக்கு,
கொம்பு தைலத்தைக்
கொண்டு போனது போல,
கர்த்தரின் கட்டளை கிடைத்ததும்
சால்வையை எடுத்துக் கொண்டு
சாப்பாத்தின் குமாரனை சந்திக்கப்
புறப்பட்டுவிட்டார் எலியா.

எடுபிடியாக ஊழியம் செய்ய
சம்மதித்த செல்வந்தரான எலிசாவை,
சீஷனாக உயர்த்தி,
இறுதியில் தீர்க்கதரிசிகளின்
தலைவனாகக் கர்த்தர் மாற்றி,
எலியாவை விட இரண்டு மடங்கு
அற்புதங்களை இவர் மூலமாய் செய்தார்.
அழைக்கப்பட்ட எலிசா
தான் உழுதுகொண்டிருந்த
ஏர் மாடுகளைப் பிடித்து,
அடித்து ஏரை உடைத்து
இறைச்சியை சமைத்து (Beef Biryani)
ஜனங்களுக்குக் கொடுத்து
உள்ளூர் ஜனங்களை போஷித்துவிட்டு
ஊழியத்திற்கு புறப்பட்டுவிட்டார்.
இதற்குப்பின் ஊரையும் ஏரையும்
இறுதிவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை.
எலிசாவின் பெயர்
புதிய ஏற்பாட்டிலும்
குர்ஆனிலும் இடம்பெற்றுள்ளது (Al – Yasa).
எலிசாவை அபிஷேகம் செய்த
தலைமை தீர்க்கதரிசியான எலியா
கடுமையான பிரதிஷ்டை க்காரர்.
எலிசாவை பிரதிஷ்டை செய்துவிட்டு
எட்டு ஆண்டுகளுக்குப் பின்
அக்கினி இரதத்தில் ஏறி
ஆகாய மண்டலத்திற்குள்
நுழைந்து பரலோகம் சென்றதை
தன் கண்ணால் கண்டவர் எலிசா!
பெத் என்றால் இரண்டு என்று பொருள்
பெத்தேல் சிலை வழிபாடுகள்
நிறைந்த இடம்
அங்கிருந்து சில வாலிபர்கள்
புறப்பட்டு எலிசாவுக்கு
எதிரே நடந்து வந்தார்கள்
எலியாவைப் பார்த்து
ஏறிப் போ, ஏறிப் போ,
என்று ஏளனம் செய்தவர்கள்
இதுபோன்ற வாலிபர்களே.
அதேபோல எலிசாவையும்
அவரது தோற்றத்தையும்
பார்த்து மொட்டைத் தலையா ஏறிப் போ
மொட்டைத் தலையா ஏறிப் போ
என்று நிந்தித்தார்கள்.
கர்த்தரையும் அவரது
தீர்க்கதரிசிகளையும் கண்டபடி பேசி,
ஏளனம் பண்ணினவர்களை
கர்த்தரின் கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன.
தன்னை நிந்தித்த பிள்ளைகள்,
இல்லை இல்லை , வாலிபர்கள்
தன்னைவிட்டுக் கடந்து போனபின்
எலிசா அவர்களைத் திரும்பிப் பார்த்து
கர்த்தரின் நாமத்தில் சபித்தார்.
கரடிகளை அனுப்பும் கர்த்தாவே,
குளவிகளை அனுப்பும் ஆண்டவரே,
அக்கினியை அனுப்பி அழித்துப்போடும் தேவா
என்றெல்லாம் எலிசா ஜெபிக்கவில்லை.
சபித்த இரண்டே வினாடிகளில்
இரண்டு கரடிகளை கர்த்தர்
சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்தார்.
ரவுடிகளை (சாரி) கரடிகளை
கண்ட மாத்திரத்தில்
காட்டுக் கழுதைகளைப் போல
தலைதெறிக்க ஓடின
வாலிபர்களில் 42 பேரை துரத்திப்பிடித்து
துவம்சம் பண்ணி பீறிப்போட்டுவிட்டு
கரடிகள் ஊழியத்தை முடித்துவிட்டு
காட்டுக்குத் திரும்பின.
தரைமட்டத்திலிருந்து உயரத்தில் நடந்த
இந்தத் துயரச் சம்பவத்தை
2 இராஜாக்கள் 2:23-25 வரையுள்ள
வேத பகுதியில்
எரேமியா எழுதிவைத்திருக்கிறார்.
தீனாளைத் தீட்டுப்படுத்திய
சீகேம் ஊர் ஆண்மக்கள்
அனைவரையும் சிமியோன் லேவி
இருவரும் அந்த இரண்டு கரடிகளைப் போல,
பாய்ந்து சென்று பழிவாங்கியது
நினைவிருக்கலாம் (ஆதி.34:25)
தாவீது தனியொரு ஆளாய்
கரடியை கொன்றார்.
எதிர்த்துவந்த சிங்கத்தையும் கொன்றார்.
இந்த இரண்டு விலங்குகளையும் கொன்று
மனித விலங்கான கோலியாத்தையும் கொன்று
வெற்றி வாகை சூடி அரசாங்கப் பணியில்
அமர்ந்துவிட்டார்
(1 சாமு. 17:34-36) (1 சாமுவேல் 18:2)
அன்றைக்கு சர்வீஸ் கமிஷன் தேர்வு
எதுவென்றால், கரடி, சிங்கம்,
கோலியாத்தைக் கொல்லுவது
இறுதியில் அரசாங்க பணி.
இரண்டு கரடிகளை
எதிர்க்க முடியாமல்
பீறிப்போடப்பட்டவர்களின்
எண்ணிக்கை 42. காரணம்,
இது கர்த்தர் அனுப்பிவைத்த கரடிகள்.
தாவீதுக்கு எதிராய் வந்த
கரடியும் சிங்கமும்.
எதிராளியான சாத்தான்
அனுப்பிவைத்தது.
தீர்க்கதரிசியை
நிந்திக்காமல்
சூனேமியாளைப் போல
சந்தித்திருந்தால் சூழ்நிலைகள்
மாறியிருக்கும் என்பதே
எனது கணிப்பு (2 இராஜாக்கள் 4:9)
எதிர்ப்புகளின் மத்தியில்
இயற்கைக்கு அப்பாற்பட்ட
பதினான்கு அற்புதங்களை
செய்து இன்றுவரை பேசப்படுபவர்
Former Farmer (முன்னாள் விவசாயி)
இந்தத் துயரச் சம்பவம்
நமக்கு எச்சரிப்புக்காக மட்டுமே
எழுதப்பட்டுள்ளது.
நாம் வாழ்வது புதிய ஏற்பாட்டின் காலம்.
எனவே தீமைக்குத் தீமையையும்
உதாசீனத்திற்கு உதாசீனத்தையும்
சரிக்கட்டாமல் அதற்குப் பதிலாக,
நீங்கள் ஆசீர்வாதத்தை
சுதந்தரித்துக்கொள்ளும்படி
அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று
அறிந்து ஆசீர்வதியுங்கள்
( 2 பேதுரு 3:9) என்ற
வேத வாக்கை முன்வைத்து ஓடுவோம்.
பழிவாங்குதல் எனக்குரியது,
நானே பதிற்செய்வேன் என்று
கர்த்தர் சொல்லுகிறார் (எபிரெயர் 10:30) என்று எழுதியிருக்கிறபடியால்,
நீங்கள் பழிவாங்காமல்,
கோபாக்கினைக்கு
இடங்கொடுங்கள் (ரோமர் 12:19).
கர்த்தருடைய கண்கள்
நீதிமான்கள்மேல்
நோக்கமாய் இருக்கிறது,
அவருடைய செவிகள்
அவர்கள் வேண்டுதலுக்குக்
கவனமாய் இருக்கிறது;
தீமை செய்கிறவர்களுக்கோ
கர்த்தருடைய முகம்
விரோதமாய் இருக்கிறது
(1 பேதுரு 3:12)

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவத்தண்ணீர் ஊழியங்கள், மதுரை -14