வேதாகமம் கூறும் மூன்று வீடுகள் !

வேதாகமம் கூறும் மூன்று வீடுகள் !

மூன்று வீடுகள்!

“இப்போதும், உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்” (1 நாளா. 17:27).

இங்கே நாம் தியானக்கவிருக்கும் மூன்று வீடுகள், நீங்கள் தங்கியிருக்கிற வீடு, தேவனுடைய ஆலயமாகிய வீடு மற்றும் பரலோகமாகிய வீடு ஆகியவையே.

முதலாவது, கர்த்தர் தாவீதை அவருடைய தாழ்விலிருந்து உயர்த்தி, இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணி, கேதுரு மரங்களால் செய்யப்பட்ட அரண்மனை வீட்டில் வாசம் பண்ணும்படி உதவி செய்தார். அந்த நிலையில் தன்னை தாழ்விலிருந்து உயர்த்தின கர்த்தரை தாவீது மறந்துவிடவில்லை. கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி திரைகளின் கீழாய் இருந்தது அவருடைய உள்ளத்துக்கு வேதனையைக் கொண்டு வந்தது.

வேதம் சொல்லுகிறது, “அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே வாசம் பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்” (1 நாளா. 17:1).

தனக்கு ஆலயம் கட்ட வேண்டுமென்ற வாஞ்சை தாவீதுக்கு இருப்பதைக் கண்டு கர்த்தர் மனமகிழ்ந்து தாவீதை நோக்கி, ‘நான் உனக்கு ஒரு வீட்டை கட்டுவேன். நீ உன் பிதாக்களிடத்திலே போக, உன் நாட்கள் நிறைவேறும்போது, நான் உனக்குப் பின்பு உன் புத்திரரில் ஒருவனாகிய உன் சந்ததியை எழும்பப் பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்’ (1 நாளா.17:11) என்று வாக்களித்தார்.

நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் குறித்து வைராக்கியமாய் இருக்கும்போது, கர்த்தர் உங்கள் வீட்டை நிச்சயமாகவே ஆசிர்வதிப்பார். கர்த்தர் உங்களுக்குள் வாசம் பண்ணுகிறார். உங்களுடைய சரீரமானது தேவனால் பெற்றும், தேவனுடைய ஆவியானவர் வாசம் பண்ணுகிற வாசஸ்தலமாகவும் இருக்கிறது. ஆகவே உங்கள் சரீரத்தை தேவனுடைய ஆலயமாய் ஒப்புக்கொடுப்பீர்களென்றால், கர்த்தர் உங்கள் வீட்டை ஆசீர்வதிப்பார். பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்.

இரண்டாவது, இது ஒரு ஆலயமாகிய வீடு ஆகும். தாவீதுக்கு கர்த்தருடைய ஆலயத்தின்மேல் அளவற்ற அன்பு இருந்தது. கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என்று சொன்னபோது, கர்த்தருடைய உள்ளம் மகிழ்ந்தது. கர்த்தருடைய ஆலயத்திற்கு செல்லும்போதெல்லாம் அது ஜெப வீடு என்பதை மறந்து போகாதேயுங்கள். அங்கே சகோதர ஐக்கியத்தைக் காண்கிறீர்கள். கர்த்தரைத் துதிக்கிற துதியைப் பாடுகிறீர்கள். கர்த்தருக்கு மனமார ஆராதிக்கிறீர்கள்.

மூன்றாவது, இது ஒரு பரலோக வீடு ஆகும். தாவீது ராஜா சொல்லுகிறார்: “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங். 23:6).

தேவபிள்ளைகளே, இந்த பூமியிலே யார்யார் தங்கள் சரீரத்தை கர்த்தர் தங்குகிற வீடாய் அவர் கையிலே ஒப்புக்கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு கர்த்தர் தன்னுடைய பரலோக வீட்டை நிச்சயமாகவே தந்தருளுவார்.

நினைவிற்கு:- “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” (பிலி. 3:20).