பிச்சைப் பாத்திரம் இரட்சிப்பின் பாத்திரமானது!

பிச்சைப் பாத்திரம் இரட்சிப்பின் பாத்திரமானது!

எரிகோவுக்குச் சமீபமாய்
இயேசுவானவர் வந்தபோது

விழிகளிருந்தும் பார்வையில்லாத ஒருவன்
வழியருகே உட்கார்ந்து
பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்

ஏமாற்றிப் பிழைப்பதைவிட
பிச்சையெடுத்துப் பிழைப்பதில்
பிழை இல்லை
என்பது அவனது அபிப்பிராயம்

ஆனால், அன்றைய தினம்
தன் காரியம் மாறுதலாய் முடியும் என்றோ
பிச்சைப் பாத்திரம் தூக்கியெறியப்பட்டு
இரட்சிப்பின் பாத்திரம் இலவசமாய்
வழங்கப்படும்
என்றோ
அவன் சற்றும் நினைத்துப்பார்க்கவில்லை
(லூக்கா 18:35-43)

வீதியில் உண்டான
ஜன சப்தம் கேட்டு
இதென்ன என்று விசாரித்தான்

இந்த அற்பமான கேள்வி
அவனது வாழ்க்கையை
அடியோடு புரட்டிப்போட்டுவிட்டது

இதென்ன சப்தம் என்று
கேட்காமல், வழக்கம்போல
அய்யா அம்மா பிச்சை போடுங்க
கண்தெரியாத பாவி நான் என்று
கண் தெரிந்த பாவிகளைப் பார்த்துக்
கேட்டிருந்தால் காலமெல்லாம்
கபோதியாகவே வாழ்ந்திருப்பான்

பிச்சைப் பாத்திரமே
பிரதான பாத்திரமாயிருந்திருக்கும்

அவனது சின்னக் கேள்விக்கு
நசரேயனாகிய இயேசு போகிறார் என்று
பதில் கிடைத்தது

நசரேயனாகிய இயேசுவா?
கிடைத்த பதிலைப் பிடித்துக்கொண்டு
சொற்போர் நடத்தி, முன் நடப்போரை
பின்னுக்குத் தள்ளி, தன்னைவிட்டு
கடந்து, நடந்து போய்விட்ட இயேசுவை
சொல்லால் நிறுத்திவிட்டான்

அவனது கூப்பாடு இயேசுவின் காதில்
விழுந்துவிட்டது
மனிதர்களின் கால்களில் விழுவதைவிட
தன் சத்தம் இயேசுவின் காதில்

விழுவதே மேல் என்று எண்ணிவிட்டான்

அந்த மாற்றுத் திறனாளியை
மாறி மாறி தடுத்துப் பார்த்தார்கள்
அவனோ  முன்னிலும் அதிகமாய்
இயேசுவை கூப்பிட்டான்

அதட்டுகிறவர்களும்
அலட்சியப்படுத்துகிறவர்களும்
கண்தெரிந்த குருடர்கள்
என்பது
அவனது கணிப்பு

காரணம்,
“குருடருக்குப் பார்வையைப்
பிரசித்தப்படுத்தவும்
நொறுங்குண்டவர்களை
விடுதலையாக்கவும்
அனுப்பப்பட்ட, அபிஷேகிக்கப்பட்ட
இயேசுவானவரை” (
லூக்கா 4:18)
நெருங்கவிடாமல் தடைசெய்கிறார்களே
இவர்களையல்லாமல் குருடர் யார்?

நொந்து நூலாகி, நொருங்கிப் போன
என் உள்ளத்தை நொறுக்குகிறார்களே,
பத்துப் பைசா போட முடியாதவர்கள்
தடையுத்தரவு போடுகிறார்களே!

பார்வையைச் சொந்தமாக்கி,
அதையே மூலதனமாக்கி,
உழைத்துவாழத் துடிக்கும்
என்னைப்  போன்ற
மாற்றுத் திறனாளிகளை
மட்டுப்படுத்த நினைக்கிறார்களே,

இந்த எரிகோவில் போடப்பட்ட
மனிதத் தடை உத்தரவை நான் மீறுவேன்
தாவீதின் குமரனே எனக்கு இரங்கும்
என்று சொல்லுவேன்
என்று உரக்கக் கூவி
தாவீதின் குமாரனை நிறுத்திவிட்டான்.

முன்னொரு நாளில்
சாறிபாத் ஊரில்
சாப்பிட்டு சாகப் போன விதவையை
கூப்பிட்டு குறைதீர்த்த

எலியாவின் தேவனை
அவன் அறிந்திருந்தானோ
என்னவோ? (1 இராஜாக்கள் 17:12-16)

ஏங்கித் தவித்தவன்
ஓங்கிக்
கூப்பிட்டு
இயேசுவின் அழைப்பைப் பெற்று
புதிய பார்வையைப் பரிசாக
பெற்றுக்கொண்டான்.

நடுவழியிலேயே அவனுக்கு
நல்வாழ்வைப் பரிசளித்து
ஒரு ஜோடிக் கண்களைப்
புதிதாக ஈந்தார் அற்புதர் இயேசு

அந்தப் புதிய கண்கள்
முதன் முதலாக
தடை செய்தவர்களையல்ல
புண்ணியரைப் பார்த்துப் பூரித்தன.

இயேசு, அந்த எரிகோ வீதியிலே
பயணத்தைச் சற்று நேரம் ஒத்திவைத்து
வீதியிலே விழா எடுத்து பாராட்டி,  
முறைத்துப் பார்த்தவர்களுக்கு
முறைப்படி பாடம் நடத்தினார் 

வீதியிலே கிடந்து பிச்சை எடுத்தாலும்
வறுமை வாட்டி வதைத்தாலும்
முன்நடப்பார் முறைத்துப் பார்த்தாலும்,

அந்த நாள் சூரியன் மறைவதற்குள்
நீதியின் சூரியன்
தன்னைவிட்டு மறைவதற்குள்
முடிவில்
அவசரகதியில் ஓர் முடிவெடுத்தானே,
அவன் நமக்கெல்லாம் முதல்வன்!

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்

ஐயர் பங்களா, மதுரை -14