
இயேசுவானவர் எருசலேமுக்குப்
பிரயாணம் போகையில்,
சமாரியா, கலிலேயா என்னும்
நாடுகளின் வழியே போனார்
(லூக்கா 17:11)
அவர் ஒரு கிராமத்திற்குள்
பிரவேசித்தார்.
அந்தக் கிராமத்தின் எல்லையில்
பத்துப் பேர் கொண்ட குழுவினர்
தலை முதல் பாதம்வரை
குஷ்டரோகத்தினால் பீடிக்கப்பட்டு
கூனிக் குறுகி நின்றுகொண்டிருந்தார்கள்.
இயேசுவைப் பார்த்த மாத்திரத்தில்
பத்துப் பேருக்கும்
ஒருமனம் வந்துவிட்டது.
நாம் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன்
ஒருமனம் வந்துவிடுவதுபோல!
ஒருமித்த குரலில்
பாடகர் குழுவினரைப் போல
இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும்
என்று சத்தமிட்டார்கள் (லூக்கா 17:13).
இயேசு, அவர்களைப் பார்த்து
நீங்கள் போய் ஆசாரியர்களுக்கு
உங்களைக் காண்பியுங்கள் என்றார்
Covid 19, இல்லை, இல்லை,
குஷ்டரோகம் Positive ஆக
இருந்த நிலை மாறி,
இயேசுவின் நாமத்தில்
Negative என்று வந்துவிட்டது.
இதை ஆசாரியர்கள் பார்த்து
ஓ கே சொன்னால்தான்
பாளயத்திற்குள் நுழையமுடியும்.
அதற்காகத்தான்
இயேசு வீட்டுக்கு போங்க
என்று சொல்லாமல்
ஆசாரியர்களிடம் போங்க என்றார்
அந்தப்படி அவர்கள் போகையில்
சுத்தமானார்கள்.
சத்தமிட்டவர்கள் அனைவரும்
சுத்தமானார்கள்
இது மிகப் பெரிய அற்புதம்?
தொழு நோயைத்
தொலைத்துக்கட்ட
கோடிகளை கொட்டி
இன்னமும் தேசங்கள்
போராடிக்கொண்டிருக்கும்போது
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்
தொழு நோய் வியாதியஸ்தர்கள்
சும்மா நடந்து போகையில்
சுகமானார்கள் என்றால்,
அது மாபெரும் அற்புதமாகும்.
நாற்றமெல்லாம்
காற்றோடு காற்றாக பறந்துபோனது.
முற்றிலும் மாறுபட்ட சரீரத்தோடு
ஒன்பது பேர் ஆசாரியனுக்கு
காண்பித்துவிட்டு
அவரவர் தன் தன்
வீட்டுக்குப் போய்விட்டார்கள்.
அந்த ஒன்பது பேரின்
எண்ண அலைகளைப் பாருங்கள்
ஆசாரியரிடம் போகச்சொன்னார்,
காணிக்கை கொடுக்கணும்
அவ்வளவுதானே,
திரும்பி வரச் சொன்னாரா?
அதான் அற்புதத்துக்கு காணிக்கை
கொடுத்தாச்சுல்ல,
வேலை முடிஞ்சுபோச்சு,
இனி வீட்டைப் பாத்தோமா,
குடும்பத்தைப் பாத்தோமா
என்று போகவேண்டியதுதான்
என்று பேசிக்கிட்டே
வீட்டுக்குப் போய்விட்டார்கள்.
அறுவை சிகிச்சைக்குப் பின்
சுய உணர்வு திரும்புவது போல,
ஒருவனுக்கு மட்டும்
உணர்வு வந்தது.
மனசு மாற்றம் கண்டது.
ஆசாரியருக்கு
காண்பிக்க சொன்னாரே,
இவர் பிரதான ஆசாரியர்தானே?
அப்படியானால் பிரதான ஆசாரியரிடம்
என்னைக் காண்பிப்பேன் என்று
சொல்லிக்கொண்டு,
இயேசுவை சந்தித்த
அதே இடத்திற்கு ஓடிவந்தான்.
என்ன ஆச்சரியம்?
அங்கே, அதே இடத்தில்,
இயேசு நின்றுகொண்டிருந்தார்.
அவரது கண்கள்
அந்த ஒன்பது பேரையும்
தேடிக்கொண்டிருந்தது!
அவர்களில் ஒருவன்
தான் ஆரோக்கியமானதைக் கண்டு
திரும்பி வந்து,
உரத்த சத்தத்தோடு
தேவனை மகிமைப்படுத்தி
அவருடைய பாதத்தருகே
முகங்குப்புற விழுந்து
அவருக்கு
ஸ்தோத்திரஞ்செலுத்தினான் .
அவன்
சமாரியனாயிருந்தான்
(லூக்கா 17:15,16)

பத்தில் ஒன்று,
தசம பாகம்போல
வந்திருக்கிறான்.
ஒருமனம் ஒற்றுமை ஐக்கியம் எல்லாம்
தீராத வியாதி இருந்தபோது
குடிகொண்டிருந்தது.
தலை முதல் பாதம் வரை
முற்றிலும் குணமானபோது,
அந்த ஒன்பது பேர்
சட்டம் படித்தவர்களைப் போல
முற்றிலும் மாறிவிட்டார்கள்.,
சிலர் சர்ச்சுக்கு வந்தபின்,
அற்புதம் நடந்தபின்,
சர்வாங்க சுகம் கிடைத்தபின்,
சட்டம் பேசுவார்கள்
அதுபோல,
முகத்தில் இருந்த குஷ்டம்
அகத்திற்கு இடம் மாறிவிட்டது
இருதயம் குஷ்டத்தினால்
சுருங்கிவிட்டது.
அவர்கள் தேவனை அறிந்தும்
அவரை தேவனென்று
மகிமைப்படுத்தாமலும்
ஸ்தோத்தரியாமலுமிருந்து
தங்கள் சிந்தனைகளினால்
வீணரானார்கள்
உணர்வில்லாத
அவர்களுடைய இருதயம்
இருளடைந்தது. அவர்கள் தங்களை
ஞானிகள் என்று சொல்லியும்
பயித்தியக்காரராகி…
என்று எழுதப்பட்டுள்ளது
(ரோமர் 1:21,22)
ஊரைவிட்டு ஒதுக்கி தள்ளப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட
இந்த குஷ்டரோகிகளை
இயேசு தமது ஒரே வார்த்தையினால்
குணமாக்கினார்.
சீலோவாம் குளத்தில் போய்
கழுவு என்று சொல்லவில்லை.
ஆசாரியனுக்கு உன்னை காண்பி
என்றுதானே சொன்னார்.
அந்த பத்துப் பேரில்
ஒருவனுக்கு மட்டுமே
குணமானபின்
உணர்வு திரும்பியது.
அந்த ஒன்பது பேரும்
இயேசுவை தங்கள்
சரீர நன்மைகளுக்காக
பயன்படுத்திக்கொண்டார்கள்
அந்த சமாரியனோ இயேசுவை
ஆத்தும இரட்சிப்பிற்காக
பயன்படுத்திக்கொண்டான்
அந்த ஒன்பது பேரும்
இயேசுவிடமிருந்து
ஆரோக்கியத்தை
எடுத்துக்கொண்டார்கள்
அந்த ஒருவனோ
இயேசுவை சந்திக்க
தீர்மானம் எடுத்துக்கொண்டான்
அந்த ஒன்பது பேருக்கும்
காண்பிக்க வேண்டும்
காணிக்கை செலுத்த வேண்டும்
என்பதில் உண்மை இருந்தது
அந்த ஒருவனுக்கு
தன்னையே
காணிக்கையாகப் படைக்க வேண்டும்
என்ற உணர்வு இருந்தது
அந்த ஒன்பது பேரும்
விட்டுவந்த வீட்டை நேசித்தார்கள்
அந்த ஒருவனோ
தொடாமல் சுகம் தந்த
இயேசுவை நேசித்தான்
அந்த ஒன்பது பேரும்
இயேசுவை ஒரு
கந்தை துணிபோல
பயன்படுத்திவிட்டு
தூக்கி எறிந்துவிட்டார்கள்
அந்த ஒருவனோ
இயேசுவின் பாதத்தில் விழுந்து
இரட்சிப்பின் வஸ்திரத்தைப்
பெற்றுக்கொண்டான்.
அந்த ஒன்பது பேரின்
நாக்கும் உலர்ந்துபோனது,
உணர்வு மழுங்கிப் போனது,
அந்த சாமானியனான
சமாரியனின் நாக்கும்
போக்கும் மாறிவிட்டது
ரூத்தின் உடன்பிறவா
சகோதரனான அவன்
இயேசுவின் பாதத்தில்
முகங்குப்புற விழுந்து
ஸ்தோத்திரம் செலுத்தினான்
அப்போது அவன் கையில்
“ஆயிரம் ஸ்தோத்திர பலி”
புஸ்தகம் ஏதுமில்லை!
தேவனை துதிப்பதும் ஆராதிப்பதும்
பலி செலுத்துவது போல
ஒரு ஊழியம்தான்
யூதாஸ் காரியோத்
அப்போஸ்தல பட்டத்தை
நழுவவிட்டதுபோல,
இந்த ஒன்பது பேரும்
இயேசுவின் பாதத்தைப்
தொட்டுப் பிடித்து
ஆராதிக்கும் பாக்கியத்தை
இழந்துபோனார்கள்.
தம்முடைய கையில் நமது சுவாசத்தை
வைத்திருக்கிறவரும் ,
நம் வழிகளுக்கெல்லாம்
அதிகாரியுமாக இருப்பவர் யார்?
தேவனே (தானியேல் 5:23)
நீங்களும் நானும் விசுவாசத்தைப்
பிடித்துக்கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறோம்.
தேவனோ, நம்முடைய சுவாசத்தை
தமது கையில் வைத்திருக்கிறார்.
அவரைப் பொறுத்தமட்டில்
ஆக்சிஜன் சிலிண்டர்
பற்றாக்குறை என்ற
பேச்சுக்கே இடமில்லை
அந்த ஒருவன் இயேசுவைப் பார்த்ததும்
சுகம் தந்தீரே நன்றி ஐயா என்று
அவர் பாதத்தில் விழுந்து
சில நிமிடங்கள்
அப்படியே சலனமற்று கிடந்தான்.
அவனைப் பார்த்து
இயேசு சொன்னார்
நீ எழுந்து போ, உன் விசுவாசம்
உன்னை இரட்சித்தது என்றார்
( லூக்கா 17:19)
மற்ற ஒன்பது பேரைப் பற்றி
இவனிடம் விசாரித்தார்.
வெற்றி பெற்றபின்
பத்து பேர் கொண்ட கூட்டணி
பலமாய் உடைந்துவிட்டது.
கூட்டணிகள் உடையும் காலம்
சமீபமாய் இருக்கிறது!!!
அந்த சமாரியனுக்கு
குஷ்டத்திலிருந்தும் விடுதலை,
பாவத்திலிருந்தும் விடுதலை.
ஆத்துமாவில் விடுதலை.
ஆவியில் விடுதலை
இப்படிப்பட்ட விடுதலை
ஓடிப்போன அந்த
ஓர்பாளின் சகோதரர்களுக்கு
கிடைக்கவில்லையே!
ஓர்பாளின் ஒன்பது சகோதரர்களும்
குஷ்டரோகிகளாகவே
மரிப்பதும் ஒன்றுதான்.
குஷ்டரோகம் நீங்கினவர்களாய்
இயேசுவை சந்திக்காமல்
இரட்சிப்பைப் பெறாமல்,
ஸ்தோத்தரிக்காமல்
மரிப்பதும் ஒன்றுதான்.
மரித்தபின் திகைத்துப் புலம்பின
அந்த ஐசுவரியவானுக்கு
சகோதரராகிவிடுவார்கள்
அவ்வளவுதான்
இன்றைக்கு
அற்புத சுகம் தேடி
இயேசுவை நோக்கி
ஓடி வருகிறார்கள்.
சுகம் கிடைத்தவுடன்
வந்த வேகத்தில்
ஓடிப் போகிறார்கள்.
உபதேசம் கேட்க
தேசத்தில் ஆட்கள் இல்லை.
தங்களைத் தள்ளிவைத்த
உலகத்தையும்
ஒதுக்கிவைத்த உறவினர்களையும்
பார்க்கத்தான் ஓடுகிறார்களே ஒழிய,
ஆராதனையின் நாளில் வந்து
தேவனுக்கு நன்றி செலுத்த
மனமில்லை.
The Samaritan not only
brought joy to Christ’s heart
but received salvation from
His hand.
“Your faith has saved you”
When God answers your prayers,
be sure to tell Him a
big “thank you”
கண்டதுக்கெல்லாம்
கண்மூடித்தனமாக
கைகொட்டிச் சிரிக்கும்
இந்த மாயையான உலகத்திலே
ஓர்பாள்களின் ஓய்யார
அணிவகுப்புக்களின் மத்தியிலே
சரீர சுகத்திற்காக மட்டுமல்ல
ஆத்தும இரட்சிப்பிற்காகவும்
இயேசுவைத் தேடி ஓடி வா
சுவாசக் கோளாறும்
விசுவாசக்கோளாறும்
பெருகிக் கொண்டிருக்கும்
இந்நாட்களில்
ஆக்சிஜன் சில்லறையாகவும்
மொத்தமாகவும் கிடைக்கும் என்று
சொல்லப்படும் நாட்கள் வருமுன்
மனுக்குலமே,
ஆராதிக்க எழுந்து வா

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14