
ஜனக்கூட்டத்தில்
ஒருவன்
அவன்தான் அந்த
பிள்ளையின் தகப்பன்
எந்தப் பிள்ளையின்
தகப்பன்?
பிசாசு பிடித்த பிள்ளையின்
தகப்பன்
நுரைதள்ளி, பல்லைக் கடித்து
அடிக்கடி தரையிலே விழுந்து
சோர்ந்துபோய்கிடப்பானே,
அந்தப் பிள்ளையின் தகப்பன்
சீஷர்களிடம் கொண்டுவந்து
ஆண்டவன்மாரே,
என் மகனை குணமாக்குங்க
இவனால் நான்
தினமும் செத்துச் செத்துப்
பிழைக்கிறேன்
என்று கதறினானே,
தாடி வளர்த்துக்கொண்டு
வாடி வதங்கிப்போன
அந்தப் பிள்ளையின் தகப்பன்
சீஷர்களால்
கூடாமற்போனபோது
அந்தத் தகப்பன் மேலும்
நொறுக்கப்பட்டான்
யார் இந்த சீஷர்கள்?
மறுரூப மலைக்கு போகாமல்
மலையடிவாரத்திலேயே
தங்கிவிட்ட,
இல்லை இல்லை
தேங்கிவிட்ட சீஷர்கள்
(மாற்கு 9:2)
மொத்தம் பன்னிரண்டு சீஷர்கள்
அதிலே பேதுரு, யாக்கோபு,
யோவான் தவிர மீதமுள்ள
ஒன்பது சீஷர்கள்
பவரை இழந்து அதாவது
வல்லமையை இழந்து
அதிகாரத்தை இழந்து
பிசாசைத் துரத்தி அந்தப்
பிள்ளையை விடுதலையாக்க
முடியாமல்
அந்த மலையடிவாரத்தில்
மலைத்து நின்றவர்கள்
உபவாசத்தையும்
ஜெபத்தையும் விட்டுவிட்ட
சீஷர்கள் (மாற்கு 9: 29)
கொடுக்கப்பட்ட
அதிகாரத்தை
எங்கேயோ தொலைத்துப்
போட்டவர்கள்
(மாற்கு 6:7)
பிசாசுக்குக் கொஞ்சம்
கொண்டாட்டம்தான்
அந்த ஒன்பது சீஷரையும்
ஓரக்கண்ணால் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்தான்
கொஞ்ச நேரத்திலே வேதபாரகர்
அங்கே கூடிவந்துவிட்டார்கள்
சீஷர்களோடு சொற்போர் நடத்தி
வழக்கத்தின்படி
வாதம்பண்ணிக்
கொண்டிருந்தார்கள்
இதனால் அந்தத் தகப்பன்
மேலும் திடனற்றுப் போனான்
செய்வதறியாது திகைத்த
அந்தப் பிள்ளையின் தகப்பன்
கலங்கின கண்களோடு
ஒனக்கு ஒரு விடிவு காலம்
இல்லையாப்பா என்று
பிள்ளையையே
பார்த்துக்கொண்டிருந்தபோது,
இயேசு அங்கே வந்துவிட்டார்
போதகர் இயேசுவிடம்
அந்தத் தகப்பன்
பிள்ளையைத் தூக்கிக்கொண்டு
ஓடிப் போய்,
போதகரே, ஊமையான
ஒரு ஆவி பிடித்த என் மகனை
உம்மிடத்தில் கொண்டுவந்தேன்
அந்தப் பிசாசைத்
துரத்திவிடும்படி
கேட்டேன், அவர்களால்
கூடாமற்போயிற்று என்றான்
சோர்ந்து போகும் மகனுக்கு
சோர்ந்துபோகாத தகப்பன்
இளைப்படைந்த மகனுக்கு
இளைப்படையாத தகப்பன்
சீஷர்களால் முடியாமற்போனபோது,
முயற்சியைக் கைவிடாத தகப்பன்
மகனின் இரட்சிப்பிற்காக
விடுதலைக்காக,
அதிகமாய்
பாடுபட்ட தகப்பன்
இயேசுவிடம் அவனைக்
கொண்டுவந்தபோது,
பிசாசு அலறியது
அலைக்கழித்தது
தரையிலே தள்ளியது
நுரைதள்ளி புரண்டு
செத்தவனைப் போல
விழத்தாக்கியது
இயேசு
அந்த தகப்பனை நோக்கி
பேசினார்
இது இவனுக்கு உண்டாகி
எவ்வளவு காலமாயிற்று?
என்று கேட்டார்
அதற்கு பிள்ளையின் தகப்பன்
அவன் சிறு வயது முதற்கொண்டே
உண்டாயிருக்கிறது என்றான்.
இவனைக் கொல்லும்படி
அது அநேகந்தரம் தீயிலும்
தண்ணீரிலும் தள்ளிற்று .
நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால்
எங்கள்மேல் மனதிரங்கி
எங்களுக்கு உதவிசெய்யவேண்டும்
என்றான்
இந்தத் தகப்பனின் வார்த்தைகள்
என் கண்களிலிருந்து
நீர்தாரைகளை வரவழைத்துவிட்டது
இதை எழுதிக்கொண்டிருக்கும்
இந்த நேரத்தில் கண்ணீர் என்
பார்வையை
மறைத்துக்கொண்டிருக்கிறது
என்னையும் என் மகனையும்
என்னால் பிரித்துப் பேச முடியாது
அவனுக்காகத்தான் நான்
உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால்
எங்கள் மேல் மனதிரங்கி
எங்களுக்கு உதவிசெய்யவேண்டும்
என்று கண்ணீரோடு வேண்டினான்
இது ஒரு
பாசமுள்ள தகப்பனின்
பாரஞ்சுமந்து தவித்த தகப்பனின்
ஏக்கப் பெருமூச்சின் சத்தம்!
எத்தனை அன்புள்ள தகப்பன்!
பிசாசு பீறிட்டுபோட்டிருக்கும்போதும்
தன் மகனை நேசித்த தகப்பன்
அன்றைய தினம் அவன் தன்
மகனுக்கு அற்புத விடுதலையை
பெற்றுக்கொண்டான்.
இயேசு
அந்த பிள்ளையின் கையைப்
பிடித்து அவனைத் தூக்கினார்
உடனே அவன் எழுந்திருந்தான்
இது
அந்த மலையடிவாரத்தில் நடந்த
அற்புதத் திருவிழா
வீதியில் நடைபெற்ற
விடுதலைப் பெருவிழா!
இன்றைக்கெல்லாம்
நல்ல குடும்பத்தை விட்டு
தகப்பன் என்ற
ஸ்தானத்தை மறந்து
மனைவி,
பிள்ளைகளைத் துறந்து
ஓடி ஒளிந்து
மறைவிடங்களில்
மறைந்து வாழும்
தகப்பன்மார் எத்தனை?
இந்தப் பிள்ளையின் தகப்பன்
பாரஞ்சுமந்து தவித்த தகப்பன்
பரம வைத்தியரைத்
தேடிக் கண்டுபிடித்தத் தகப்பன்
குடும்பத்தை விட்டுவிட்டு
கும்பகோணத்திற்கு
ஓடிப் போகாத தகப்பன்
மகனைத் தோள்மேல்
போட்டுகொண்டு
தெருத்தெருவாய் அலைந்து
அற்புத விடுதலையைப்
பெற்றுக்கொடுத்து
தனது அவிசுவாசத்தையும்
அகற்றிவிட்ட
தங்கத் தகப்பன்!
அந்த ஜனக்கூட்டத்திற்கு நடுவே
இயேசுவின் கரத்தால்
தூக்கி எடுத்து நிறுத்தப்பட்ட
மகனை அள்ளியெடுத்து
முத்தமிட்டு அவனது
கரம்பிடித்து
சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே… என்று
பாடிக்கொண்டே
வீட்டிற்கு போயிருப்பான் .
இந்தப் பிள்ளையின் தகப்பனை
இந்த தந்தையர் தினத்தன்று
பார்க்கவேண்டுமா?
உடனே மாற்கு 9 ம்
அதிகாரத்திற்குள்
நடந்து செல்லுங்கள்.
அங்கே
அப்பாவையும்
பிள்ளையையும் காணலாம்
(மாற்கு 9:14-27).
ஆகார்
அந்த வனாந்தரத்தில்
பிள்ளையைக் கூட்டிக்கொண்டு
போனபோது தண்ணீருக்காக
அலைந்தாள்
தாகத்தினால் அந்தப் பிள்ளை
சாகப்போவதைப்
பார்க்க முடியாமல்
தூரமாய் போய் உட்கார்ந்து
ஓவென்று அழுதாள் (ஆதி.21:17)
அந்த
வனாந்தரத்தில் கர்த்தர்
அவளின் சத்தத்தை அல்ல
அந்தப் பிள்ளையின்
சத்தத்தை கேட்டார்.
மாற்கு 9- ம் அதிகாரத்தில்,
இந்தப் பிள்ளையை
மலையடிவாரத்தில் விட்டுவிட்டு
அவன் வேதனைப்படுவதைப்
பார்க்க முடியாமல்
தொடர்பு எல்லையை விட்டு
தூரமாய் போய் உட்கார்ந்து
அழுதுகொண்டிருக்கவில்லை!
இவன்தான்
சிறந்த தகப்பன்
முன்மாதிரியான தகப்பன்
அந்தப் பிள்ளைக்காக
சிறு பிராயத்திலிருந்து போராடி
இயேசுவிடம் வந்து
சுகவாழ்வைப் பெற்றுக்கொண்ட
அந்தப் பிள்ளையின் தகப்பனுக்கு …
HAPPY FATHER’S DAY

வித்யா’வின் விண் பார்வை
(இஸ்ரேல் வித்ய பிரகாஷ்)
கர்த்தரின் எழுத்தாணி
91-77080 73718 (WhatsApp)