
கல்லும் புரண்டிருச்சு
காவலும் முறிஞ்சிடுச்சு!
நாற்பது நாள் அனுசரித்த
தவக்காலமும் முடிஞ்சிருச்சு…!
ஈஸ்டரும் வந்திருச்சு…
ஈட்டபுளும் நிறைஞ்சிருச்சு!
ஈராயிரம் ஆண்டுமுன்
உயிர்த்த இயேசுவை
உள்ளமோ மறந்திடுச்சு!
துறந்த உணவுகளை
சுவைக் கூட்டி அசைபோடும்
தேவ ஜனமே!
இந்நாளில்
மறந்த இயேசுவை
மனக்கண்முன்
அசைபோட வாரீர்!
விண்ணும் மண்ணும் படைச்சவரு
மண்ணால் மனிதனைப் படைச்சாரு!
படைச்சு வைச்ச அனைத்தையும்
ஆளுகை செய்யவும் கொடுத்தாரு!
ஆளுகை செய்த மனிதன்தானும்
பாவத்தில்தானும் வீழ்ந்திடவே!
பரலோக தேவன் தானும்
பரிதவச்சு போனாரு!
படைத்த மனுக்குலத்தை மீட்டிடவே
மனமிரங்கி நின்றாரு!
விண்ணில் இருந்த குமாரனை
மண்ணில் அனுப்பத் துணிந்தாரு!
கன்னியின் வயிற்றினில் தானே
கருவாய் இயேசு உதித்தாரு!
பாவ மனுக்குலத்தை மீட்டிடவே
மனுஉருவாய் இயேசு வந்தாரு!
மனிதனாய் வாழ்ந்தவரு
அற்புதங்கள் புரிந்தாரு!
அதிசயங்கள் பல செய்து
அன்பின் வழியினிலே
ஆளுகை செய்தாரு!
பாவிகளைத் தேடி வந்தவரு
பரலோக ராஜ்யத்திற்காய்
மனம்திரும்பச் சொன்னாரு!
சொந்த ஜனங்களாலே
பாவியென தீர்க்கப்பட்டு
சாவிற்குத் தம்மை
ஒப்புக் கொடுத்தாரு!
பாவியான மனிதனைப் பரிசுத்தமாக்கி
பரலோக கிரீடம் தர
முள்கிரீடம் ஏற்றாரு!
பாரமான சிலுவை தாங்கி
கோரமான கொல்கதா மலை
நோக்கி நடந்தாரு!
சிலுவைப் பாடுகள் ஏற்றவரு
பரிகாரி ஆனாரு!
பாவத்தைப் போக்கிடவே
பலியாக மாறினாரு!
கல்வாரி மலையினிலே
இரத்தத்தைச் சிந்தினாரு!
மரணத்தைத் தழுவியே
இரட்சிப்பைத் தந்தாரு!
சாத்தானை வீழ்த்தியே
சாவின் கூரொடித்தாரு!
உயிரோடு எழுந்ததாலே
பாதாளத்தை ஜெயித்தாரு!
பரமேறிச் சென்றவரு
அழைக்க வருவாரு!
ஆயத்தமாய் நீயிருந்தா
மகிமையில் சேர்ப்பாரு!
ஆண்டாண்டு காலமாய்த்
தவக்காலத்தை அனுசரித்து
உயிர்ப்பு நாளை உற்சாகத்துடன்
கொண்டாடும் தேவ ஜனமே!
பாவத்தை உணர்ந்து
பரலோக பங்கு பெற
இன்றே
விரைந்து வந்திடு!
அடைக்கலக் கன்மலை
அவர் ஒருவரே என்பதை
இன்றே உணர்ந்திடு!
சுகந்தி பிரபாகரன்,
சென்னை. 48