பெரியவர்களின் முகபாவனையிலும் பேச்சிலும்
பெரிய அளவில் கலந்து காண்பிக்கப்படும்
பிரதானமான குணம் தாழ்மைதான்.


ஏழ்மையில் தாழ்மையைக் காண்பிப்பவனை
யாரும் கவனிப்பதில்லை.
அது அவன் பிறவிக்குணம் என்பார்கள்.

தாழ்மையில் மாயமான தாழ்மை
என்றும் ஒன்று இருக்கிறது. 
இது இன்றைக்கு எல்லாத் தரப்பிலும் இருக்கிறது.


இப்படிப்பட்ட நடிப்பும் பாவனையும்
சிலருக்கு கைவந்த கலை.
இதை வைத்துக் காரியம் சாதிக்கும்
காரியவாதிகளும் இருக்கிறார்கள்.


அந்தப் பெரிய மனிதருக்குத்தான்
எவ்வளவு தாழ்மை!
இது சாதாரணமான பேச்சுத்தான்.
ஆனால் அவர் உள்மனதில் இந்தத் தாழ்மை உண்டா?
ஆண்டவர்தான் அறிவார்.

செருக்குள்ள மனதிற்கு எப்போதும்
போலித் தாழ்மை தான் உண்டு.
உள்ளே கனல் பற்றி எரியும்.
வெளியே கைகட்டி வாயைப் பொத்தி நிற்பார்கள்.
இதைப் பார்ப்பவர்கள் இப்படியல்லவா
இருக்கவேண்டும் என்று பேசிமகிழ்வார்கள்.


காந்தியைச் சுட்டவனும் கைக்குள் துப்பாக்கியை
மறைத்து வைத்து அவரைச் சுடுவதற்கு முன்
பணிவாக வணங்கினான். இது இன்றைய உலகம்.

ஏன் இப்படி?
எல்லாம் இந்தப் பாழாய்ப் போன
உலகத்திற்காகத்தான்.

மாயமான தாழ்மையை   (False Humility) குறித்து
வேதம் என்ன சொல்லுகிறது?


மாயமான தாழ்மையில் விருப்பமுற்று
தன் மாம்ச சிந்தனையினாலே வீணாய்
இறுமாப்புக் கொண்டிருக்கிற எவனும்
உங்கள் பந்தயப் பொருளை நீங்கள் இழந்துபோகும்படி
உங்களை வஞ்சியாதிருக்கப் பாருங்கள்.
இப்படி வஞ்சிப்பவர்கள் உலக வழக்கத்தின்படி
பிழைப்பார்கள் (கொலோசெயர் 2:19,20) என்று
வேதம் அறிவிக்கிறது.

மனுஷருடைய சுய போதனைகள்
யோகாசனப்பயிற்சிகள்
சுய இஷ்டமான ஆராதனையையும்
மாயமான தாழ்மையையும்

பேசிக்கொண்டிருக்கிறது
என கொலோ.2:23 சொல்லுகிறது.
இவை மாம்சத்தைப் பேணுவதற்கு ஒழிய
மற்றொன்றிற்கும் பயன்படாது.
நமது இரட்சகரும் ஆண்டவருமாகிய இயேசு
காண்பித்த மெய்யான தாழ்மையில்; தரித்துக்கொள்ளும்
பாக்கியம் எவருக்குக் கிடைக்கிறதோ
அவர்கள் கர்த்தருக்கு முன்பாக தங்கள் தாழ்மையை
வெளிப்படுத்துகிறார்கள் (யாக்கோபு 4:10).

சிலுவையின் மரணப்பரியந்தம் தம்மைத் தாழ்த்திய
ஆண்டவருக்குத் தங்களை அர்ப்பணம்
செய்துகொண்டவர்கள் (பிலிபியர் 2:8)
தங்களின் எந்த சூழ்நிலையிலும்
பேச்சிலும் செயலிலும்
செருக்கைக் காண்பிக்க மாட்டார்கள்.

மனாசேயின் மகன் ஆமோன்
கர்த்தருக்கு முன்பாகத் தன்னை தாழ்த்தாததினால்
அழிந்துபோனனான் (2 நாளாகாமம் 33:23,24).
ஆமோன் கர்த்தருக்கு முன்பாக தாழ்த்த வெட்கப்பட்டான்.
அதனால் அவன் வெட்கப்பட்டு அழிக்கப்பட்டுப்போனான்.

எஸ்தருக்கு எதிரான ஆமானின் செருக்கு
அவனுக்கு அழிவைக் கொண்டுவந்ததை
அனைவரும் அறிவோம்.
ஆகாப் தேவனுக்கு முன்பாக தன்னை
தாழ்த்தினதினால் பொல்லாப்பு
அவனை அணுகவில்லை.(1 இராஜா 21:29)

மனாசே தேவனுக்கு முன்பாக தன்னைத்
தாழ்த்தியபோது தன் நெருக்கத்திலிருந்து
விடுவிக்கப்பட்டான் (2 நாளா. 33:12,13)

தற்பெருமை தாண்டவமாடும் காலத்தில்
நாம் வாழ்கிறோம். இன்றைய உலகில் சிறு குழந்தை முதல்
பெரியோர் வரை தற்பெருமையால்
தலை கனத்துப் போயிருக்கிறார்கள்.
பேச்சு செயல் அனைத்தும் பெருமையையே
பறைசாற்றுகின்றன.

எளிமையும் தாழ்மையும் என்ன விலை
என்று கேட்கும் காலம்!
இந்தப் பெருமைக்குக் கால் முளைத்துப்
பொறாமையாகவும் மாறி கடைசியில்
அதில் பொய்த்துப் போய்விடுகிறார்கள்.

வீட்டிலும் வெளியிலும் மனிதர் அமரும்
இடமெல்லாம் சிம்மாசனமாக மாறிக்கொண்டிருக்கிறது. 
ஆலயத்தின் இருக்கைகளெல்லாம் இறுகிப் போய்
குறுகிப்போய்  முழங்கால்படியிட்டு
ஜெபிக்க முடியாதபடி நவநாகரீகமாக
குளிர்சாதனக் கிடங்காக மாறிக்கொண்டிருக்கின்றன.
சிம்மாசனங்களில் அமர்வதற்கென்றே
அவனுக்குக் கால்களில் வாத நோய்களும் வருகின்றன.

தாழ்மையைத் தள்ளிவிடும்போது
மனதிலும் சரீரத்திலும் தான் எவ்வளவு பாதகமான
விளைவுகள் உண்டாகின்றன.
நேபுகாத் நேச்சாரின் ஆணவத்தால்
அவனுடைய   மேன்மையும் புகழும் ஒழிந்து
சிறுமைப்படுத்தப்பட்டானே.


தொடர்ந்து இன்றுவரை இதுபோல் எத்தனையோ
வீழ்ந்து போன சரித்திரங்கள் உண்டு. 
மேன்மைக்கு முன்னானது தாழ்மை என்பதையும்
(நீதி. 1812) தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்
என்பதையும் (லூக்கா 14:11 அறிந்து
தாழ்மையைத் தரித்துக்கொள்வோம்.

தன்னை அடிமையின் தாழ்மை,
ஆண்டவருக்கு அடிமை என்று
அர்ப்பணம் செய்த

ஆண்டவரின் தாயார் மரியாளை  
நினைத்துக்கொள்வோம்.


என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள்
தங்களைத் தாழ்த்தி ஜெபம்பண்ணி
என் முகத்தைத் தேடி தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு
திரும்பினால் அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற
நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து
அவர்கள் தேசத்திற்கு க்ஷேமத்தை கொடுப்பேன்
( 2 நாளா 7:14)

தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும்
வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்
(நீதி .22:4).

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (1939-2021)
==================================

தொகுப்பு :
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,
இயக்குனர் – இலக்கிய துறை (TCN MEDIA)