
எப்பிராயீம் மலை தேசத்தானாகிய
மீகா என்னும் பேருள்ள
ஒரு மனுஷன் இருந்தான்.
அவன் தன் தாயை நோக்கி,
உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு
வெள்ளிக்காசு களவு போயிற்றே,
அதைக் குறித்து என் காதுகள் கேட்க
நீ சாபமிட்டாயே, அந்தப் பணம் இதோ,
என்னிடத்தில் இருக்கிறது;
அதை எடுத்தவன் நான்தான் என்றான்.
அதற்கு அவன் தாய்,
என் மகனே, நீ கர்த்தரால்
ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்
(நியாயாதிபதிகள் 17:1,2).
இந்த வாய் கர்த்தரை அறிந்த வாய்!
ஆனால் கண்டபடி சபிக்கிறது.
இப்படிப்பட்ட வாய்கள்
உலகத்தில் ஏராளம் உண்டு.
ஒரு வீட்டில் ஆயிரத்து நூறு
வெள்ளிக்காசு காணாமல் போய்விட்டது.
காணாமல் போனவுடனே
அந்தத் தாய் வெளியே வந்து…
அவ வெளங்குவாளா? இவ உருப்படுவாளா?
அவ நல்லாயிருப்பாளா என்று மண்ணைவாரி
தூற்றி சாபம்போட ஆரம்பித்துவிட்டாள்.
இதைக் கேட்ட மகன்
உடனே ஓடிவந்து சொல்லுகிறான்;
அம்மா நான்தான் திருடினேன் என்று.
கள்ளன் வீட்டுக்குள்ளே இருக்கிறான்.
திருடன் அல்லது பிரச்சனை
வீட்டுக்குள்ளேயே இருக்கிறது.
ஆயிரத்துநூறு வெள்ளிக்காசு
காணாமல் போனவுடனே
வெளியிலே வந்து
அந்த அம்மா சபிக்கிறார்கள்.
சாபமிடுகிறார்கள்.
ஒரு பொருள்
தொலைந்தவுடனே,
ஒன்றை இழந்தவுடனே
வாய் பேசுகிறவர்களாய் அல்ல,
பிறரை சபிக்கிறவர்களாய் அல்ல,
பிறர்மேல் பழியைப் போடுகிறவர்களாயுமல்ல.
தேடுகிறவர்களாய்
கர்த்தர் நம்மை மாற்றுவாராக.
ஒரு பொருள் அல்லது பணம்
தொலைந்து போனவுடனே
நாம் சிலரை நம்
சிந்தையில் வைத்திருப்போம்.
அவர்கள் பெயரைச் சொல்லி
இதற்குக் காரணம் அவர்கள்தான்
என்று சொல்லிவிடுவோம்.
வீட்டில் நெருப்புப்பற்றி எரியத் துவங்கும்.
ஆனால் அந்தக் குறிப்பிட்ட நபர்
ஊருக்குள்ளேயே இருந்திருக்கமாட்டார்.
இப்படிச் சம்பந்தமில்லாமல்
சிலரோடு சண்டை போட்டு,
உறவுகளை சேதப்படுத்திவிடுகிறவர்கள்
இருக்கிறார்கள்.
விசுவாச விஷயத்தில்
தேறுகிறார்களோ
இல்லையோ
விவகாரம்பண்ணுவதில்
சிலர் தேறியிருப்பார்கள்.
இங்கே இந்த ஸ்திரீயின் மகன்
சொல்லுகிறான்,
அம்மா நான்தான் அந்த
வெள்ளிக்காசை எடுத்தேன் என்று.
உடனே அந்த அம்மா; மகனே, நீ
ஆசீர்வதிக்கப்பட்டவன்
என்று சொல்லிவிடுகிறார்கள்.
நாவு எவ்வளவு சீக்கிரம்
நிறம் மாறுகிறது பாருங்கள்.
சடுதியில் சபித்த வாய்
நொடியில் மாறியது.
உடனே ஆசீர்வாதம் பிறக்கிறது.
அடுத்தவன் பிள்ளை என்றால் சாபம்,
உன் பிள்ளையென்றால் ஆசீர்வாதமா?
உள்ளதை உள்ளதென்றும் இல்லதை
இல்லதென்றும் சொல்லுகிற
ஒரு தலைமுறை
கர்த்தருக்குத் தேவை.
ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு
காணாமல் போனவுடன்
இந்தத் தாயார்
தேடுவதை விட்டுவிட்டு
சபிக்க தொடங்குகிறார்கள்.
சபிப்பதற்கு நாம்
அழைக்கப்படவில்லை.
ஆசீர்வதிக்கிறதற்கு
அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இந்த வேளையிலே உங்கள் வாயினால்
சபித்த சாபங்களை
இன்றைக்குக் கர்த்தர்
நிர்மூலமாக்க விரும்புகிறார்.
உங்கள் வாயினால் உங்கள் பிள்ளைகளை
சபித்த சாபங்கள், உங்கள் குடும்பத்தை,
உங்கள் ஊழியத்தை சபித்த சாபங்களை
நினைத்து ஆண்டவரிடத்தில்
மன்னிப்புக் கேளுங்கள்.
என்னையும் அறியாமல்
என் பிள்ளைகளை
சபித்த பாவங்களை
மன்னியும் கர்த்தாவே
என்று உணர்ந்து ஜெபியுங்கள்.
கர்த்தர் நிச்சயமாய்
மன்னிப்பார்.
சகோ. G.E. ஞானேஷ்
அவர்கள் கொடுத்த
செய்திகள் புத்தக வடிவில்
வெளிவந்துள்ளது.
எதைச் சம்பாதிக்கிறாய்?
எதைப் பெற்றுக்கொள்கிறாய்?
என்ற புத்தகத்திலிருந்து
எடுத்து எழுதப்பட்டுள்ளது.

87 பக்கங்கள் கொண்ட
இந்தப் புத்தகத்தை முழுவதும் படிக்க
விரும்பினால் எனது வாட்ஸாப் எண்ணிற்குத்
தொடர்புகொள்ளுங்கள். நன்றி.
91-77080 73718
e-mail id : [email protected]
புத்தகத்தைத்
தொகுத்து வழங்கியவர்:
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,
இயக்குனர்,
இலக்கிய துறை, Tamil Christian Network
Radio Speaker, Aaruthal FM.
