யவீரு மகளை உயிரோடு எழுப்புதல்

சின்னச் சின்னச் செய்திகள் : 7

இயேசுவின்
வஸ்திரத்தின் ஓரத்தைத்
தொட்டால் சொஸ்தமாவேன் என்று
சொல்லித் தொட்டுச்
சுகமடைந்தவளைப்
பார்த்த இயேசு,
திரள் கூட்டத்திற்கு முன்னிலையில்
அவள் செய்ததைப் பற்றிச்
சொல்லிப் பாராட்டினார்.

விசுவாசத்தால் வீர நடை நடந்த
இந்த அம்மையாரை வைத்து
நடு ரோட்டில் இயேசு
பாராட்டுக் கூட்டம்
ஒன்றை நடத்தினார்.
உன் விசுவாசமே
உன்னை இரட்சித்தது என்று சொல்லி
அவளது விசுவாசத்தைப்
புகழ்ந்தார் (மாற்கு 5:34).

மகளே, என்று அடைமொழியிட்டு
அழைத்து உரிமையுடன் பேசியபோது
அவளது உள்ளம் பின்னோக்கிச் சென்றது.

இப்படி உரிமையுடன் என்னை அழைக்க
அப்பா இல்லையே என்று ஏங்கியது.
கட்டிய கணவனைக் காணோம்.
பெற்றெடுத்தப் பிள்ளைகளைக் காணோம்.
வியாதியின் அறிகுறி
தெரிந்தவுடன் 12 ஆண்டுகளாக
காணாமற்போன தனது சொந்தங்களை
அவளது கண்கள் தேடத் துவங்கியது.

விசுவாசப் பாராட்டுக் கூட்டம்
நடந்துகொண்டிருந்தபோது
நெருப்பில் கிடக்கும் புழுவைப் போல
நெளிந்துகொண்டிருந்தார் யவீரு.
காரணம், உங்களுக்குத் தெரியும்தானே!

தாமதமாய் இயேசு
அவன் வீட்டுக்குச் செல்வதால்
யவீருவின் மகளுக்கு
அற்புதம் கானல் நீராய்ப் போகாது.
தாமதம் கூடுதல்
நன்மையைத் தான்
கொண்டுவரும்.

12 வருடம்
பெரும்பாடுள்ளவளுக்கு
ஜீவன் கொடுக்கவேண்டும்,
அதைப் பரிபூரணப்படுத்த வேண்டும்
(யோவான் 10:10).

யவீருவின் மகளுக்கு
ஜீவன் போகவேண்டும்.
அதற்குப் பின் அவளுக்கு
ஜீவனைக் கட்டளையிட்டு
அதைப் பரிபூரணப்படுத்த வேண்டும்.

இதன்மூலம் தேவனுடைய மகிமை
வெளியரங்கமாக வேண்டும்.
அந்த மகிமை, மேகத்தைப் போல
உலகமெங்கிலும் காற்றில்
கலந்து செல்லவேண்டும்.
இதுதான் இயேசுவின் திட்டம் + சித்தம்.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
LIVING WATER MINISTRIES, MADURAI -14