யாருக்கு மேன்மை?

பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். – (யாத்திராகமம் 32:26).

எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை நடத்தி வந்த மோசேயை தேவன் தம்மோடு தனித்திருக்கும்படி மலைமேல் அழைத்தார்.

மோசே மலையிலிருந்து இறங்கி வர தாமதமாகிறது. 40 நாட்களாக மோசேயை காணாத ஜனங்கள் ஆரோனை பிடித்து, எங்கனை முன் நடத்தி செல்ல தெய்வங்கள் உண்டாக்க வேண்டுமென்று வற்புறுத்தி, ஒரு கன்றுகுட்டியை உருவாக்கி இதுவே தங்களை நடத்தி வந்த தெய்வம் என்று வணங்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் செய்த தவறு என்ன தெரியுமா? இதுவரை நடத்தி வந்த தேவனுடைய மேன்மையை அவர்கள் விளங்கி கொள்ளவில்லை. மாறாக எல்லாவற்றிற்கும் காரணம் மோசேதான் என்று அவனை பிடித்து கொண்டார்கள்.

இன்னொரு விதத்தில் சொல்ல போனால், மோசேதான் இப்பொழுது அவர்களின் தேவன். தேவனைவிட அவர்க்ள மோசேயை அதிகமாய் நம்பினர். ஆகவேதான் மோசே இல்லையென்றவுடன் அதற்கு பதிலாக சில தெய்வங்கள் எங்களை நடத்தி செல்ல வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்தனர்.

தேவனுக்கும் மேலாக ஒரு மனிதனை உயர்த்தும் அவல நிலை.

இந்நாட்களில்; கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்நிலை அதிகமாக காணப்படுகிறது.

கிறிஸ்தவ வட்டாரத்தில் ஒரு ஊழியருடைய கூட்டத்திற்கு மக்கள் அதிகமாக கூடிவிடுகிறார்கள் என்றால், ஏறக்குறைய அவ்வூழியரை ஜனங்கள் தெய்வமாக்கி விடுகிறார்கள்.

ஒரு ஜெப விண்ணப்பம் என்றாலும், ஆலோசனை தேவை என்றாலும், ஆறுதலுக்கானாலும், விடுதலைக்கென்றாலும், முதலாவது அவ்வூழியருக்கு கடிதம் எழுதவும், போன் பண்ணவுமே யோசிக்கின்றனர்.
பெயரளவில்தான் இயேசு அங்கிருக்கிறார், மறைமுகமாக இயேசுகிறிஸ்து ஓரம் கட்டப்படுகிறார்.

ஊழியர்களிடம் ஜெபம் பண்ணவதும், ஆலோசனை கேட்பதும் தவறல்ல. ஆனால் அவர்களை விக்கிரகம் ஆக்கி விடுவதுதான் மகாப்பெரிய தவறு.

அவ்வூழியர் இல்லாவிட்டால், தங்கள் வாழ்வில் எதுவும் நடக்காது என்ற எண்ணம் அவர்கள் வாழ்வை வஞ்சித்து விடுகிறது.

பிரச்சனையின் நேரத்தில் அவ்வூழியரோடு தொடர்பு கொள்ள முடியாமல் போனால், எல்லாமே இழந்து விட்டதை போல இடிந்து போய் உட்கார்ந்து விடுகின்றனர்.

ஆனால் அண்ட சராசரத்தின் முழு ஆளுகையும் தம் கரத்தில் வைத்திருக்கிற தேவனை நோக்கி தங்கள் கண்களை ஏறெடுக்க மறந்து விடுகின்றனர்.

ஊழியர்களும் மனிதர்கள் தான் என்பதை நாம் முதலாவது அறிந்து கொள்ள வேண்டும்.

நீதிமான் ஒருவனாகிலும் இல்லை
(ரோமர் 3:10) என்று வேதம் நமக்கு கூறுகிறது.
ஊழியர்களாயிருந்தாலும் பாவத்தில் விழாதபடி பரிசுத்தமாய் தங்களை காத்து கொண்டிருக்கிற ஊழியர்கள் மிகவும் குறைவே.

தேவ கிருபையால் ஒவ்வொருவரும் நிற்கிறார்களே தவிர அவர்கள் தேவன் இல்லை. பண ஆசை, பெண் ஆசை, புகழின் ஆசை இவைகளில் விழாதபடி தங்களை காத்து கொண்டிருக்கிற ஊழியர் மிகவும் குறைவே.

ஆகவே ஊழியர்களை Hero Worship செய்வது மிகவும் ஆபத்தானது. நம்முடைய எல்லா ஆராதனைக்கும், புகழுக்கும், ஸ்தோத்திரங்களுக்கும் பாத்திரர் நம் கர்த்தர் மட்டுமே.

தேவ ஊழியர்கள் எல்லாரும், அவரை தொழுது கொள்ளவும், அவரை அறிவிக்கின்ற வேலைக்காரர்களாகவும் இருக்கின்றார்களே தவிர, தேவனுக்கு ஈடு ஒருவரும் இல்லை.
இல்லவே இல்லை.

யாரும் இந்த காரியத்தில் மோசம் போக கூடாது. ஒரு ஊழியர் பின்வாங்கி போனால், அவரை பின்பற்றின அத்தனை பேரும் பின்வாங்கி போவார்கள்.

மனிதனை பின்பற்றினால் அதுதான் விளைவு.

தேவனை முன்மாதியாக வைத்து, அவரையே நாம் பின்பற்றுவோம்.

ஒரு ஊழியரை அவருடைய ஊழியங்களை பார்த்து, என் மகனை இந்த ஊழியர் போல ஆக்கும் தகப்பனே என்று ஆரம்ப காலங்களில் நான் ஜெபித்ததுண்டு.

ஆனால் அந்த ஊழியர் விழுந்து போன போது, ஐயோ நான் இந்த ஊழியரை போலவா என் மகன் ஆகவேண்டும் என்று ஜெபித்தேன் என்று கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டேன்.

நாம் கர்த்தரைத்தான் எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக வைக்கவேண்டும். மனிதர்கள் ஒருவரையும் நாம் முன்மாதிரியாக வைக்க கூடாது.

அப்படி ஊழியர்களை நாம் நமக்கு முன்மாதிரியாக வைக்காமல், கர்த்தரோடுள்ள நமது உறவை புதுப்பித்து கொண்டு முன்செல்ல வேண்டும்.

அதாவது கர்த்தரோடு நான் இருக்கிறேன் என்ற நிச்சயமான அஸ்திபாரத்தின்மேல் நாம் உறுதியாக நிற்கிறவர்களாக இருக்க வேண்டும்.

நம்முடைய ஒரே இலக்கு, ‘இயேசுவை போல மாற வேண்டும்’ என்பதாகவே இருக்க வேண்டும்.

அது திசைமாறி எந்த ஊழியர் மேலும் சென்று விடாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும். ஊழியரை கண்ணோக்கி கொண்டிருப்போமானால், எளிதில் பின்மாற்றித்தில் விழுந்து விடுவோம்.

ஆகவே இப்படிப்பட்ட காரியத்தில் சாத்தான் நம்மை வஞ்சித்து விடாதபடி கவனமாயிருப்போம்.

நம் வாழ்வின் முதலிடம் தேவனுக்கே, முழு இடமும் தேவனுக்கே கொடுத்து வாழ தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக.


யாரை பின்பற்றுகிறீர்கள்….

தேவனாகிய கர்த்தரையா !?

தேவ மனிதர்களையா ?

மனித தெய்வங்களையா ?