TREE தரும் ஆக்ஸிஜன் FREE

TREE தரும் ஆக்ஸிஜன் FREE

ஸ்டெர்லைட் ஆலை’யே

நீ பல்வேறு சர்ச்சைகளில்
சிக்கித் தவித்ததை
மரங்களாகிய நாங்கள்
இன்னும் மறக்கவில்லை

உனக்கே ஆக்ஸிஜன்
டன் கணக்கில்
தேவைப்பட்டதையும்
நீ மூச்சுவிடமுடியாமல்
முக்கித் திணறியதையும்

பல மாதங்களாக
மூடப்பட்டே கிடந்ததையும்
உன்னைச் சுற்றி உயர்ந்து நிற்கும்
மரங்களாகிய நாங்கள் இன்னும்
மறந்துவிடவில்லை

தயவுசெய்து ஆக்ஸிஜன்
உற்பத்தியை மட்டும் விட்டுவிடு

மனுக்குலம் மரண பீதியில்
தலை தெறிக்க
ஓடிக்கொண்டிருக்கிறது

இந்த மனுகுலத்துக்கு
உலகம் உண்டானதுமுதல்
சுத்தமான ஆக்ஸிஜனை
இலவசமாக உற்பத்திசெய்து
சுகாதாரமான சுவாசத்தைத்
தந்துகொண்டிருக்கிறோம்

எங்களது தயாரிப்பு
சுத்தமானது சுகாதாரமானது
அரசியலுக்கு அப்பாற்பட்டது
பத்து பைசா செலவில்லாதது

ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்
மரங்களாகிய எங்களுக்கு
மாலை ஏதும் போட்டு
கும்பிடு போட வேண்டாம்

தண்ணீர்கூட ஊற்றவேண்டாம்
அதையும்
எங்களை படைத்த தெய்வமே
பார்த்துக்கொள்வார்

நாங்கள் Money ஐ நம்பி
வாழவில்லை
மண்ணை நம்பி வாழ்கிறோம்
எங்கள் வாழ்வில் குறுக்கிடாமல்

எங்களை வெட்டிச் சாய்த்து
விறகாக்கி விடாமல்
இருந்தாலே போதும்

உலகம் உள்ளவரை
மனுக்குலம் உள்ளவரை

உனது ஆலைக்குள் இருக்கும்
ஆட்களுக்கும் சேர்த்து

எங்கள் உற்பத்தி தொடரும் என்பதை
மாவட்டத்திலுள்ள அனைத்து
மரங்களின் சார்பில்
தெரிவித்துக்கொள்கிறோம்

நன்றி வணக்கம்

இப்படிக்கு,

அசுத்தக்காற்றை உள்வாங்கி
சுத்தமான ஆக்ஸிஜனை தரும்
உயர்ந்து நிற்கும் மரங்கள்

இது வித்யா’வின் பார்வை !