
நில்! கவனி! செல்!
அன்பரின் வழியினிலே
ஆசைகளைத் துறந்து நட!
இரட்சிப்பைப் பெற்றதாலே
ஈடில்லா களிப்பில் நட!
உன்னதரின் வழியினிலே
ஊழியப் பாதை நட!
எண்ணத்தில் தூய்மையோடு
ஏற்றத்தில் பணிந்து நட!
ஐம்புலனை இயேசுவிடம்
ஒப்புவித்து ஒழுகி நட!
ஓய்ந்திடா வார்த்தை கொண்ட
ஔடதமாம் வேதத்தில் நட!
கஷ்டத்தின் மத்தியிலே
காப்பவரை சார்ந்து நட!
கிறிஸ்துவை முன்னிறுத்தி
கீழானவையை விலக்கி நட!
குற்றங்களை ஒப்புக்கொண்டு
கூடி நிதம் ஜெபத்தில் நட!
கெடுதலை மறந்துவிட்டு!
கேட்டினை விலக்கி நட!
கைவிடா இயேசுவையே
கொள்கையாய்க் கொண்டு நட!
கோமகனாய் ஏற்றதனால்
கௌவையை அகற்றி நட!
சமாதானக்காரனரின்
சாந்தத்தை அணிந்து நட!
சிலுவையின் நிழலிலே
சீற்றத்தை அடக்கி நட!
சுத்தரின் கரத்தினாலே
சூழ்ச்சிகளை விலக்கி நட!
செவ்வையான பாதையிலே
சேதங்கள் இன்றி நட!
சொற்ப சந்தோஷம் தரும்
சோதோமிலிருந்து விலகி நட!
சௌந்தரிய நாட்டையே நாடி நட!
தன்னிகரில்லா இயேசுவின்
தாழ்மையைத் தரித்து நட!
திடமில்லா நேரங்களில்
தீர்க்கமாய்ப் பற்றி நட!
துன்பங்களைப் போக்கிடும்
தூயவரை நோக்கி நட!
தெவிட்டா இன்பம் தர
தேடியவரை ஏற்று நட!
தைரியநாதரின் பெலத்தினாலே
தொல்லைகள் சூழும்போது
தோய்வின்றி தொடர்ந்து நட!
பரமனாய் உதித்தவரின்
பாடுகளை நினைத்து நட!
பிசாசை அழித்ததனால்
பீடுடன் நிமிர்ந்து நட!
புகழுக்கு மயங்காமல்
பூரண சற்குணராய் நட!
பெருமையை ஒழித்து
பேதமையை அகற்றி நட!
பையலோடு கலவாது நட!
பொறுமையினைக் கடைபிடித்து
போற்றுதலை விரும்பாது
பௌவியமாய் அடங்கி நட!
மகிமையில் சேர்ந்திடவே
மாண்பு சிறக்க நட!
மிடற்றினை ஒலித்து
மீட்பரைத் துதித்து நட!
முழு மனதாய் இயேசு ஏற்று
மூர்க்கத்தை மறந்து நட!
மென்மையான குணம் நாடி
மேட்டிமையை அகற்றி நட!
மையமாய் இயேசு வைத்து
மொட்டுகளாய் அரும்பி நட!
மோட்சத்தின் பாதையிலே
மௌவலாய் மலர்ந்து நட!
நம்பிக்கையற்ற வேளையிலே
நாதன் இயேசு துணையில் நட!
நிலையில்லா உலகினிலே
நீடித்த வாழ்வை நோக்கி நட!
நுகத்தடியை ஏற்றவரின்
நூலினைப் படித்து நட!
நெகிழ்வான தருணங்களில்
நேசரின் அருகில் நட!
நைந்துருகும் வேளையிலே
நொம்பலங்கள் விலக்கி நட!
நோய்போக்கும் மருத்துவரால்
நொய்ய வாழ்வு அகற்றி நட!
வருகையின் நாளுக்காய்
வாழ்வை ஒப்புவித்து நட!
விண்ணவர் பாதம் சேர
வீறு கொண்டு நட!
வெற்றியின் நாளினிலே
வேந்தன் இயேசுவோடு நட!
சுகந்தி பிரபாகரன்