அக்கரைச் சீமையிலே ….!
Articles
  

அக்கரைச் சீமையிலே ….!

பாஸ்டர் S. விக்டர் ஜெயபால்
போதகர் /எழுத்தாளர்

‘’அக்கரைச் சீமையிலே ஆடுதம்மா எம் மனசு, கற்பனைக் குதிரையின் காலொடிந்து போனதினால், கடக்க முடியாமல் கடலில் விழுந்தேனம்மா’’! எப்போதோ கேட்ட ஒரு நாடோடிப் பாடல் இது.

இன்று மக்கள் மத்தியில் இது ஒரு அக்கறையான விஷயம். அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டும், அயல் மொழிகள் பேச வேண்டும், அதிகம் சம்பாதிக்கவேண்டும், ஆனந்தமாய் வாழவேண்டும். படித்தவர் படிக்காதவர் எல்லார் மத்தியிலும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்ற எண்ணம் , ஏக்கம் ஏராளமே!

இதற்காகப் பணத்தை, பண்பை, மனதைப் பறிகொடுத்த மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆத்துமாவே, என்று தணியும் இந்த அந்நிய மோகம்! நாம் இன்று வாழ்வதும் அந்நிய நாடு தான். நமக்கு இந்த உலகம் அக்கரைச் சீமை. நமது சொந்த தேசம் பரலோகம். நம் இயேசு இருக்கிற இடம் தான் நமக்குச் சொந்த நாடு.

அதை நாடித் தேட உன் உள்ளம் வாஞ்சிக்கிறதா?

சுருக்கமாகச் சொன்னால், நீ ஒரு இரயில் வண்டிக்காக ஆயத்தத்தோடு காத்திருக்கிற, இரயில்வே நிலையத்தில் உள்ள பயணியைப் போல இருக்கிறாய். அந்த வண்டியின் பெயர் “சரீர மரணம்’’. அது எப்பொழுதும் வரலாம். உன் ஆத்துமா செல்லவேண்டிய நிலையத்தைக் குறித்து, நித்தியத்தைக் குறித்துத் திட்டவட்டமான சிந்தை உனக்கு உண்டா?

உலகம் சுருங்கிக்கொண்டு வருகிறது. உன் உள்ளமோ உலக ஆசைகளால் விரிந்து கொண்டே போகிறது. அதில் நீ சரிந்து விழுந்து விடு முன் உன் உள்ளத்தைச் சரி செய்து கொள்வது நல்லது.

ஒரு சமயம் ஆண்டவராகிய இயேசு, தன்னுடன் இருக்கும் சீஷர்களுக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்க விரும்பினார்.”அக்கரைக்குப் போவோம் வாருங்கள்” என்று அழைத்தார் (மாற்கு 4:35).

அழைத்த இயேசு வழிநடத்திச் செல்ல வல்லவர். ஆனால் சீஷர்கள் என்ன செய்தார்கள்? வசனம் என்ன சொல்லுகிறது? (மாற்கு 4:36), அவரைக் கொண்டுபோனார்கள் என்று. எங்கே கொண்டு போனார்கள் தெரியுமா? படகின் முன்புறத்தில் இருக்க வேண்டியவரை படகின் பின்புறத்திற்குக் கொண்டுபோனார்கள், அதுமட்டுமல்ல, இயேசுவின்மேல் அக்கறை உள்ளவர்கள் அல்லவா? கூடவே தலையணை ஒன்றையும் தந்து தூங்க வைத்தார்கள்.

இயேசுவை உள்ளத்தில் உறங்கவைத்துவிட்டு, இயேசுவின் படகிலேயே இருந்துகொண்டு, உலகம் சுற்றும் வாலிப உள்ளம் கொண்டவர்களுக்காகவும் இயேசு அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை மறந்து போக வேண்டாம்.

சீஷர்களுக்குள்ளே மிகுந்த உற்சாகம்.ஆடல், பாடல், ஆர்ப்பாட்டங்கள், அக்கரைக்குப் போகிறோம் என்ற ஆனந்தம் இருந்தது. நம்மைக் காண்கிற இயேசுவும் தூங்குகிறார் என்ற நினைப்பு வேறு . இன்றைக்கும், இயேசு தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, முன்னணியில் தண்டுவலித்து, முழு உலகத்தையே ரவுண்டடித்து, கடைசியில் தண்டுவடம் போய் படுத்திருக்கிறவர்கள் உண்டு.

என்ன நடந்தது? பலத்த சுழல்காற்று, படகு நிரம்பத்தக்கதாக அலைகளின் மோதல்! அவர்கள் ஆட்டம் அடங்கியது. படகு ஆட்டம் போட்டது. அழிந்து போகப்போகிறோம் என்ற அவல ஓலங்களை
தங்களுக்குள் எழுப்பினார்கள்.

கடைசியாக, ஆண்டவரை எழுப்பினார்கள். தங்களையும் தங்கள் படகையும் முற்றிலும் ஆண்டவருடைய ஆளுகைக்கு ஒப்படைத்தார்கள். காற்று நின்றுபோயிற்று. மிகுந்த அமைதல்
உண்டாயிற்று.

இவ்வளவு பிரயாசப்பட்டு அந்த சீஷர்கள் அக்கரையை அடைந்தபோது அவர்கள் கண்டதென்ன? மாற்கு 5 ம் அதிகாரம் இரண்டாம் வசனம் கூறுகிறது. படகிலிருந்து இறங்கினவுடனே அசுத்த ஆவியுள்ள மனுஷன் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். 9-ம் வசனம் சொல்லுகிறது; ‘அவன் பெயர் லேகியோன்’ (நாங்கள் அநேகர்). ஆண்டவராகிய இயேசுவோடு அக்கறைக்குச் செல்லுங்கள். அப்போது மட்டும் தான் நீங்கள் காக்கப்படுவீர்கள். அவர்களும் (அந்த அநேகரும் ) இரட்சிக்கப்படுவார்கள். மாற்கு 5 -ம் அதிகாரம் 21-ம் வசனம் பாருங்கள்.

இயேசு படகில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்தில் இருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள். இயேசு திரும்பி வந்தார் என்று வசனம் சொல்லுகிறது. சீஷர்கள் திரும்பி வந்தார்களா? அவர்கள் அக்கரையிலேயே இருந்துவிட்ட்டார்களா? இல்லை அவர்களும் அவருடன் வந்தார்கள்.

திரளான ஜனங்கள் இயேசுவுக்காக இங்கும் காத்திருக்கிறார்கள்.

ஜீவிக்கிற இயேசு உன் உள்ளத்தில் இருக்கிறார். அதுவே உன் சொந்த தேசம். ஜெபியுங்கள். செயல்படுங்கள்.

அக்கரைக்கு இக்கரை பச்சை!

கட்டுரை ஆசிரியர் எழுதிய வழிப்போக்கனின் வார்த்தைகள் புத்தகத்திலிருந்து தொகுத்து வழங்கியவர் பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் – ஜீவத்தண்ணீர் ஊழியங்கள், மதுரை -14