விதவைகளின் நாள்
ஜூன்- 23  என அறிந்தேன்
வேதனையுடன்
வேதத்திற்குள் நுழைந்தேன்


எனக்குள் ஒரு சத்தம்,

எதைப் பற்றி எழுத?
யாரைப் பற்றி எழுத?

இரண்டு குமாரர்களையும்
அடமானமாய் கூட்டிச்செல்ல
கடன்காரர்கள்
வாசல்வரை வந்துவிட்டபோது,


எலிசா தீர்க்கதரிசியின்
இருப்பிடம் தேடி, ஓடி
வாலிபப் பிள்ளைகளைக்
அவர்களிடமிருந்து  
காப்பாற்ற
அனற் புழுவாய்த்
துடித்தாளே,


அந்தத் தீர்க்கதரிசியின்
மனைவியைப் பற்றி எழுதவா?

(2 இராஜாக்கள் 4:1-7)

அல்லது

தேவாலயத்தை விட்டு
நீங்காமல் இரவும் பகலும்
இயேசுவின் முதலாம்
வருகை வரை
உபவாசித்து ஜெபித்து
ஆராதனை செய்த
84 வயது நிரம்பிய
உத்தம விதவையான
அந்த பானுவேலின் குமாரத்தி
அன்னாளைப் பற்றி
எழுதவா?
(லூக்கா 2:36,37)

சாப்பிட்டுச் சாக
நினைத்தவளைக்
கூப்பிட்டுக் குறைதீர்த்தாரே
அந்த சாறிபாத்
விதவையைப் பற்றி
எழுதவா? 

(1 இராஜாக்கள் 17 :1-16)

அல்லது

ஆலயத்திற்குள் நுழைந்து தனது
ஜீவனத்திற்கென்று  வைத்திருந்த
அந்த இரண்டு காசையும்
காணிக்கைப் பெட்டியில்
போட்டுவிட்ட
அந்த ஏழை விதவை
(காணிக்கை மேரியைப்)
பற்றி எழுதவா?

(மாற்கு 12 :42-44)

நடுரோட்டில் இயேசுவை
சந்தித்ததால்
மகனின் சாவை
வென்று
ஜீவனைப் பெற்றுவிட்ட 
நாயீன் ஊர் விதவையைப்
பற்றி எழுதவா?

(லூக்கா 7:11-17)

அந்த அநீதியுள்ள
நியாயாதிபதியிடம்
ஓயாமல் ஓடிவந்து
நியாயம் கேட்ட அந்த
ஆதரவற்ற விதவையைப் பற்றி
எழுதவா? (லூக்கா 18:3-5)

அல்லது

தொற்காள் தையல் பள்ளி
உரிமையாளரும் சீஷியுமான,

மரித்துப் போன அந்த
தொற்காளைச் சுற்றி நின்று
பேதுருவிடம்
அங்கிகளைக் காண்பித்து  
அழுதுகொண்டிருந்த
அந்த விதவைகளைப்
பற்றி எழுதவா?

(அப்போஸ்தலருடைய
நடபடிகள் 9 :38-42)

சரி. இனியும்
எழுதவா? எழுதவா?  
என்று கேட்டு உங்களை
சோதிக்க விரும்பவில்லை

சாப்பிட்டுச் சாக
நினைத்தவளைக்
கூப்பிட்டுக் குறைதீர்த்தாரே!

அந்த சாறிபாத்
விதவையைப் பற்றி
எழுதுகிறேன்.

இந்த விதவையைக் குறித்து
லூக்கா 4 : 25, 26ல்  இயேசு
சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்


எலியாவுக்கு திடீரென்று
ஒருநாள் இடமாற்ற உத்தரவு
பரத்திலிருந்து கேரீத் ஆறு
விலாசத்திற்கு வந்துவிட்டது!

என்னது?

விலாசத்திற்கா?

இப்படி நீங்கள்
கேட்பது புரிகிறது

இன்றைக்கு E-Mail
அன்றைக்கு விண்-மெயில்
(விண்ணகத்திலிருந்து
பறந்து வந்த V-Mail)

இன்றைக்கு On line
அன்றைக்கு Dream line

மரியாளைத் தள்ளிவிடாதே
என்று யோசேப்புக்கு
கர்த்தர் கனவு மூலமே
(Dream line) உத்தரவு

பிறப்பித்தார்  (மத்தேயு 1:20)

நீ எழுந்து சீதோனுக்கடுத்த
சாறிபாத் ஊருக்குப் போய்
அங்கே தங்கியிரு; உன்னைப்
பராமரிக்கும்படி அங்கே
இருக்கிற ஒரு விதவைக்குக்
கட்டளையிட்டேன் என்று
(1 இராஜாக்கள் 17:9)
விண்-மெயில் மூலம்
உத்தரவு பிறப்பித்தார்
 

சாரி
ஆண்டவரே,
சாறிபாத் ஊருக்கு
என்னால் போகமுடியாது
என்று சொல்லாமல்  

தமக்குச் சித்தமான
வேறு யாரையாவது
அனுப்பும் என்று
மோசே போல
சாக்குப் போக்கு
சொல்லாமல்
மாறுத்தரம் பேசாமல்,

பேசாமல்
உடனே புறப்பட்டுப்
போய்விட்டார் எலியா

அங்கே
ஒலிமுக வாசலில்
ஒரு ஸ்திரி விறகு பொறுக்கிக்
கொண்டிருந்தாள்

எலியா விலாசத்துடன்
வரவில்லை
விசுவாசத்துடன்
வந்திருந்தார்


வறுமையின் உச்சக்கட்டம்
எளிமையும் சிறுமையும்
அவளது உடன்பிறந்த
சகோதரிகளாக
இருந்த காலம்
இல்லை இல்லை
இருண்ட காலம்

மகனைத் தவிர மற்ற
எல்லாம் மண்ணுக்குள்
மறைந்து போனது
போன்ற நிலை    

நெருங்கின சொந்தம்
நொறுங்கின சொந்தம்

தூரத்துச் சொந்தம்  
தொடர்பு எல்லையைவிட்டு
தூரம்போன சொந்தம்

அவளது கதவில்லா
வீட்டுக்குள்
பானையின் அடித்தளத்தில்
கொஞ்சம் மாவு
தரைதட்டியிருந்தது


கலசத்தில் கொஞ்சம்
எண்ணெய்
மீதமிருந்தது

தரித்திரம்
வீட்டிலும் நாட்டிலும்
தாண்டவமாடிக்
கொண்டிருந்தது

மாவையும்
எண்ணெயையும்

ஏன் விட்டுவிட்டுச்
செல்லவேண்டும்?

இரண்டே இரண்டு
விறகை பொறுக்கி
அப்பத்தைச் சுட்டுச்
சாப்பிட்டுச் சாகலாம் என்று
நினைத்திருந்தாள்


அடுத்த நாளைக்கு சாப்பிட
ஏதுமில்லாத நிலையில்
சாப்பிட்டுச் சாக
நினைத்தவளை
எலியாவைக் கொண்டு
அன்றையதினம் கூப்பிட்டு
குறையைத் தீர்த்து
தேவன் அற்புதம் செய்தார்.


எலியா கேட்டது
தண்ணீர்

கண்ணீரும் தண்ணீரும் 
அவளிடம் ஏராளம் இருந்ததே

அந்த சாறிபாத்
விதவையையும்
அவளது அன்பு மகனையும்
கர்த்தர் தமது
தீர்க்கதரிசி எலியா மூலம்
சந்தித்து அற்புதம் செய்து
பஞ்ச காலம் முழுதும்
பாதுகாத்தார்

அன்றையதினம்
அவளது
தவிப்பும் சலிப்பும்
களைப்பும் இளைப்பும்

வல்லமையான தீர்க்கதரிசியின்
வரவால் மாற்றம் கண்டுவிட்டது

வாழ்க்கையை முடித்து வைக்க
பஞ்சம் தீவிரித்தது

வாழ்க்கையை துவக்கி வைக்க
கர்த்தர் தீர்க்கதரிசியை
தீவிரமாய் அனுப்பிவைத்தார்.

சாறிபாத் விதவை
இந்த ஜூன் 23 ம் நாளில்
அகில உலக விதவைகளின்
தினத்தில்
உத்தம விதவைகளின்
வரிசையில்
வரிந்துகட்டிக்கொண்டு
வலம் வருகிறாள்  


சாறிபாத் போகணுமா?
பாஸ்போர்ட் இல்லாமல்
விசா இல்லாமல் போக
ஒரு வழி இருக்கிறது

www.1kings17thch.org

வேதாகமத்திற்குள்
நுழைந்து செல்லுங்கள் 

அங்கே அந்த
அம்மையாரைக்காணலாம்

அவள் மரிப்பதை
விரும்பாமல்

அவளைப்
பராமரிப்பதை
தேவன் விரும்பினார்

இது,
அந்த சாறிபாத் WIDOW – வுக்கு
தேவன்
திறந்துகொடுத்த WINDOW 

அன்றைக்கு
அந்த விதவைக்காக
தேவன் பலகணிகளைத்
திறந்துகொடுத்தார்
(மல்கியா 3:10)

திக்கற்றவர்களாய்ப்போகும்
உன் பிள்ளைகளை ஒப்புவி,
நான் அவர்களை உயிரோடே
காப்பாற்றுவேன்;
உன் விதவைகள்
என்னை நம்புவார்களாக.

(எரேமியா 49:11)

வாசிக்கும் பழக்கத்தை
விட்டுவிடாதீர்கள்

எனது எழுத்து
ஊழியத்தையும்
மறந்துவிடாதீர்கள்

ஜெபியுங்கள்.

வாசித்தமைக்கு நன்றி.

பாஸ்டர்
ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,
நல்லாசான் – சர்வதேச விருது – மலேசியா 2021
Director – Literature Department, tcnmedia.in
Radio Speaker – Aaruthal FM