மனித சமுதாயம் மாபெரும்
முன்னேற்றம் கண்டிருந்தாலும்
மனிதனை மனிதன்
நிதானிக்கும் சாமர்த்தியத்தில்
தோல்விதான் காண்கிறான்


இருதயங்களை ஆராய்ந்து
அறிகிற தேவன் ஒருவரே. 

மனிதனுடைய வார்த்தைகளுக்கும்
அவன் செயல்களுக்கும் தான்
எவ்வளவு வித்தியாசம்?


இறைமக்களை வழிநடத்திச்
செல்லும் பொறுப்பை எடுத்துக் கொண்ட  
வேதபாரகரையும் பரிசேயரையும்
மாயக்காரரே என்று அழைக்கிறார்

உங்களுக்கு ஐயோ!
என்று சபிக்கிறார்

அத்தோடு நின்று விடாமல்
அவர்களைப் பற்றி
சிறிய விமர்சனமும் செய்கிறார்

எப்படிப்பட்ட திறனாய்வு சொற்கள்?
குருடரான வழிகாட்டிகளே
என்றார்

மக்களில் கண்பார்வை தெரியாத
குருடர்கள் இருக்கிறார்கள்
அவர்கள் எத்தனையோ
தொழில் செய்து எப்படியோ வாழலாம்.
எங்கெங்கே  என்ன இருக்கிறது
எப்படி இருக்கிறது என்றும்
எந்த இடத்திற்கு எப்படி போகலாம் என்றும்
வாய்மொழியாகச் சொல்லலாம்

ஆனால் என்னைப் பின்பற்றி வா
நான் அழைத்துச் செல்கிறேன் என்றால்
அது பிரச்சனைதானே!


நான் சில ஆண்டுகளுக்கு முன்பு
இஸ்ரவேல் தேசத்திற்கு சென்றேன்.


வேதாகம கால நிகழ்வுகளை
சுட்டிக்காட்டும் இடங்களுக்கு
அழைத்துச் செல்லும்படி
ஒரு வழிகாட்டி (Guide)
நியமிக்கப்பட்டிருந்தார்

ஒவ்வொரு இடங்களுக்கும்
அழைத்துச் சென்று
அற்புதமாக விளக்கம் அளித்தார்
.


வேதாகம வசன வரிகளோடு
வரலாற்றுப் பின்னணியத்துடன்
விவரித்ததை கேட்ட ஒவ்வொருவரும்
மெய்சிலிர்த்துப் போனார்கள்

வேதாகம காலத்துச் சம்பவங்களை
அப்படியே எங்கள் கண்முன்
கொண்டுவந்து வைத்து விட்டார்


எல்லோருக்கும் மகிழ்ச்சி
அந்த வழிகாட்டி
யூத குலத்தை சேர்ந்தவர்

கடைசியாக அவரைப் பார்த்து
நான் ஒரு கேள்வி கேட்டேன்
இவ்வளவு ஆழமாக ஆண்டவர்
இயேசு காலத்துச் சம்பவங்களை
விவரிக்கிறீர்களே,
அந்த இயேசுவை மேசியா என்று நீங்கள்
உண்மையாக அறிக்கை செய்கிறீர்களா?


அவர் மெல்லச் சிரித்தார்
அடுத்து மெதுவாக என்னிடம்
தனியாக வந்தார்
‘’எல்லோரும் இருக்கும்போது
என்னிடம் அந்த கேள்வியை  
நீங்கள் கேட்டிருக்க கூடாது’’
என்று சொல்லிவிட்டு
மெல்லிய குரலில் மேலும் சொன்னார்;

‘’என்னை மன்னித்து கொள்ளுங்கள்
நான் இயேசுவை மேசியாவாக
ஏற்றுக்கொள்வதில்லை’’


இவர் இப்போதும்
இயேசு வாழ்ந்த நாட்டில் தான் வாழ்கிறார்
இயேசு சென்ற இடங்களுக்கெல்லாம்
இன்றும் வழிகாட்டியாக அனைத்து நாட்டு
மக்களையும் வழிநடத்திச் செல்கிறார்

ஆண்டவர் அருளிய  அருளுரைகளை
அள்ளி வீசுகிறார்
இவரை எப்படி அழைப்பது?

 
ஆண்டவர் அன்று  சொன்னார்
இன்றும் சொல்லுகிறார்
குருடரான வழிகாட்டிகளே

எங்கோ இருப்பவர்களைப்
பார்த்துச் சொல்லவில்லை

ஆலயத்தை சுற்றி வருபவர்களை,
பார்வைக்காகவும்,
பெருமைக்காகவும் மட்டும்
வேத புத்தகத்தை  கையிலும்
பையிலும் மாறி மாறி வைத்திருப்பவர்களை  
தங்களை பரிசுத்தவான்களைப் போல
பார்வையிலும்   பாவனையிலும்
பேச்சிலும் மட்டும் காட்டிக்கொண்டு
மாயையில் வாழ்பவர்களை
அதாவது  பரிசேயரைச் சொல்கிறார்
வேதபாரகரைப் பார்த்துச் சொல்லுகிறார்


மேலும் அவர்களைப் பார்த்து
என்ன சொல்லுகிறார்?

கொசு இல்லாதபடி வடிகட்டி
ஒட்டகத்தை  விழுங்குகிறவர்களாக
இருக்கிறீர்கள்

மத்தேயு 23 :24  

கொசுவை வடிகட்ட
அந்த நாள் முதல் இந்த நாள் வரை
மனிதன் பிரயாசைப்பட்டும்
வெற்றிபெறவில்லை


வீட்டிற்கு வீடு கொசுவிற்கு பயந்து
ஜன்னலுக்கும் வாசல்  கதவுகளுக்கும்
வலை கட்டி, வடித்து விடப்பார்க்கிறார்கள்
முடிகிறதா?
கொசுவால் வரும் வியாதிகள்
ஒழிந்தபாடில்லையே!


சிலருக்கு ஒரு கொசு வீட்டிற்குள்
வந்துவிட்டால் போதும்,
கதவைத் திறந்தவர்களை
ஏசுவார்கள், பேசுவார்கள்.
குதி குதியென்று குதிப்பார்கள்


வீட்டையே சூரையாடும்
ஒரு பக்காத் திருடன் வீட்டிற்குள்
ஒட்டகம் போல வந்து போவான்.
அவனைக் கண்டுகொள்ளமாட்டார்கள்


விட்டுவிட வேண்டிய அற்பமான ஒரு
பாரம்பரிய காரியம்
ஒரு எளிய விசுவாசியிடம் இருக்கும்.
அதை ஜெபத்தோடு பக்குவமாக
அவரிடம் எடுத்துக்கூறி நல்வழிக்குக்
கொண்டுவந்துவிடலாம்.

ஆனால் அதை விடுத்து
தங்கள் பரிசுத்தத்தைப்
பறைசாற்றுவதுபோல்
அவர்களைக் குத்திக்குத்தி
பேசித் துன்புறுத்துபவர்களும் 
இருக்கத்தான் செய்கிறார்கள்
.

இவர்கள் யார்?

ஓசைப்படாமல்  ஒட்டகங்களையே
விழுங்கி ஏப்பம் விடுபவர்கள்.
இவர்கள் கண்கள் கொசுக்களைக்
கவனமாய்ப் பார்க்கும்.
இவர்கள் வயிறோ ஒட்டகங்களால் நிரம்பும்.


பத்து ஒட்டகங்கள் நிறைய
(ஆதியாகமம் 24:10)
கொண்டுபோனாலும்
இவர்களுக்குப் பத்தாது. 

இதற்குக் கொடு, அதற்குக் கொடு
என்று ஞாயிறுதோறும்
கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

 
ஒட்டகம் அசுத்தமானது.
விழுங்குவதற்கு உகந்ததல்ல
என
உபாகமத்தில் (14:7)
வேறுபிரித்து வைத்தார்.

அது நேரான வழியில்
சீராக ஓடாது
என்று
எரேமியாவில் (2:23)
காண்கிறோம்.
 
உள்ளமோ ஒழுங்கற்று
வாழ்க்கையில் தாறுமாறாக
ஒட்டகத்தைப் போல்
ஓடிக்கொண்டிருக்கிறது.

 
கண்களோ கொசுவை
வடிகட்டக் கவனமாக இருக்கிறது.


உன்  கண்களிலிருக்கிற
உத்திரத்தை எடுத்துவிட்டு
பிறர் கண்களில் இருக்கிற
துரும்பைப்பார்
மற்றவர்களை உபத்திரவப்படுத்தாதே

உருவத்திலும் நடையிலும் ஒழுங்கற்று
பெரிதாக இருக்கும் ஒட்டகம்
உன்  உள்ளத்திற்குள் போய்விடாது
பார்த்துக்கொள்


கொசுக்கடியைத்  தாங்கி கொள்ளலாம்
ஆனால் ஒட்டகத்தை விழுங்குகிறவர்களை
(ஒட்டகக் கறி சாப்பிடுகிறவர்களை அல்ல)
சமுதாயம் தாங்கிக்கொள்ள முடியாது
காலம் அவர்களை காட்டிக்கொடுக்கும்

கொசு போன்ற குறைகளும்
குற்றங்களும்
ஒரு   சமுதாயச் சிக்கல்
ஜெபத்துடன் உறுதியாக நின்றால்
தீர்த்துவிடலாம் 


ஒட்டகத்தை விழுங்குதல் என்பது
சாதாரண விஷயமல்ல

ஆண்டவரிடத்தில்  போய்
அற்புதமான  கேள்விகளைக் கேட்டும்
ஆசிர்வாதத்தை பெறாமல்
துக்கமடைந்தவனாய்  
திரும்பிய ஆஸ்தியுள்ள
வாலிபனை போன்றது
(மத்தேயு 19 22)

 
பிறரது  அற்பமான குற்றம்
குறைகளைப் பெரிதுபடுத்தாது
மன்னியுங்கள்

உங்கள் நடைகளை
உறுதிப்படுத்திக்
கொள்ளுங்கள்


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்  
எழுதியவர்
பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
 *****************************************
தொகுப்பு
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,
இயக்குனர் – இலக்கியத் துறை (tcnmedia.in)
Radio Speaker – Aaruthal FM

குறிப்பு: ஜீவதண்ணீர் மாத இதழில்
பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் அவர்கள்
எழுதிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு
2004 ல் வழிப்போக்கனின் வார்த்தைகள்
என்ற தலைப்பில் முதல் புத்தகமாக வெளிவந்தது.

அதிலிருந்து எடுத்து தமிழ் கிறிஸ்டியன் நெட்ஒர்க்
வாசகர்களுக்கு வாரி வழங்குவதில்
மகிழ்ச்சியடைகிறேன்.
வாசித்தமைக்கு நன்றி.
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்