மெனே, மெனே, தெக்கேல்!

“நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்” (தானி. 5:27).

கர்த்தருடைய தராசு எப்பொழுது ஒரு மனுஷனை நியாயத்தீர்ப்பிலே நிறுத்தும் என்று தெரியாது. சிலருடைய பாவங்கள் கடைசி நியாயத்தீர்ப்பிற்கு முந்திக்கொள்ளுகிறது. சிலருக்குப் பூமியிலேயே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுகிறது.

பெல்ஷாத்சார் ராஜாவின்மேல், திடீரென்று கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வந்தது. அவன் தன் மனைவிகளோடும், வைப்பாட்டிகளோடும் குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தான். எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன், வெள்ளி, பாத்திரங்களைத் தீட்டுப்படுத்தினான். மட்டுமல்ல, பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட விக்கிரகங்களை புகழ்ந்து போற்றி கர்த்தரை அவமதித்தான்.

அப்போது கர்த்தருடைய கையுறுப்பு சுவரிலே தோன்றி, “மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்” (தானி. 5:25) என்று எழுதினது. அதற்கு ‘தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினார். நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறையக் காணப்பட்டாய். உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது’ என்று அர்த்தமாகும். தேவபிள்ளைகளே, உங்கள் ஜீவியம் கர்த்தருக்கு முன்பாய் நிறைவுள்ளதாய் காணப்படுகிறதா? அல்லது குறைவுள்ளதாய் காணப்படுகிறதா? பழைய ஏற்பாட்டில், “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டும் இருக்கிறது” (1 கொரி. 10:11).

பெல்ஷாத்சார் தன்னுடைய பெயர், புகழ், உடமைகள் எல்லாவற்றையும் குறித்து மேன்மைப் பாராட்டி, அந்நிய தேவர்களைப் புகழ்ந்து கொண்டிருந்தானே தவிர, தேவ பக்தியுள்ளவனாக இருக்கவில்லை. இன்றைக்கு நீங்கள் உலகப் பிரகாரமான பெருமைகளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்களா?

தேவ பக்தியிலிருந்து வழுவிக்கொண்டிருக்கிறீர்களா? வேதம் சொல்லுகிறது, “மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மை பாராட்டுங்கள்” (பிலி. 3:3). உலகப்பிரகாரமான சந்தோஷத்தையும், களியாட்டுகளையும் மேன்மை பாராட்டுகிறவர்கள் பாவத்தால் தங்களுடைய சரீரத்தை தீட்டுப்படுத்துகிறார்கள். மண்பாண்டமான சரீரத்திலே மகிமையான பொக்கிஷத்தைப் பெற்றிருக்கிற நீங்கள் ஒருபோதும் அதை தீட்டுப்படுத்தவே கூடாது.

உங்களிலே சிலர் கனத்திற்குரிய அல்லது கனவீனத்திற்குரிய பாத்திரங்களாக இருக்கலாம். வேதம் சொல்லுகிறது: “ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திக்கரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும் எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்திற்குரிய பாத்திரமாயிருப்பான்” (2 தீமோ. 2:20,21).

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய பாதத்தில் காத்திருந்து உங்களுடைய வழிகளை ஆராய்ந்து பாருங்கள்.

நினைவிற்கு:- “நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” (வெளி.2:5).