சிறு தியானம்

“இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்”. அப் 18:10

எதிர்ப்புகள் நிறைந்த கொரிந்து பட்டணத்தில், தேவ மனிதனாம் பவுலைக் கொண்டு தமது சபையை ஸ்தாபித்தார் சர்வ வல்லமையுள்ள நமது தேவன்.

எதிர்ப்புகள் எழுப்புதலுக்கான முன்னடையாளமே தவிர, எதிர்ப்புகளால் தேவனுடைய கிரியையை ஒருபோதும் முடக்கிப் போட முடியாது என்பதை நாம் மறக்கக் கூடாது.

கொரிந்துவிலே தேவகிரியை வெளிப்படக் காரணமென்ன???

1.தேவன் நியமித்த இடத்திற்கு வந்துவிடு.

” பவுல் கொரிந்து பட்டணத்துக்கு வந்து” அப் 18:1. யோவான் ஸ்நானன் இருந்த இடம் வனாந்திரம், ஆனால் அது தேவன் அவனுக்கு நியமித்த இடம். லூக் 1:80. வனாந்திரத்திலிருந்து பட்டணங்களை அசைத்தான் இந்த யோவான். சரியான இடத்தில் நீ இருந்தால், சரியானவைகளை காண்பாய்.

2.தேவன் இணைக்கும் உறவுகளில் இணைந்திடு.

“ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு” அப் 18:2

யோசபாத் தெரிந்துக் கொண்ட ஆகாப் என்னும் ஆகாத உறவானது, யோசபாத்தின் மீது தேவனுடைய கோபத்தைக் கொண்டு வரவிருந்தது. 2நாள 18:1,19:1-3.

தேவன் இணைக்காத உறவுகள் நம்மைவிட்டு அகலும்போது, நமது தரிசனத்தின் எல்லைகள் விசாலமாகும். ஆதி 13:14-17. தேவன் இணைத்த உறவுகளை நாம் சந்திக்கும்போது, நமது உள்ளான ஆவிக்குரிய பெலன் பெருகும். அப் 18:5, 2கொரி 7:2.

3.தேவன் சொன்ன வழியில் நடந்திடு.

“அவன் தன் வஸ்திரங்களை உதறி” அப் 18:6. மாமிசத்தோடும் இரத்தத்தோடும் போராடும்படி அழைக்கப்பட்டவர் அல்ல நாம். உன் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாமல், உன்னை எதிர்க்கும் போது, அவைகளை உதறிவிட்டு கடந்து செல். மத் 10:14. எதிர்ப்போருக்காக ஜெபி. மத் 5:44. எப்பக்கத்திலிருந்தும் வந்திடும் நெருக்கத்திற்கு பவுல் தந்திடும் பெயரென்ன? அது “லேசான” உபத்திரவம். 2கொரி 4:8,9,16,17. எனவே சோர்ந்துபோகாமல், உதறிப்போடுவோம் இந்த “எதிர்ப்புகள்” என்னும் விஷப்பூச்சியை. அப் 28:5.

கர்த்தர் நம்மோடு இருக்கிறார்.
எங்கும் ஸ்தாபிப்போம்
தேவ இராஜ்ஜியத்தை…

பாஸ்டர். ரீகன் கோமஸ்
Pastor Reegan Gomez