மெத்தூசலா என்ன சாதித்தார்?வித்யா’வின் விண் பார்வை!

மெத்தூசலா என்ன சாதித்தார்?வித்யா’வின் விண் பார்வை!

மரியாள் தன்னால்
இயன்றதைச் செய்தாள்
(மாற்கு 14:8)

மார்த்தாளின் சகோதரி மரியாள்
எதைத் தெரிந்துகொண்டாள்?

தன்னைவிட்டு எடுபடாத
நல்ல பங்கைத்
தெரிந்துகொண்டாள்
(லூக்கா 10:42)

மெத்தூசலா என்ன செய்தார்?
எதைத் தெரிந்துகொண்டார்?


மெத்தூசலாவுடைய நாளெல்லாம்
தொள்ளாயிரத்து  அறுபத்தொன்பது வருஷம்;
அவன் மரித்தான் (ஆதி.5:27)

பெயருக்கு அர்த்தம்
அவன் மரிக்கிறான்
அல்லது “வேல் உடையவன்”
என்று அர்த்தம்   


969 வருஷம் வாழ்ந்த
வேல் உடையவன்
என்ன செய்தான் என்றால்
அவன் மரித்தான்


பெயருகேற்றபடி
வாழ்ந்திருக்கிறார்!

இன்றைக்கு இருக்கிறபடி
கின்னஸ் சாதனை புத்தகம்
இருந்திருக்குமானால் அதிலே
காலத்தை வென்றவர்
என்ற பட்ட்டியலில் 
இடம்பிடித்திருப்பார்  


சரக்கு ரயில் வண்டியைப் போல
நீண்ட காலம் வாழ்ந்து
குமாரர்களையும்
குமாரத்திகளையும்
நூற்றுக்கணக்கில் பெற்றான்.

பெற்றான், பெற்றான், பெற்றான்
என்பதைவிட  “வேல் உடையவன்”
வேறு ஏதாவது செய்தாரா?
என்று அலசிப் பார்த்தால்
குறட்டை சத்தம்தான் கேட்கிறது!


இவருடைய அப்பா ஏனோக்கு,
தன் மகனுடைய வயதில்
பாதி கூட வாழவில்லை
ஆனால் இன்னமும் மரிக்கவில்லை

365 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து
மரணத்தைக் காணாமல்
பரலோகத்திற்குள்
நுழைந்துவிட்டார்


அப்பா  ஏனோக்கு
தேவனோடு சஞ்சரித்தார்

மகன்,  மெத்துசொத்துக்களோடு,
பேரப் பிள்ளைகளோடு,
ஆடு மாடுகளோடு,
உள்ளூர் வாசிகளோடு,
உற்றார் உறவினரோடு சஞ்சரித்து
வேறு ஒரு சாதனையும் படைக்காமல்
தேராகு போல, மரித்துப்போனார்


தேராகு, தேறாமலே போனார்
அவருடைய வாழ்நாள் 205 வருடம்

இவரது மகனான ஆபிரகாம்
விசுவாசிகளின் தகப்பன் என்ற
சிறந்த பட்டத்தை
தேவனிடமிருந்து பெற்றான்


ஆதியாகமம் 5 -ம் அதிகாரத்தில்
எட்டு முறை
அவன் மரித்தான்

என்ற சொற்றொடர் இடம்பெற்றுள்ளது

மரித்தான் என்று சொல்லப்படுவதற்கு முன்
பாவத்திற்கு மரித்தான் என்று
சொல்லப்படுமா?

மரித்தான் என்று சொல்லப்படுவதற்கு முன்
நீதிக்குப் பிழைத்திருக்கிறான் என்று
எழுதப்படுமா? 


திரும்பிப் பாருங்கள்,   
தின்று தீர்த்த காலங்களை
போக்கடித்த நாட்களை
தூங்கிக் கழித்த மணி நேரங்களை


சிந்திக்க வேண்டுகிறேன்

மரியாளைப் போல
இயன்றதைச் செய்தீர்களா?

அந்த காணிக்கை மேரியைப் போல
இருந்ததைத் தந்தீர்களா?
(மாற்கு 12:42)

இளைப்பாறுதல் என்ற
அர்த்தத்தை உடைய
நோவா இளைப்பாறவில்லை

மாறாக ,
பேழையைக் கட்டி (ஆதி. 6:22)
பிரசங்க ஊழியத்தைச் செய்தார்


மெத்தூசலாவின் பேரனான நோவா
தன் காலத்தில் இருந்தவர்களுக்குளே
நீதிமானும் உத்தமனுமாயிருந்தான் (ஆதி.6:9)

தன் காலத்தில் வாழ்ந்தவர்களுக்குள்
நோவாவின் தாத்தா, மெத்தூசலா
ஏன் மவுனம் சாதித்துள்ளார்?


ஓ, மவுனம் கூட ஒரு சாதனை என்று
எண்ணினாரோ?

எல்லா மனிதர்களைவிட
மிக நீண்ட காலங்கள் வாழ்ந்து
தேவ மகிமைக்கென்று
எதையுமே செய்யவில்லை


ஒருவேளை  
வீட்டை கட்டியிருப்பார்
காட்டை வாங்கியிருப்பார்

ஆனால் பேரனைப் போல
கிருபையை வாங்காமல்
கோட்டையை விட்டுவிட்டாரே

நோவாவைப் போல
நம் காலத்தில் இருப்பவர்களுக்குள்
நீதியாய் வாழ்வோம்

உத்தமனாய் இருப்போம்

காலத்தை வெறுமனே கடத்தினால்
காலம் நம்மை வெறுமனே  கடத்திவிடும்


ஆதலால், தூங்குகிற நீ விழித்து ,
மரித்தோரை விட்டு எழுந்திரு
அப்பொழுது கிறிஸ்து உன்னைப்
பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்

ஆனபடியினாலே, நீங்கள்
ஞானமற்றவர்களைப் போல
நடவாமல்
ஞானமுள்ளவர்களைப் போல
கவனமாய் நடந்துகொள்ள பார்த்து
நாட்கள் பொல்லாதவைகளானதால்
காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்
(எபேசியர் 5:14-16)

நாம் தேராகு அல்ல,
தேறாமல் போவதற்கு


நாம் மெத்தூசலா அல்ல,
பெற்றான் பெற்றான் என்று மாத்திரம்
சொல்லப்படுவதற்கு…


நாம் ஒரு ஏனோக்கு
தேவனோடு  சஞ்சரிக்கிறவர்கள்,
நாம் ஒரு ஆபிரகாம்
விசுவாசத்தை காத்துக்கொள்கிறவர்கள்

உங்கள் நாட்களை எண்ணவேண்டாம்
ஆனால் உங்கள் நாட்களை
எண்ணத் தகுந்தவையாக்குங்கள்


ஒவ்வொரு நாளும் உங்களுடைய
மிகச் சிறந்த சாதனையின்
நாளாக
 இருக்கட்டும்

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
இயக்குநர்  – இலக்கிய துறை
தமிழ் கிறிஸ்டியன் நெட்ஒர்க்