1) சரீர பெலவீனங்கள் / வியாதிகள் / சோர்வுகள் தடையாக இருப்பதால் நீண்ட நேரம் ஜெபிக்க விருப்பம் இருந்தும் சரீரம் ஒத்துழைப்பது இல்லை. எனினும் தூங்கிகொண்டிருந்த சீஷர்களை பார்த்து இயேசு கிறிஸ்து “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.” (மாற்கு 14:38)
2) சிலருக்கு ஜெபிக்க ஆர்வமில்லாதபடியால் கடமைக்காக சில நிமிடங்கள் ஜெபித்துவிட்டு திருப்தியடைந்துவிடுகிறார்கள். நீண்ட நேரம் ஜெபிக்க முதலில் ஜெபத்தின் மீது ஆசை, விருப்பம் வேண்டும். ஆர்வமில்லாத எந்த செயலிலும் நம்மால் நீண்ட நேரம் ஈடுபாடு கொடுக்க இயலாது.
3) ஜெபத்தை பாரம்பரியமாக அல்லது மந்திர ஸ்லோகனாக மாற்றியவர்களால் நீண்ட நேரம் ஜெபிக்க இயலாது. உதாரணத்திற்கு “பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே” உட்பட சில ஜெபங்களை எழுதி வைத்து ஜெபித்து பழகியவர்களால் நீண்ட நேரம் ஜெபிக்க இயலாது.
4) ஜெபத்தின் மேன்மை தெரியாதவர்கள் ஜெப நேரத்தை உதாசினப்படுத்திவிடுகின்றனர். அல்லது அற்பமாக எண்ணி பிற வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடுகின்றனர். இப்படிப்பட்டவர்களிடம் நீண்ட நேரம் அல்ல குறுகிய நேர ஜெபம் கூட இருப்பதில்லை.
5) ஜெபத்திற்கான பதிலை உடனடியாக பெறாதவர்கள் ஜெபத்தின் மேலுள்ள நம்பிக்கையை இழந்துவிடுகின்றனர். இதனால் தொடந்து ஜெபிக்க அல்லது நீண்ட நேரம் ஜெபிப்பதை விரும்புவதில்லை. “ஜெபித்து என்னத்தை கண்டோம்” என்ற மனநிலை.
6) ஜெபத்தின் வகைகள் தெரியாததால் அல்லது ஜெபத்தின் முறைகள் தெரியாததால் நீ்ண்ட நேரம் ஜெபிக்க முடிவதில்லை. ஜெபத்தில் பல பகுதிகள் உண்டு. உதாரணமாக பாவமன்னிப்பு, துதி, ஆராதனை, வேண்டுதல், விண்ணப்பம், பரிந்துபேசுதல், திறப்பிலே நிற்பது, ஜாமக்காரனாக செயல்படுவது, போாடுவது, கெஞ்சுவது, வசனத்தை அறிக்கையிடுவது, விசுவாசத்தை பிரகடனம் செய்வது, தேவ பதிலுக்காக காத்திருப்பது போன்ற பல்வேறு நிலைகளை கற்றுக்கொண்டு அனுபவமாக்கும் போது ஜெப நேரம் இிமையாக மாறும்.
7) நீண்ட நேரம் ஜெபிக்க முடியாதபடி கவனசிதறல் தடைசெய்கிறது. கவன சிதறலை ஏற்படுத்தும் காரியங்களுக்கு விலகியிருங்கள். ஜெப நேரத்தில் செல்போனை அணைத்துவிடுங்கள். ஆட்கள் நடமாட்டமில்லாத அறைகளை/ இடங்களை தெரிவு செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் ஜெபிக்காமல் உங்கள் ஜெபத்திற்கொன்று ஒரு இடத்தை தேர்வு செய்து அதிலே ஜெபம் பண்ண பழகுங்கள்.
8) நீண்ட நேரம் ஜெபிக்க வேண்டும் என்ற மனநிலையில் போராட வேண்டாம். ஒரே நாளில் 2 மணி நேரம் 4 மணி நேரம் என ஜெபித்துவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்திற்கு கொண்டு வாருங்கள்.
9) போட்டி மனநிலையிலோ, பெருமைக்காகவோ நீண்ட நேரம் ஜெபிக்காதிருங்கள். அவ்வித ஜெபங்களினால் எவ்வித பிரயோஜனமும் இல்லை. அவர்கள் 2 மணி நேரம் ஜெபிக்கிறார்களா!! நான் 4 மணி நேரம் ஜெபித்து சாதிக்க போகிறேன் என்ற மனநிலை அடிப்படையில் தவறானது.
10) எவ்வளவு தான் மாம்சத்தில் நாம் ஜெபிக்க முற்பட்டாலும் ஒரு குறிப்பட்ட எல்லைக்கு மேல் ஜெபிக்க முடியாது. நம்மை நீண்ட நேரம் ஜெபிக்க வைக்க பரிசுத்த ஆவியானவர் உதவி செய்கிறார். நடக்கவிருக்கும் காரியங்களை வெளிப்படுத்தி அவரே நம்மை ஜெபத்தில் நடத்துவார். நாம் சோர்ந்து போகும் பட்சத்தில் நம் சார்பில் நமக்குள் இருந்து பரிசுத்த ஆவியானவரே வேண்டுதல் செயகிறார். நாம் அனைவரது ஜெபத்திலும் தொய்வில்லாமல் இருக்க பரிசுத்த ஆவியானவரை விரும்பி பெற்றுக்கொள்ள வேண்டும்.
11) இறுதியாக சில வார்த்தைகள்.. ஜெபம் என்பதன் சரியான தமிழ் பதம் உறையாடல் என்பதாகும். உறையாடல் என்பது இருவர் பேசிக்கொள்வது. இன்று நம்முடைய ஜெபத்தில் நாம் மட்டும் தான் பேசுகிறோமா? அல்லது தேவனும் பேசுகிறாரா? சிந்திப்போம்.
12) நாம் எத்தனை மணி நேரங்கள் ஜெபிக்கிறோம் என்பதோ, எப்படிப்பட்ட வசனங்களை பயன்படுத்தி ஜெபித்தோம் என்பது முக்கியமல்ல. இவைகளும் முக்கியம் தான். இதைவிட முக்கியமானது ஜெபிப்பவரின் மனநிலை. நம் மனநிலையில் பாவத்தையோ, தீய நோக்கத்தையோ வைத்து ஜெபிப்பது பதிலை கொண்டுவராத ஜெபமாக மாறிவிடும்.
– திருமதி பிளஸி பெவிஸ்டன் தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க்