இறைவன் தருவது சிறியதல்ல – சிறுவர் நன்னெறி கதைகள்

இறைவன் தருவது சிறியதல்ல – சிறுவர் நன்னெறி கதைகள்

சிறுகதை : இறைவன் தருவது சிறியதல்ல

பிரசித்தி பெற்ற முனிவர் ஒருவர், பக்கத்து நாட்டில் வந்திருக்கிறார், அவர் வேண்டியதை தரும் வரமுள்ளவராம் என்பதை அறிந்த 3 பேர் தங்கள் ஊரிலிருந்து அவரை பார்த்து நன்மைகளை பெற்றுக்கொள்ள பயணம் செய்தனர்.

காடு, மலை தாண்டி, கஷ்டப்பட்டு, உண்ணாமல், உறங்காமல், முனிவர் இருந்த ஊருக்கு போய் சேர்ந்தனர், திரள் கூட்டத்தை பார்த்த இவர்கள், இரவு நேரத்தில் கூட்டம் குறையும் என்பதால் பொறுமையோடு காத்திருந்தனர், இரவும் நெருங்கியது கூட்டமும் கலைந்தது. இவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என தனி கவனிப்போடு நலம் விசாரித்தார் முனிவர். வாழ்வுக்கு தேவையான நிறைய ஆலோசனைகள் வழங்கினார் முனிவர். சரி, நிறையை நேரம் பேசிவிட்டோம், துயிலும் நேரம் நெருங்குகிறது, உங்களுக்கு ஏதாவது நன்மை வேண்டுமானால் கேட்டு பெற்று செல்லுங்கள், ஆனால் ஒன்றிற்கு மேல் கேட்கக்கூடாது என்றார் முனிவர். அதில் ஒருவன் ஒரு கல்லை எடுத்து, ஐயா இதை பொன்னாக மாற்றி தாருங்கள், என் தலைமுறைக்கு போதும் என்றான். அவரும் அதை பொன்னாக மாற்றினார், சந்தோஷத்தோடு, நன்றியோடு அதை பெற்றுக் கொண்டான். இன்னொருவன் ஒரு சாக்கு சருகை (காய்ந்த இலைகள்) எடுத்து, ஐயா இதை பணமாக மாற்றி தாருங்கள், அது போதும் என்றான், அப்படியே அவனுக்கும் நடந்தது. மூன்றாமவன், ஐயா, நீங்கள் எதை எனக்கு தர வேண்டும் என விரும்புகிறீர்களோ அதை தாருங்கள், ஏனெனில், உங்கள் உபதேசத்தில் நாம் விரும்புவதை விட கடவுள் தருவதே சிறப்பானது என்றீர்களே, அதான் இப்படி கேட்கிறேன் என்றான். முனிவரும், உன் வேண்டுதல் நல்லது என்று சொல்லி, கொஞ்சம் மிளகாய் பொடியை ஒரு இலையில் பொதிந்து கொடுத்து, இதை வைத்துக் கொள் என்று சொல்லி ஆசீர் வதித்தார்.மூன்றாமவனுக்கு, தூக்கிவாரிப் போட்டது, கடவுள் சிறப்பானதைத் தருவார் என்றல்லவா உபதேசத்துக்கு கீழ்படிந்தேன். இப்படி ஆகிவிட்டதே என்று சோர்வுற்றான், ஒன்றிற்கு மேல் கேட்கக் கூடாது என்பதால், வேறு வழியில்லாமல் திரும்பினான்.

முட்டாள், முட்டாள், இப்படி ஒரு நல்ல வாய்ப்பை கோட்டை விட்டாயே, பிழைக்க தெரியாதவன் நீ என்று மற்ற இருவரும் இவனை திட்டிக்கொண்டே, தங்களுக்கு பொன்னும் பணமும் கிடைத்த மகிழ்ச்சியில் வீட்டிற்கு வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள்.மூன்றாமவனோ, இப்படியாகிவிட்டதே என்று பல கோணங்களில் சிந்தித்த வாரே, சோர்வுற்று பின் தங்கியவாரே மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.முதல் இருவர் வெகுதூரம் முன் சென்று விட்டார்கள், இவன் தனியே நடந்து வந்து கொண்டிருக்கும் போது. திடீரென ஒரு திருடன் கத்தியோடு பாய்ந்தான், இவனை கொலை செய்து ஏதாவது திருடுவதே அவன் நோக்கமும் வேகமுமாயிருந்தது. செய்வதறியாது திகைத்த இவன் தன் கையிலிருந்த மிளகாய் பொடியை அவன் மீது ஆவேசத்தில் வீசினான். அது சரியாக திருடனின் கண்களில் விழுந்ததால் அவன் நிலைகுலைந்து தடுமாறும் பொழுது அவன் கத்தியை பிடுங்கி அவனை கொலை செய்து எப்படியோ தப்பித்து விட்டான். பயத்தில் மிகவும் நடுங்கியிருந்தாலும், இபபோது கடவுள் தனக்கு செய்த நன்மையை உணர்ந்து, கடவுளைப் போற்றினான். இனி வேகமாக நடப்போம் என முடிவெடுக்கும் வேளையில், அருகில் கவனித்தான், அருகில் மூன்று சாக்கு மூட்டைகள், அதில் திருடன் பல இடங்களில் திருடிய பொன், பணம், இன்னும் விலையுயர்ந்த பொருட்கள் இருந்தது, கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை, ஆனந்த கண்ணீரோடு, இந்த சந்தோஷத்தை, இறை அற்புதத்தை நண்பர்களோடு பகிர்ந்து, கடவுளின் மேன்மையை சொல்ல வேண்டும் என வேகமாக நடந்தான். நடந்தவனுக்கு அதிர்ச்சி, அவர்கள் ஒரிடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்கள், இந்த திருடன் தான் இவர்களையும் கொலை செய்து, இவர்களுடைய பணத்தையும், பொன்னையும் கூட திருடியிருக்கிறான் என்பதை புரிந்துகொண்டான். வருத்தத்தோடு நடந்தாலும், உபதேசத்தின் மேன்மையையும், கடவுள் நமக்கு தரும் சிறியது, நாம் கேட்கும் பெரியதை விட மேலானது என்பதை சிந்தித்தவாறே தன் நாட்டை அடைந்தான் மூன்றாமவன்.

அன்புடன்
Bro. மெர்லின்@ நல்ல நிலமாகு நண்பா