பிரசங்க வேந்தன் வேதத்தைக்குறித்துச் சொன்னவை.

பிரசங்க வேந்தன் வேதத்தைக்குறித்துச் சொன்னவை.

“ஸ்பர்ஜனும் வேதமும் “

1.வேதவசனத்தைப்போல் வேறெதுவும் என் ஆன்மாவை அசைப்பதில்லை. அது என்னைப் பறக்கச் செய்கின்றது அல்லது பதறச் செய்கின்றது. அது என்னைவெட்டி வீழ்த்துகின்றது, இல்லையேல் கட்டி எழுப்புகின்றது. தாவீதின் விரல்கள் வீணையை மிடடியதைவிட தேவ வசனங்கள் என்னை அதிகமாய் மீட்டுகின்றன. உங்களை?

2.ஆண்டவரை அறிய விரும்ப்புகிறவன் அவரது வார்த்தையை அறிய வேண்டும். அவரது வல்லமையை காண விரும்புகிறவன் அவர் தம் வார்த்தையினால் செய்யலாற்றுவதைக் காணவேண்டும். அவரது திட்டத்தை முன்னறிய விரும்புகிறவன் அவரது வார்த்தையினால் அதைக் கண்டறியவேண்டும்.

3.அனைத்துத் தலைமுறை ஞானிகளின் அனைத்துக் கண்டு பிடிப்புகளையும்விட தேவனது ஒரு வசனம் அதிக நிச்சயமானது.

4. தத்துவ ஞானிகளின் 50000 வார்த்தைகளை பேசுவதைவிட இப்புத்தகத்தின் ஐந்து வார்த்தைகளை பேச விரும்புகிறேன். எழுப்புதல் தேவையா ? அப்படியானால் முதலாவது வேதத்திற்கு நாம் அளிக்கும் மதிப்பு உயிர்ப்பிக்கப்படவேண்டும், மக்கள் மனந்திரும்பவில்லையா? அப்படியானால் பிரசங்கங்களில் கதைகளை எடுக்காமல் கர்த்தருடைய வார்த்தைகளை சொல்லி பாருங்கள்.

5.நடமாடும் வேதமாயிருங்கள்.

6. இரத்தசாட்சிகள், மொழிபெயர்ப்பாளர், விசுவாசவீரரின் இரத்தம் நமது வேதத்தில் தெளிக்கப்பட்டுள்ளது. நமது உபதேசமனைத்தும் இரத்தத்தில் முழுக்கி எடுக்கப்பட்டவை. அவற்றை அறிக்கையிட்டோர் வாளுக்குப் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் துண்டிக்கப்பட்டு எறியப்பட்டாலும் ஒரு சத்தியத்தையாகிலும் அவர்கள் பயந்து மறைத்துவைக்கவில்லை.

7. ஒரு வசனத்திக்காக நிற்க நாமனைவருமே சிறைக்கோ, ஏன், சுடுகாட்டிற்கோ சென்றாலும் அது பெரிய தியாகமல்ல.

8.பொன்னான புத்தகமே , கோலியாத்தின் பட்டயத்தைக் குறித்துத் தாவீது சொன்னது உனக்கே தகும் : “அதற்க்கு நிகரில்லை; அதை எனக்கு தாரும் ” ( 1 சாமு 21:9) நிணமும், கொழுப்பும், தேனும் , திராட்சரசமும் நீயே. தேவா தூதரின் மன்னாவும், கன்மலையாம் கிறிஸ்துவிலிருந்து வரும் ஊற்றும் நீயல்லவா . மனதுக்கு அமிர்தமும் ஆன்மாவிற்கு அப்பமும் நீதானே.

9.வேதத்தைக் கண்டு அஞ்சுவானேன் ? ஒரு வசனத்தைச் சந்திக்க நடுங்குவீர்களானால் அதை சந்திக்கத் தகுதி பெறும் வரை உங்களை தாழ்த்துங்கள். உங்கள் கொள்கையும் வேதமும் ஒத்துப்போகவிடில் உங்கள் கொள்கைக்குக் கொள்ளிவைத்துவிட்டு வேதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சபையில் வேதத்திற்கு முரணானவை இருக்குமானால் அந்தச் சபையை விட்டுவிலகுங்கள்

10.நோயாளிகள் சிலர் மாத்திரை சாப்பிடச் சொன்னால் அறிவில்லாது அதை சவைப்பர். நானும் அதற்க்கு விதிவிலக்கல்ல. அதை உடனே “விழுங்க ” வேண்டும். தெளிவான வசனங்களை கேள்வி கேட்டு கேட்டு சவைத்துக் கொண்டேயிராமல் விசுவாசத்துடன் விழுங்கிவிட வேண்டும். கடின உபதேசங்கள் விசுவாசமென்னும் உன்னதப் பயிற்சியினால் ஆன்மாவிற்க்குள் செலுத்தப்பட வேண்டும்

11.அட்டை முதல் அட்டைவரை வேதம் தவறற்றது என நான் விசுவாசியாதிருந்தால் இப்பிரசங்க பீடத்தில் ஏறியிருக்க மாட்டேன்.

12. ஒரு வசனத்தின் விளக்கத்தை வேறு முறைகளை விட முழங்காலில் கற்றுக்கொள்வதே சாலசிறந்தததென அறிந்திருக்கிறேன். அதற்க்காக அகராதிகளையும், விளக்க வேதாகமங்களையும் புரட்டி எழுத்தின்படி அதன் அர்த்தத்தையும் ஒத்தவாக்கியங்களையும் பார்க்கக்கூட தென்பதல்ல. ஆனால் அதெல்லாம் செய்து முடித்து பின்பு ஜெபத்தில் நிற்க்கும் போது தேவன் அமுக்கிக் குலுக்கி சரிந்து விழும்படி என் மடியில் போட்டு விடுவார்.

13. “உனக்கு ஐயோ” என்று விரலினால் எழுதக்கூடிய அளவிற்கு உன் வேதப்புத்தகத்தின் மேல் தூசி படிந்திருக்கிறதே.

14. வேதத்தைப்போல் இந்நாட்களில் கவனிப்பாரற்றுக் கிடைக்கும் புத்தகம் வேறொன்றுமில்லை. பாசம் படர்ந்த புத்தகங்களில் எண்ணிக்கையிலும் வேதமே முன்னோடும் என்பதில் ஐயமில்லை . அதிகமாய் வாங்கி அவசரமாய் ஒதுக்கி வைத்து, அவகாசமின்றி காத்திருக்கும் புத்தகங்களில் வேதத்தைபோல் வேறில்லை.

15. வேதத்தை மறந்துவிட்ட கிறிஸ்தவனை அதின் அட்டைமீது படிந்துள்ள தூசியே நியாயந்தீர்க்கும் .

16. வேதத்தைக் தாங்களே ஆராய்வதை விட்டு மக்கள் என் பிரசங்கப்புத்தகங்களை படிப்பார்களானால், அவற்றையெல்லம் சுட்டு சாம்பலாக்கத் தயங்கேன். மாறாக என் புத்தகங்கள் வேதத்தை படிக்க மக்களை நடத்துமானால் அவற்றை அச்சிட்டதற்க்காக மகிழுவேன்.