நிக்கொலாய் என்கிற மதத்தை பின்பற்றுபவர்கள் *நிக்கொலாய் மதஸ்தர்* இவர்களளை குறித்த வெளி 2: 6 மற்றும் 2:15 இல் காணமுடியும்.யாரோ ஒருவர் உபயோகப்படுத்திய பெயர் நிக்கோலஸ். உதாரணமாக, அப்போஸ்தலர் 6: 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்பகால உதவிக்காரரில் ஒருவர் நிக்கோலஸ் என்று அழைக்கப்பட்டார். வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிக்கோலஸ் இவரா அல்லது வேறொருவரா என்பது நம் யூகத்திற்கு அப்பாற்பட்டது. நிக்கோலஸ் என்ற கிரேக்க பெயருக்கு “மக்களை வென்றவர்” என்று பொருள்படும்.  வெளிப்படுத்துதலில் சொல்லப்படும் நிக்கொலஸ் மதத்தினர் பிலேயாமை பின்பற்றும் மக்களோடு ஒப்பிடப்படுகின்றனர். பிலேயாம் என்ற எபிரேய வார்த்தைக்கு “மக்களை அழிப்பவர்” என்று பொருள்.

எபேசுவில் உள்ள கிறிஸ்தவர்கள் நிக்கோலாவைப் பின்பற்றுபவர்களுக்கு எதிராக நின்றார்கள் என்று வெளிப்படுத்துதல் 2: 6 சொல்கிறது.வெளிப்படுத்துதல் 2: 14-15 – எபேசியர்கள் கற்பித்ததை சொல்கிறது.“ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.

அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்” (வெளி 2:14-15) பிலேயாமின் போதனைகள் இஸ்ரவேல் மக்களை அழித்தாலும், நிக்கோலஸின் போதனைகள் கிறிஸ்தவர்களை அழித்தன. உருவ வழிபாடு மற்றும் பாலியல் ஒழுக்கக்கேடு போன்றவைக்கான  போதனைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதே இதன் உட்பொருள். இது உண்மை என்றால், தியத்திராவில் உள்ள சபையும் இதே பிரச்சினைகளுடன் போராடி வந்தது. “ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.” (வெளிப்படுத்துதல் 2:20).

நிக்கோலஸைப் பின்பற்றுபவர்களோடு ஒப்பிடப்படும் பிலேயாமின் ஜனங்களை குறித்த பதிவு புதிய ஏற்பாட்டில் II பேதுரு 2:15 மற்றும் யூதா 11 பார்க்கலாம்.

யார் இந்த நிக்கோலஸ் என்றும் அவரின் பிறப்பு மற்றும் போதனைக்கான ஆதாரம் வேதத்தில் இல்லை.எவ்வாறாயினும் சிற்றின்பத்தை நாடி அதன் மூலம் வேதத்தின் சத்தியத்தை விட்டு நரகத்திற்கு போக அவர்களின் போதனை வழிவகுக்கிறது என்பது திண்ணம்.

Eddy Joel, PhD