இயேசுவை வார்த்தை” என்று ஏன் யோவான் பயன்படுத்துகிறார் – ஓர் ஆழமான பார்வை

Rev’d. T. லிபின் ராஜ்
CSI கண்ணனூர், KK Diocese

கி.மு. 333 முதல் உலக சாம்ராஜ்யம் கிரேக்கர்களால் உருவாக்கப்பட்டது, இந்த நேரத்தில் பாலஸ்தீனமும் கிரேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கிரேக்க அரசர்களில் புகழ்பெற்ற ஒருவர்தான் அலெக்ஸாண்டர் (Alexander the Great) இவருடைய காலத்தில் இவருடைய ஆட்சியின் கீழுள்ள நாடுகளில் கிரேக்க மொழியை ஆட்சி மொழியாகவும், வழக்கு மொழியாகவும், வணிக மொழியாகவும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் கிரேக்க மொழி பிரபலமானது மட்டுமன்றி மற்ற மொழிகள் அழியும் அளவிற்கு கிரேக்க மொழியின் தாக்கம் அதிகமாய் இருந்தது. இதனால் தான் யூதர்கள் கூட எபிரேய மொழியை மறந்து கிரேக்க மொழியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கி.மு 63-ல் இருந்து இந்த சாம்ராஜ்யம் ரோமர்கள் கைக்கு மாறியது. இவர்களுடைய காலத்திலும் கிரேக்க மொழியின் தாக்கத்தை மாற்ற முடியவில்லை. இயேசுகிறிஸ்து பிறந்த காலமும் ரோம ஆட்சிக்காலம் அகுஸ்து சீஷர் அப்போது பேரரசராக இருந்தார்.

இயேசுக் கிறிஸ்து கூட எபிரேய மொழி பேசாமல், அரமேயம் மற்றும் கிரேக்க மொழியில் பேசுவதற்கு கிரேக்க மொழியின் தாக்கமே காரணமாயிருந்தது. எபிரேய மொழியைப் பயன்படுத்தினால் எல்லா தரப்பட்ட மக்களிடமும் நற்செய்தியை சேர்க்க முடியாது என்பதை இயேசு தெளிவாய் அறிந்திருந்தார். இந்த கிரேக்க மொழியின் வளர்ச்சியே புதிய ஏற்பாடு எபிரேய மொழியில் எழுதப்படாமல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டதன் காரணமாகும் (பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் எழுதப்பட்டது).

யோவான் நற்செய்தி நூல் எழுதப்பட்ட காலம் கிபி 70 – 90. நான்கு நற்செய்தி நூல்களிலும் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்)

யோவான் நற்செய்தி நூலே கடைசியாக எழுதப்பட்டது. இந்நற்செய்தி நூல் எழுதப்பட முக்கிய காரணம், திருச்சபையில் கிரேக்கர்கள், ரோமர்கள், மற்றும் புறஜாதிகள் இணைந்திருந்த இக்காலகட்டத்தில் இயேசுகிறிஸ்துவினுடைய தெய்வீகத் தன்மை குறித்து பலவிதமான குழப்பங்களும், கேள்விகளும் எழும்பின. அக்கேள்விகளுக்குப் பதில் தரக்கூடிய நூலாகத்தான் யோவான் நற்செய்தி நூல் எழுதப்பட்டது. “இயேசு தேவனுடைய குமாரனாகிய

கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும். இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. (யோவான் 20:31). இதுவே இதன் நோக்க வசனமாகும்.

மேலும் உலகின் மிகச் சிறந்த தத்துவ ஞானிகளான அரிஸ்டாட்டில், பிளாட்டோ, சாக்ரடீஸ், எப்பிக்கூரஸ், போன்றோர் கிரேக்கர்களாகத்தான் இருந்தார்கள்.

கிரேக்க சாம்ராஜ்ய காலத்தில் இவர்கள் தத்துவங்கள் உலகமெங்கும் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியது. தத்துவங்களும் அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளும் யூதர்கள் மத்தியிலும் பிரபலமானது. குறிப்பாக கிரேக்கத் தத்துவ ஞானிகளும் இறையியலாளர்களும் “Logos” என்ற பதத்தை அதிகமாகப் பயன்படுத்தினர். “Logos” என்பதற்கு தமிழில் வார்த்தை” என்று பொருள். இதை, அதாவது Logos -ஐ கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உறவை ஏற்படுத்துகின்ற கடவுளுடைய வார்த்தை (God’s word) என்ற அர்த்தத்திற்காகப் பயன்படுத்தினார்கள்.

கடவுளுடைய வார்த்தை (God’s Logos) மிக முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக, மதிப்புள்ள, புனிதமிக்க ஒன்றாக அந்நாட்களில் காணப்பட்டது. எனவே யோவான் ஆசிரியர், நீங்கள் முக்கியப்படுத்தும் வார்த்தைதான் (Logos) இயேசுகிறிஸ்து என்பதை நிரூபிக்கத் தன்னுடைய நற்செய்தி நூலில் இயேசு கிறிஸ்துவை வார்த்தை (Logos) என்று அறிமுகப்படுத்துகிறார். யோவான் 1:1-ல் (ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது). இயேசுதான் அந்த வார்த்தை என்பதையும், நீங்கள் இவரைத்தான் இதுவரை “Logos” என்று முக்கியப்படுத்தினீர்கள் என்பதை கிரேக்கர்கள் அவர்கள் வழியிலே எளிதாக அறிந்து கொள்ளவே இப்படி எழுதுகிறார்.

உண்மையில் “Logos” என்ற பதம் தனித்துவம் வாய்ந்தது. தமிழ் மொழி பெயர்ப்பில் இது “வார்த்தை” என்று மொழி பெயர்க்கப்பட்டு அதில் எந்த வித்தியாசத்தையும் காட்டவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் இது “word” என்று மொழி பெயர்க்கப்பட்டு அதை முக்கியப்படுத்த முதல் எழுத்தை ‘W’ பெரிய எழுத்தாக எழுதியிருப்பார்கள், “In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.” (NRSV) அவ்வளவு மதிப்புடையதாயிருந்தது இந்த “logos.”

இரண்டாவதாககக் கருதப்படும் காரணம் என்னவெனில்,யோவான் நற்செய்தி நூலின் ஆசிரியரான யோவான் இயேசுவின் மிக நெருக்கமான சீடன். எல்லா இடங்களிலும், எல்லா பணிகளிலும் மற்றும் எல்லா சூழ்நிலைகளிலும் இயேசுவோடு கூட பயணித்தவன் இந்த யோவான். இயேசுவின் வாழ்வு, பணி,மரணம், உயிர்த்தெழுதல் எல்லாவற்றையும் பார்க்கும் போது இயேசுவை கடவுளின் வார்த்தையின் பிரதிபலிப்பாகவே காண்கிறான். ஆகவே இயேசுவை வார்த்தை என்ற பதத்தின் வழியாக அறிமுகப்படுத்துகிறார். ஆதியிலே வார்த்தை இருந்தது என்று கூறி, இயேசு மரியாளின் உதிரத்தில் தோன்றும் முன்னேயும், உலக சிருஷ்டிப்புக்கு முன்பேயும் அவர் இருக்கிறவர் என்பதை தெளிவாக காண்பிக்கவே வார்த்தை (Logos) என்பதைப் பயன்படுத்தி யோவான் தனது நற்செய்தி நூலை ஆரம்பிக்கிறார். ஏனெனில் அக்காலத்தில் இயேசுவின் தெய்வீகத்தன்மைக் குறித்த மிகப் பெரிய விவாதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவ்விவாதங்களுக்கு யோவான் தன்னுடைய நற்செய்தி நூலால் முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்த வசனங்களில் அவர் 100% கடவுளாயிருந்தார் அதே நேரத்தில் 100% மனுஷ குமாரனாயும் வெளிப்பட்டார் என்பதையும் நிரூபிக்க இந்த வார்த்தை மாம்சமானது (யோவான் 1:14ய.அந்த வார்த்தை மாம்சமாகி) என்று தெளிவாக எழுதுகிறார். இயேசுகிறிஸ்துவுக்கு இருக்கும் இந்த தனித்தன்மை வேறு யாருக்கும் உலகில் கிடையாது.

மரியாள் வழி பிறப்பு இயேசுவின் தொடக்கமல்ல, அவர் ஆதியிலே இருந்தவர். சிருஷ்டிப்புக்கு முன்னால் இருந்தவர். சிருஷ்டிப்பு இவர் மூலமாகத்தான் (வார்த்தையால்) இயேசு இல்லாமல் அங்கு ஒன்றும் படைக்கப்படவில்லை, அவர் கடவுளோடு இருந்தார். கடவுளாக இருந்தார்.

கடவுளுடைய வார்த்தையாக இருந்தார் இந்தக் கடவுள்தான் இயேசு என்பதன் நிரூபணமே, யோவான் நற்செய்தி நூல்.

நன்றி: விதைகள் (டிசம்பர் 2020)