உன் கைகள் திடப்படும் என்றார் “.
நியா 7:11

பயத்துடன் இருந்த கிதியோனைப் பார்த்து தேவன்: மீதியானியரின் பாளையத்திற்குப் போ. அவர்கள் பேசுவதை நீ கேள். அப்பொழுது உன் கைகள் திடப்படும் என்று சொன்னார். அநேக சமயங்களில் சோர்ந்துபோன நம் உள்ளங்களுக்கு திடப்படுத்தக் கூடிய காரியங்களைத் தேவன் நியமித்திருக்கிறார் என்பதை மறந்துவிடுகிறோம். நாம் சோர்ந்து போகிற நேரங்களில், நம்மை திடப்படுத்தும் படியாக கர்த்தரிடத்தில் ஜெபிப்போம். அப்பொழுது கர்த்தர் நாம் எந்த காரியத்தினால் சோர்ந்து போயிருக்கிறோமோ அதிலிருந்து நாம் மீளும்படியான பெலனைக் கட்டளையிடுவார்.

நெகேமியா அலங்கத்தைக் கட்டிக் கொண்டிருந்த பொழுது, பலவிதமான எதிர்ப்புகள், போராட்டங்கள், பயங்களின் ஊடாகக் கடந்து போக வேண்டியிருந்தது. ஆனால் நெகேமியா என்ன செய்தார்? அந்த வேலை நடந்தேறாதபடிக்கு, எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும் (நெகேமியா 6:9) என்று ஜெபித்தார். நெகேமியாவின் கைகளைக் கர்த்தர் திடப்படுத்தி,  அலங்கத்தை 52 நாட்களில் கட்டிமுடிக்க உதவி செய்தார் அல்லவா! உங்கள் வாழ்க்கையிலும் தேவன் அவ்விதமாகவே செய்வார் என்பதில் சந்தேகமில்லை.
     
என் அருமை தேவஜனமே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்திருக்கிற காரியம் நிறைவேறும்படிக்கு, அதை குறித்த நேரத்தில் நிறைவேற்றும்படியாக கர்த்தர் செயல்படுவார். தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள் (ஏசாயா 35:3–4). சோர்ந்துபோன உங்களை கர்த்தருக்குள்ளாக திடப்படுத்திக் கொள்ளுங்கள். தேவன் உங்களை பெலப்படுத்தி, நீங்கள் நிறைவேற்றும்படியான காரியத்தில் உங்களுக்கு உதவி செய்வார். ஆமென்!

இறைபணியில் என்றும்,

மக்னாயீம் ஊழியங்கள்,
திருநெல்வேலி.