“இந்தாம்மா , பொம்பளையாச்சேன்னு அடிக்காம விடுறேன் . இன்னொரு தடவ
“ஏசு குணமாக்குறாரு , ஏசு ரணமாக்குறாருன்னு” சொல்லிக்கிட்டு இந்த ஏரியா பக்கம் வந்தீன்னா அப்பறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ” . பேசியபடியே அந்தப் பெண்ணின் கையிலிருந்த கைப்பிரதிகளை ஆவேசமாய்ப் பிடுங்கிக் கிழித்துப் போட்டான் மூர்த்தி .
அந்தப் பெண் கதறவுமில்லை, துடிக்கவுமில்லை . கண்களில் கண்ணீர் வழிய , உதடுகள் ஏதோ முணுமுணுத்தபடி நின்று கொண்டிருந்தாள் .
” ஒரு வேளை ஏசுவை வேண்டுறாளோ ? ” ஏசுவே ! உடனே இறங்கி வந்து இந்த ஆளைக் கண்டதுண்டமா வெட்டி போடுங்க . வானத்திலிருந்து அக்கினியை இறக்கி இந்த மனுஷனை பஸ்பமாக்கிடுங்கன்னு ? ” . வேண்டிக்கட்டும் வேண்டிக்கட்டும் . ஏசு வந்து காப்பாத்துறதை நானும் பாத்துடுறேன் ” மூர்த்தியின் மனது கொக்கரித்தது .
“எவனுக்குமே இந்த ஏரியால அக்கறையே கிடையாது . காலையிலிருந்து இந்த பொம்பள நோட்டீஸ் கொடுத்துருக்கா . இதுவரைக்கும் ஒரு பயலும் கண்டுக்கல . நான் மட்டும் பாக்காம இருந்திருந்தா இந்நேரம் நாலஞ்சு பேர கிறிஸ்டியனா மாத்தி கூட்டிக்கிட்டே போய்ருப்பா . ஏதோ நான் ஆபீஸ்ல பெர்மிசன் போட்டு டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வந்திருந்ததனால என் கண்ணுல பட்டுட்டா . இல்லன்னா
அவ்வளவுதான் “.
மிகப்பெரிய சாதனையை செய்து விட்டது போலவும், சமுதாயத்திற்கு மிகப் பெரிய தொண்டாற்றி விட்டதைப் போலவும் உணர்ந்தான் மூர்த்தி .
” சே ! ஒரு வீடியோ எடுத்திருக்கலாம் வாட்ஸ்அப்ல ஷேர் பண்ணா நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். நம்மள பத்தியும் நாலு பேர் தெரிஞ்சுக்குவாங்க” . மனது புலம்ப ஆபீசுக்குத் திரும்பினான் .
தான் செய்த சாதனையை அலுவலகத்தில் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டான். ஆனாலும் அங்கேயும் ஓரிரு மாற்றுமதத்தவர்கள் இருந்ததால் அடக்கிக் கொண்டான் . இருந்தாலும் செய்த சாதனையின் பெருமிதம் பணி முடியும் வரை மனதுக்குள் ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது . தான் தைரியமாக செய்த காரியங்களையும் பேசிய வார்த்தைகளையும் மனதுக்குள் அடிக்கடி ரீவைண்ட் செய்து திரையிட்டுத் திரையிட்டு மகிழ்ந்தான் .
” வீட்ல போயி சித்ரா கிட்ட சொல்லணும் ” . டிஃபன் பாக்ஸ் , தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு ஆயத்தமானான் . சட்டைப்பையில் இருந்த அப்பாய்ன்ட்மென்ட் டோக்கனை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான் .
வீடு அமைதியாக இருந்தது. பதினைந்து நாட்களாகவே அப்படித்தான் . சித்ராவுக்குப் பதினைந்து நாட்களாக இடைவிடாத உதிரப்போக்கு . இதுவரைக்கும் மூவாயிரம் , நாலாயிரம் வரை செலவழித்தும் ஓயவில்லை . ஆளே வெளுத்து , மெலிந்து போய் இருக்கிறாள் . என்னென்னவோ மாத்திரைகள், நரம்பு ஊசி , கைவைத்தியம் என்று எவ்வளவோ முயற்சி எடுத்தாயிற்று . எதற்குமே அடங்காது சூறாவளியாய்ச் சுழன்று அடிக்கிறது வியாதி .
ஒரு நிமிஷம் உட்காராமல் பம்பரமாய்ச் சுழல்பவள் இன்று எப்போது பார்த்தாலும் சோர்ந்து போய் உட்கார்ந்து விடுகிறாள் . மூன்று வேளை சாப்பாடும் மெஸ்ஸில் இருந்துதான் . அதற்காகத்தான் இன்று ஸ்பெஷலிஸ்ட்டிடம் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி இருக்கிறான் .
உள்ளே நுழைந்ததும் ஒரு மாற்றத்தை உணர்ந்தான் . பதினைந்து நாட்களாகப் புகையாத அடுக்களையிலிருந்து அருமையான பக்கோடா வாசனை . ஓடிப்போய் எட்டிப்பார்த்தான் . அதிர்ந்தே போனான். துவைத்துப் போட்ட துணியைப் போல் துவண்டுகிடக்கும் சித்ரா , தெளிவாக நின்று பகோடாவைப் பொறித்து எடுத்துக் கொண்டிருக்கிறாள் . பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் நெய் மினுங்கும் கேசரி .
அவனைப் பார்த்ததும் ஓடி வந்து அவனது தோளில் சாய்ந்து கொண்டு அழ ஆரம்பித்தாள் . மதகு உடைப்பெடுத்துப் பெருகி வருகிற வெள்ளத்தைப் போல அப்படி ஒரு அழுகை . மூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை . அவளாகவே அழுது அடங்கட்டுமென்று விட்டு விட்டான் .
இருபது நிமிடம் அழுது முடித்தபின்பு அறைக்கு ஓடிப்போய் ஒரு மாத்திரை அட்டையை எடுத்து வந்தாள்.
அதைப் பார்த்ததும் மூர்த்திக்குத் தூக்கி வாரிப் போட்டது . அது மூர்த்தியின் , மனநிலை சரியில்லாத அம்மாவுக்குக் கொடுக்கப்பட்டு வந்த தூக்க மாத்திரை. டாக்டர் சொன்ன அளவுக்கு மேல் ஒன்றிரண்டு மாத்திரைகள் சாப்பிட்டாலே உயிருக்கு ஆபத்து . அம்மா இறந்து போய் எட்டு மாதங்களாகிவிட்டன . மூர்த்திதான் அவர்கள் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகளை எல்லாம் தன் கையாலேயே தூக்கி எறிந்தான் . ஆனால் இது இப்போது எப்படி வந்தது ?
மூர்த்தி கேட்பதற்கு முன்பே சித்ரா சொன்னாள் ,
” அத்தையோட prescription எடுத்துட்டுப் போய் நாந்தாங்க வாங்கிட்டு வந்தேன் “. மீண்டும் குமுறி அழ ஆரம்பித்துவிட்டாள் .
” இன்னைக்கு காலைல ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுங்க. கை காலெல்லாம் ரொம்ப வெலவெலன்னு ஆயிடுச்சு. மனசெல்லாம் ஒரே திகில் . மரணம் என்னைத் துரத்துற மாதிரி தோணுச்சு .
எங்க கிருஷ்ணவேணி அக்காவுக்கு இப்படித்தான் ஆச்சு . கடைசில டாக்டர் அது கேன்ஸர்னுட்டாங்க . கர்ப்பப்பையையும் எடுத்து ரெண்டு மூனு மாசந்தான் உயிரோட இருந்தாங்க . இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் கர்ப்பப்பையை எடுத்துடணும்னு வேற சொல்றாங்க. என் ஃபிரண்ட் மாலதிக்கும் இதே பிரச்சனைன்னு கர்ப்பப்பையை எடுத்துட்டாங்க . எடுத்தநாள்லேர்ந்து முதுகு வலி , இடுப்பு வலின்னு ஒன்னு விட்டு ஒன்னு மாத்திமாத்தி வந்துக்கிட்டே இருக்குதாம் . இதையெல்லாம் நினைச்சு நினைச்சு ரொம்ப பீதியாவே இருந்துச்சு . ஏதோ ஒரு அருவருப்பான நாத்தம் அடிச்சுக்கிட்டே இருக்குற மாதிரி ஒரு உணர்வு . தாழ்வு மனப்பான்மை .
இவ்வளவையும் தாங்கிக்கிட்டு நான் உயிரோட இருக்க விரும்பலைங்க . இன்னிக்கு பாக்கப் போற டாக்டரும் என்ன சொல்லப் போறாங்கன்னு தெரியலை . அதான் என் வாழ்க்கையையே முடிச்சுக்கலாம்னு முடிவெடுத்தேன் . மூர்த்தி அந்த வார்த்தையில் ஆடிப்போய்விட்டான் .
” அடிப்பாவி , எங்களை விட்டுப்போக ஒனக்கு எப்படி மனசு வரும் ? “. கண்கள் கலங்கிவிட்டன . பேச வார்த்தைகள் வரவில்லை .
சித்ரா தொடர்ந்தாள் .
” தற்கொலை பண்ணிக்கணும்னு நினைக்கும்போதே யாரோ என்னை அதுக்காக உற்சாகப்படுத்துற மாதிரியே இருந்தது .
” உனக்கு வந்திருக்குறது கொடுமையான வியாதி . குணமாக வாய்ப்பே இல்லை . மத்தவங்களும் உன்ன வெறுத்து ஒதுக்க ஆரம்பிச்சுடுவாங்க. தற்கொலைதான் ஒரே வழி “ன்னு திரும்பத் திரும்ப மனசுக்குள்ள ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருந்துச்சு . ரத்தப் போக்கும் அதிகமாக ஆரம்பிச்சிடுச்சு .
சொல்லி வச்ச மாதிரி அத்தையோட மாத்திரை சீட்டு , பீரோவைத் தெறக்கும் போது கீழ விழுந்துச்சு .
” இந்த மாத்திரை , டாக்டர் சொன்ன அளவை விட ஒன்னு கூடப் போனாலும் உயிருக்கே ஆபத்துன்னு ” நீங்க சொன்னது ஞாபகம் வந்துச்சு . மனசுக்குள் ஒலிக்கிற குரல் விரட்ட ஆரம்பிச்சிடிச்சு . வேகமா ஓடிப்போய் சீட்டைக் காட்டி மாத்திரையும் வாங்கிட்டேன். வீட்டுக்கு வந்து பத்து மாத்திரையையும் ஒன்னா முழுங்கணும்ங்குற வேகத்தோட திரும்பினேன் .
இன்னியோட வாழ்க்கை முடியுது . இதுதான் என்னோட கடைசி நிமிஷங்கள்னு முடிவே பண்ணி வந்துக்கிட்டு இருக்கும்போது ஒரு லேடி என்கிட்ட வந்து சொன்னாங்க ,
” சிஸ்டர் , ஏசு உங்களை சுகமாக்குறார்னு “.
சொல்லிட்டு ஒரு நோட்டீஸ் மாதிரி ஏதோ ஒன்னை என் கைல கொடுத்தாங்க . அவங்க சொன்ன வார்த்தை காதுல விழுந்ததும் அங்கயே அழுதுட்டேன் . மனசுலயும் , ஒடம்புலயும் ஒரு புது தெம்பு வந்துச்சு . ‘ சாவு சாவுன்னு ‘ சொல்லிக்கிட்டு இருந்த அந்தக் குரல் எங்க போச்சுன்னே தெரியல .
வேகமா வீட்டுக்கு வந்து அவங்க குடுத்த நோட்டீஸை படிக்க ஆரம்பிச்சேன் . அதுல , ஏசுநாதர் , பன்னெண்டு வருசமா உதிரப்போக்கால கஷ்டப்பட்ட ஒரு பெண்ணை ஒரு நொடியில சுகமாக்குனதைப் பத்தி எழுதி இருந்திச்சு . அதோட ‘ இந்த ஏசு உங்களையும் சுகமாக்க வல்லவராயிருக்கிறார்னும் ‘ போட்டிருந்துச்சு.
அந்த நோட்டீஸ் எனக்காவே எழுதப்பட்டு என் கைக்கு வந்து சேந்ததுன்னு எனக்குப் புரிஞ்சது. எனக்கு எப்புடி அவர்கிட்ட கேக்குறதுன்னு தெரியல . கண்ணை மட்டும் மூடிக்கிட்டு ,
” ஏசு , என்னை குணமாக்குங்க . அந்த அம்மா உங்க ஆடையைத் தொட்டதும் குணமானாங்கன்னு போட்டுருக்கே .நானும் உங்க அங்கியத் தொடணுமேன்னு ” சொல்லிக்கிட்டே இருந்தேன் ” .
தீடீரென்று சித்ராவின் குரலில் ஒரு உணர்ச்சிப் பிரவாகம் தெரிவதை மூர்த்தி உணர்ந்தான் .
” என் கைல சால்வை மாதிரி ஏதோ பிடிபட்டுச்சுங்க . உடனே கண்ணைத் திறந்து பாத்தேன் . அங்க யாருமே இல்ல . உடம்புல , மனசுல இருந்த எல்லா சோர்வும் நீங்கிடுச்சு . எவ்ளோ பெரிய பைத்தியக்காரத்தனம் பண்ணப் பாத்தேன்னு அப்பதான் புரியுது ” . மீண்டும் கதறி அழுதாள் . மூர்த்தி இன்னும் அதிர்சியில் உறைந்து நின்றிருந்தான் .
” காலைல பதினோரு மணிக்கு இது நடந்துச்சு . இந்த நிமிஷம் வரைக்கும் அந்தப் பிரச்சனையே இல்ல. பதினஞ்சு நாளா பாடாப்படுத்துன அந்த வியாதி எங்க போச்சுன்னே தெரியலை. பதினஞ்சு நாள் பாவம் உங்களுக்கு வாய்க்கு ருசியா நல்ல சாப்பாடு கூட போட முடியல . நாலு மணி வரைக்கும் பாத்தேன் , எந்தப் பிரச்சனையும் இல்ல . நானே கடைக்குப் போய் சாமான்லாம் வாங்கிட்டு வந்து பகோடாவும் , கேசரியும் செஞ்சு வச்சேன் . ஏசு என் உயிரைக் காப்பாத்திட்டாருங்க . அந்த அம்மா இன்னிக்கி எங்கெங்க போனாங்களோ
எத்தன வீட்டுக்கு நிம்மதி கிடைச்சுதோ ? ” .
அவள் சொன்ன சாட்சியில் மூர்த்தி ஏற்கனவே நிலைகுலைந்து போயிருந்தான் . அதிலும் கடைசியாய் அவள் சொன்ன வார்த்தைகளின் வீரியம் தாளாமல் குற்றவுணர்வில் அழ ஆரம்பித்தான் . சித்ரா , தன்னை நினைத்துதான் மூர்த்தி அழுவதாக நினைத்து அவன் கண்களைத் துடைத்து விட்டான் .
சற்று நேரத்துக்குப் பின்னர் மூர்த்தி கேட்டான் ,
” அந்த நோட்டீஸ்ல contact number எதாச்சும் குடுத்துருக்காங்களா… ?
=> அங்கொன்றும் இங்கொன்றுமாய் பலமாய் ஒலிக்கிற சத்துருவின் கொக்கரிப்புகள் அச்சுறுத்துகிறதா ? இனி ஊழியத்துக்கு பலன் கிடைப்பது கடினம் என்று ஒரு நம்பிக்கையின்மை எழுந்து சோர்வை உண்டாக்குகிறதா ? கவலைப்படாதே, கர்த்தர் செல்லும்படி ஏவுகிற ஒவ்வொரு இடத்திலும் ஏதோ ஒரு அழியப் போகிற ஆத்துமா உனக்காகக் காத்திருக்கிறது..
-> ” மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,
அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் “.
ஏசா 55 : 10, 11
-> “ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?
அது வழியருயேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது “.
நீதி 8 : 1, 2