• Monday 10 March, 2025 05:33 PM
  • Advertize
  • Aarudhal FM

தன் தாயை கவனிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்த மகன்

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.

மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். வருடங்கள் கடந்தன. ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள். “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “ இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார். மகன் ஆச்சரியப்பட்டான்.

“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை. இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.

“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன். இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் உனதுகுழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன். அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.

கிறிஸ்தவ சொத்துகளை நிர்வகிக்க தனி வாரியம்: ஐகோர்ட் யோசனை

மதுரை: இந்து, இஸ்லாமிய நிறுவனங்களை நிர்வகிக்க தனி அமைப்பு இருப்பது போல் கிறிஸ்தவ நிறுவனங்களை நிர்வாக தனி சட்ட வாரியம் ஏற்படுத்த வேண்டும் எனவும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் நியமனம் தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு: ”கல்லூரி தாளாளராக ஒருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், பேராசிரியர்கள் சிலர் புகார் அளித்ததால், அந்த நியமனத்துக்கு சிஎஸ்ஐ ஆயர் தடை விதித்துள்ளார். தாளாளர் தேர்வு விவகாரத்தில் சிஎஸ்ஐ விதிகள் முறையாக பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. ஒரு சில நபர்கள் சிஎஸ்ஐ நிர்வாகத்தின் பைலாக்கள் / விதிகளை பின்பற்றாமல் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளது தெரியவருகிறது.

பல வழக்குகளில் ஆலய சொத்துகள் முறைகேடாக நிர்வாகம் செய்யப்படுவதும், நிதி தவறாக பயன்படுத்தப்படுவதும் தெரிகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க, அவ்வப்போது தற்காலிக நடவடிக்கையாக நிர்வாகிகளை நியமிப்பது என்பது வழக்கமான நடைமுறையாகும். அதே நேரத்தில் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய நேரம் வந்துள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது.

கிறிஸ்தவ நிறுவனங்கள், கல்வி, மருத்துவமனை போன்ற பல பொதுப் பணிகளைச் செய்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. இந்நிறுவனங்களின் சொத்துகள் மற்றும் நிதி பாதுகாக்கப்பட வேண்டும். இந்து மற்றும் இஸ்லாமிய அறக்கட்டளைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவை. அவற்றை பாதுகாக்க அறநிலையத் துறை, வக்பு வாரியம் உள்ளன. ஆனால், கிறிஸ்தவ அமைப்புகளுக்கு அத்தகைய விரிவான ஒழுங்குமுறை எதுவும் இல்லை.

கிறிஸ்தவ நிறுவனங்களை மேலும் பொறுப்புடன் செயல்பட வைக்க, நிர்வாக விவகாரங்களை ஒழுங்கமைக்க ஒரு சட்டபூர்வ வாரியம் இருக்க வேண்டும். எனவே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் மற்றும் தமிழக அரசின் முதன்மைச் செயலரை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்க்கிறது. இருவரும் கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டபூர்வ வாரியத்தை ஏற்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவ.18-க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று நிதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

கிறிஸ்தவ மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்

சென்னை: கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல கல்வி உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2024-2025ம் கல்வியாண்டிற்கு கல்லூரிகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஏற்கனவே கல்லுரியில் சேர்க்கை பெற்று பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்லூரிகளில் பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

2024-2025ம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணாக்கர்கள் மற்றும் சென்ற வருடத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி UMIS (https://umis.tn.gov.in) என்ற இணையதளத்தில் கல்லூரி மூலம் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் புதிய கல்லூரி மாணாக்கர்கள், வருமானச் சான்றிதழ் (பெற்றோர் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்). சாதிச் சான்றிதழ் (வருமானச் சான்று மற்றும் சாதிச் சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல் அவசியம்.

கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா சேவை எண் 1800-599-7638 அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 31.1.2025 ஆகும் என அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கனரக லாரி மோதி கிறிஸ்தவ போதகா் பலி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரள பகுதியில் மோட்டாா் சைக்கிள் மீது கனரக லாரி மோதியதில் பெந்தேகொஸ்தே சபை போதகா் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகே கேரள பகுதியில் மோட்டாா் சைக்கிள் மீது கனரக லாரி மோதியதில் பெந்தேகொஸ்தே சபை போதகா் உயிரிழந்தாா்.

பளுகல் அருகே குந்நத்துக்கால், எள்ளுவிளை பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (62).

இவா், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் உள்ள கைதக்குழி அசம்பிளீஸ் ஆப் காட் சபையில் போதகராக இருந்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் பாறசாலை சென்றுவிட்டு களியக்காவிளை நோக்கி வந்து கொண்டிருந்தபோது காராளி பகுதியில் வைத்து, பின்னால் வந்த கனரக லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் போதகா் விஜயன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இது குறித்து பாறசாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.

கிறிஸ்தவ கல்லூரியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்று சாதனை

தென் கொரியாவில் நடைபெற்ற சின்சான்ஜி கிறிஸ்தவ சபையின் 11 5வது பட்டமளிப்பு விழாவில் 1,11,628 பேர் பட்டம் பெற்றனர்.

Shincheonji Christian Church

தென் கொரியாவிலுள்ள பிரபல சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை சபைகளை கொண்டு உலகளவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கி வளர்ந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சபை என்ற பெருமையும் இதற்கு உண்டு.

இச்சபையின் மூலம், மதத் தலைவர்களுக்கான 115வது பட்டமளிப்பு விழாவானது கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவானது முதலில் தென் கொரியாவில் இம்ஜிங்காக் அமைதிப் பூங்காவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அந்நாட்டு பண மதிப்பீட்டில் சுமார் 1 பில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் 58 கோடி) செலவு செய்யப்பட்டது. ஆனால், விழா நடைபெறும் முந்தைய நாள் இம்ஜிங்காக் அமைதிப் பூங்காவில் நடத்த அந்நாட்டு சுற்றுலாத் துறையின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

விழா நடத்த அனுமதி கொடுத்து, அதற்கான ஏற்பாடுகளை முழுதாக செய்த பிறகு, இறுதி நேரத்தில் விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளாக மாறியது. இது மத ரீதியில் ஒருதலைப்பட்சமான முடிவு என சின்சான்ஜி சீயோன் கிறிஸ்தவ சபை அதிருப்தி தெரிவித்தது.

இறுதி நேரத்தில், சின்சான்ஜி சியோங்ஜு கிளை சபைக்கு பட்டமளிப்பு விழா மாற்றம் செய்யப்பட்டு, அங்கு பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

சீயோன் கிறிஸ்தவ சபையின் தலைவர் யங்-ஜின் டானும், ஆலயத்தின் தலைவர் மான்-ஹீ லீ அவர்களும், சின்சான்ஜி சியோங்ஜு கிளை சபையில் நடைபெற்ற 115வது பட்டமளிப்பு விழாவில் கலந்த கொண்டனர்.

இதில், சுமார் 10 ஆயிரம் தென் கொரிய பங்கேற்பாளர்கள் உட்பட 1,11,628 பேர் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெரும் 4வது மிக பெரிய பட்டமளிப்பு விழா இதுவாகும். இதற்கு முன்னர், 2019-ல் 1,03,764 பட்டதாரிகளும், 2022-ல் 1,06,186 பட்டதாரிகளும், 2023-ல் 1,08,084 பட்டதாரிகளும் பட்டம் பெற்றிருந்தனர்.

சின்சான்ஜி இயேசு சபையின் 115வது பட்டமளிப்பு விழாவில் தென் கொரியாவிற்கு வந்திறந்த பன்னாட்டு வெளிநாட்டு மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

(இச்செய்தியானது சின்சான்ஜி கிறிஸ்தவ சபை மூலம் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் எழுதப்பட்டது)

கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கப்படும் பயங்கரவாதம்

இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் விரோதப்போக்கு உச்சத்தை அடைந்துவருவதாக தாமஸ் ஆப்ரஃகாம், டேவிட் ஒனேசிமு, ரிச்சர்டு ஹாவல், மேரி ஸ்கேரியா, ஜான் தயால் உள்ளிட்ட பிரபல கிறிஸ்தவத் தலைவர்கள், பத்திரிக்கை செய்தியில்தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி , சுமார் 400 கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் 30 தேவாலயக் குழுக்களின் சார்பில் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தையொட்டி, நாடு முழுவதும் நடைபெற்ற கூட்டங்களில், சுமார் 14 இடங்களில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து இந்த முறையீடு செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் விரோதப்போக்கு உச்சத்தை அடைந்துவருவதாக தாமஸ் ஆப்ரஃகாம், டேவிட் ஒனேசிமு, ரிச்சர்டு ஹாவல், மேரி ஸ்கேரியா, ஜான் தயால் உள்ளிட்ட பிரபல கிறிஸ்தவத் தலைவர்கள், பத்திரிக்கை செய்தியில்தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.

2024 ஜனவரி மற்றும் நவம்பருக்கு இடைப்பட்டக் காலத்தில் கிறிஸ்தவ மக்களைக் குறிவைத்து நடைபெற்ற 720  தாக்குதல் சம்பவங்களை “எவன்ஜெலிக்கல் ஃபெல்லோஷிப் ஆப் இந்தியா” (Evangelical Fellowship of India) எனும் நிறுவனம் பதிவு செய்துள்ளது . அதேபோன்று “யுனைட்டெட் கிறிஸ்டியன் ஃபோரம்” (United Christian Forum) சார்பில் 760 தாக்குதல் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன.

மதமாற்றத் தடைச் சட்டத்தை தவறான வழியில் பயன்படுத்துவது, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் அதிகரித்துவருவது, மதச் சுதந்திரத்திற்கு எதிராக பெருகிவரும் அச்சுறுத்தல்கள், தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்க மறுக்கும் கொள்கை ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே 2023 முதல் சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் மணிப்பூர் கலவரத்திற்கு முடிவுக் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மோடியை வலியுறுத்தியுள்ளனர்.

இறுதியாக, மதச்சிறுபான்மையினர் மீது ஏவப்படும் வன்முறைகளை விசாரிப்பது, மதச்சுதந்திரம் தொடர்பான அரசமைப்புச் சட்டங்களை பாதுகாத்திட மாநில அரசுகளுக்கு தெளிவான வழிக்காட்டுதல்களை வகுப்பது போன்ற  நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகிய இருவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசிச மோடி ஆட்சி காலத்தில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. அதன் உச்சமாக, மணிப்பூரில் குக்கி இனத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்களாகிய இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊரின் நடுவே வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது; மேலும் கட்டாய மதமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி கடந்த செப்டம்பர் மாதம் ஒடிசாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது போன்றவற்றை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் ஆகிய இந்துத்துவ மதவெறிக் கும்பல் அரங்கேற்றியது.

மேலும், கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை காரணம் காட்டி இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது  இந்துமதவெறிக் கும்பல் தாக்குதல் நடத்துவதும் மதக்கலவரத்தை உண்டாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.

சாதி, மத, இன ரீதியான ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்ற மாற்றை முன்வைத்து பாசிச எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலமாக மட்டுமே சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்படும்.

மது பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்கள், படங்கள் அச்சிட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் மது அருந்துவதால் குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி அலுவலகம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை அமெரிக்காவில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

தமிழ்நாட்டில் இதே கருத்தை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ”ஆல்கஹால் மற்றும் சுகாதார நிலைமை குறித்த உலக அறிக்கை -2014” என்ற தலைப்பில் பத்தாண்டுகளுக்கு முன் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் மது குடிப்பதால் 60 வகை நோய்கள் தாக்கும் என இதுவரைக் கருதப்பட்டு வந்த நிலையில், இப்போது 200 வகை நோய்கள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி (liver cirrhosis), சிலவகை புற்றுநோய்கள் ஏற்படுவதுடன், நிமோனியா, காசநோய் போன்றவையும் எளிதில் தொற்றுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போதிலிருந்தே மதுவின் இந்த தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆண்ட அரசுகள் இந்த யோசனையை கண்டுகொள்ளவில்லை.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மதுவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் பல மடங்கு தரம் குறைந்தவை. மது குடிக்கும் அளவும் தமிழ்நாட்டில் மிகவும் அதிகம். இவற்றை வைத்துப்பார்க்கும்போது அமெரிக்காவில் மது அருந்துபவர்களுக்கு 10 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் என்றால், தமிழ்நாட்டில் மது அருந்துபவர்களுக்கு 2 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால் தான் தமிழ்நாட்டில் இத்தகைய விழிப்புணர்வு வாசகங்கள் மதுப்புட்டியில் அச்சிடப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்தபோது தான் புகையிலைப் பொருள்கள் மீது எச்சரிக்கை வாசகங்களை அச்சிடும் முறை கடுமையாக எதிர்ப்புகளையும் மீறி நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பயனாக புகையிலைப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருப்பதுடன் புகையிலைப் பழக்கமும் கணிசமாக குறைந்துள்ளது. இதேபோல், மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

உலக அளவில் இப்போது தென்கொரியாவில் மட்டும் தான் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடும் முறை நடைமுறையில் உள்ளது. அயர்லாந்து நாட்டிலும், அமெரிக்காவிலும் இத்தகைய முறை விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கிறது. மதுப்புட்டிகளில் எச்சரிக்கை வாசகங்களை அச்சிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. எனவே, மது குடித்தால் பல வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தையும், எச்சரிக்கைப் படத்தையும் மதுப்புட்டிகளில் பரப்பில் 80% அளவுக்கு அச்சிடும் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: 6 பேர் உயிரிழப்பு… தொடரும் மீட்பு பணி!

விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட அப்பய நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட அப்பய நாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை முழுவதும் தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில், சிவகாசி ஆலமரத்தப் பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 80க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இங்கு 80க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நூற்றுக்கு மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலையில் கெமிக்கல் ரூமில் வேதிப் பொருட்களை கலவை செய்யும் போது, காலை 9.40 மணி அளவில் உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிச்சத்தம் கேட்டவுடன் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஆலையை விட்டு வெளியேறினார்.

இதில் நான்கு அறைகள் முற்றிலும் தரைமட்டம் ஆனது. பட்டாசு வெடி விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிவிபத்தில் பணியில் இருந்த அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், ஆவுடையா புரத்தைச் சேர்ந்த சிவகுமார், குருந்த மடத்தைச் சேர்ந்த காமராஜ் , வேல்முருகன், வீரார் பட்டியை சேர்ந்த கண்ணன், செட்டிகுறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இடுபாடுகளில் சிக்கி பலியாகினர்.

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். வச்சக்காரப் பட்டி போலீசார் இடிபாடுகளில் சிக்கி இருந்த சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரயோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வெடி சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக உள்ள ஆலை உரிமையாளர் பாலாஜியை தேடி வருகின்றனர்.

நெற்றியில் குங்குமம் வைத்து போதகர் மீது தாக்குதல்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம கிராமத்தில் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை செய்துகொண்டிருந்த போதகர் ஒருவரை அங்குள்ள மத விரோதிகள் கடுமையாக தாக்கி, சித்திரவதைப் படுத்தியுள்ளனர்.

போதகரின் மனைவி கர்ப்பமான நிலையில் அவர்களையும் தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் நெற்றியில் குங்குமம் மற்றும் திருநீர் பூசி மன உளச்சலுக்குள்ளாக்கினர். கடந்த 2024 டிசம்பர் 15 ஆம் தேதி இச்சம்பம் நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் கிறிஸ்தவ போதகர்களை குறிவைத்து மதவிரோதிகள் அராஜகத்தில் ஈடுபடும் சம்பவங்கள் பெருகிவருகிறது. இது தடுக்கப்பட ஜெபிப்போம்.

மணிப்பூரில் பூர்வ இன கிறிஸ்தவ அமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்

மணிப்பூரின் 32 இலட்ச மக்களில், 53 விழுக்காட்டினர் இந்துக்கள், பெரும்பாலும் மெய்தி இனத்தவர். 41 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள், அவர்களில் பெரும்பாலானோர் குக்கி-சோ பூர்வ இனமக்கள்.

வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் உள்ள பூர்வ இன கிறிஸ்தவ அமைப்பு, இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் அதன் அலுவலகம் மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் மீதான தாக்குதல்களைக் கண்டித்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தக் கொடூரமான செயல்களை எங்கள் அமைப்பு சகித்துக் கொள்ளாது என்றும், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் வெளியே வந்து பிரச்சனையை விரைவில் தீர்க்கும் வரை எங்கள் அமைப்பு தனது போராட்டத்தை நிறுத்தாது என்றும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாக உரைத்துள்ளது அச்செய்தி நிறுவனம்.

பூர்வ இனக் கிறிஸ்தவர்களின் கோட்டையாகக் கருதப்படும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் நடந்த வன்முறைச் செயலுக்குப் பூர்வ இன சோமி சமூகத்தின் மாணவர் அமைப்பும் (ZSF) கண்டனம் தெரிவித்துள்ளது என்றும்,  எதிர்வரும் காலத்தில் இதுபோன்று தாக்குதல்கள் நடந்தால் இவ்வமைப்பு அதனை வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது என்றும் அது  எச்சரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது அச்செய்திக்குறிப்பு.

மார்ச் 17, இஞ்ஞாயிறு இரவு சூராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ளபூர்வ இன மக்களின் தலைவர் மன்றத்தின் (ITLF) அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் கணினிகள் மற்றும் ஆவணங்களை அழித்துள்ளனர் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத தலத்திருஅவையின் தலைவர் ஒருவர் கூறியதாகவும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

மேலும் அதே இரவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பூர்வ இன கிறிஸ்தவ மக்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் Pu Ginza Vualzong அவர்களைக் கொலை செய்யும் நோக்குடன் அவரது இல்லத்தை கும்பல் ஒன்று தாக்கியதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.