• Sunday 20 April, 2025 05:51 AM
  • Advertize
  • Aarudhal FM

நெற்றியில் குங்குமம் வைத்து போதகர் மீது தாக்குதல்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம கிராமத்தில் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை செய்துகொண்டிருந்த போதகர் ஒருவரை அங்குள்ள மத விரோதிகள் கடுமையாக தாக்கி, சித்திரவதைப் படுத்தியுள்ளனர்.

போதகரின் மனைவி கர்ப்பமான நிலையில் அவர்களையும் தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் நெற்றியில் குங்குமம் மற்றும் திருநீர் பூசி மன உளச்சலுக்குள்ளாக்கினர். கடந்த 2024 டிசம்பர் 15 ஆம் தேதி இச்சம்பம் நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் கிறிஸ்தவ போதகர்களை குறிவைத்து மதவிரோதிகள் அராஜகத்தில் ஈடுபடும் சம்பவங்கள் பெருகிவருகிறது. இது தடுக்கப்பட ஜெபிப்போம்.

மணிப்பூரில் பூர்வ இன கிறிஸ்தவ அமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்

மணிப்பூரின் 32 இலட்ச மக்களில், 53 விழுக்காட்டினர் இந்துக்கள், பெரும்பாலும் மெய்தி இனத்தவர். 41 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள், அவர்களில் பெரும்பாலானோர் குக்கி-சோ பூர்வ இனமக்கள்.

வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் உள்ள பூர்வ இன கிறிஸ்தவ அமைப்பு, இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் அதன் அலுவலகம் மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் மீதான தாக்குதல்களைக் கண்டித்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தக் கொடூரமான செயல்களை எங்கள் அமைப்பு சகித்துக் கொள்ளாது என்றும், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் வெளியே வந்து பிரச்சனையை விரைவில் தீர்க்கும் வரை எங்கள் அமைப்பு தனது போராட்டத்தை நிறுத்தாது என்றும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாக உரைத்துள்ளது அச்செய்தி நிறுவனம்.

பூர்வ இனக் கிறிஸ்தவர்களின் கோட்டையாகக் கருதப்படும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் நடந்த வன்முறைச் செயலுக்குப் பூர்வ இன சோமி சமூகத்தின் மாணவர் அமைப்பும் (ZSF) கண்டனம் தெரிவித்துள்ளது என்றும்,  எதிர்வரும் காலத்தில் இதுபோன்று தாக்குதல்கள் நடந்தால் இவ்வமைப்பு அதனை வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது என்றும் அது  எச்சரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது அச்செய்திக்குறிப்பு.

மார்ச் 17, இஞ்ஞாயிறு இரவு சூராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ளபூர்வ இன மக்களின் தலைவர் மன்றத்தின் (ITLF) அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் கணினிகள் மற்றும் ஆவணங்களை அழித்துள்ளனர் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத தலத்திருஅவையின் தலைவர் ஒருவர் கூறியதாகவும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

மேலும் அதே இரவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பூர்வ இன கிறிஸ்தவ மக்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் Pu Ginza Vualzong அவர்களைக் கொலை செய்யும் நோக்குடன் அவரது இல்லத்தை கும்பல் ஒன்று தாக்கியதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: கிறிஸ்துவ மதம் தொடர்பான கேள்வியால் சர்ச்சை

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் கிறிஸ்துவ மதம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டதால், இந்து அமைப்பினர் புகார்களை முன்வைத்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் கிறிஸ்துவ மதம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டதால், இந்து அமைப்பினர் புகார்களை முன்வைத்துள்ளனர்.

கடந்த வாரம் தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி  தேர்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில் 15.8 லட்சம் பேர் எழுதி உள்ளனர். இந்நிலையில் இந்த தேர்வில் கிறிஸ்தவ மதம் தொடர்பான கேள்விகள் கேட்டகப்பட்டது.

கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார் என்ற கேள்விக்கு, 1) அருளப்பன், 2) யோவான், 3) சந்தாசாகிப், 4) சந்தியாசி, 5) விடை தெரியவில்லை என்று கேட்கப்பட்டது.மேலும் அடுத்த கேள்வியில் தேம்பாவணியின் பாட்டுடை தலைவன் யார் என்ற கேள்விக்கு, இயேசு, மரியாள் மற்றும் யுதாஸ் என்ற பெயர்க்ள் ஆப்ஷனாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்துவ மதம் தொடர்பான கேள்விக்கு இந்து முன்னணி கண்டனம்.

கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது

நாகர்கோவில்: கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் இயேசு கிறிஸ்து மனிதர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக பாடுகள் பட்டு சிலுவையில் அறையுண்டு மறைந்தார். இதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து வறியவர்களுக்கு உதவி கள் செய்வது வழக்கம்.

இந்த நாளை அவர்கள் ஆண்டு தோறும் தவக்காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள். தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும். இன்று கிறிஸ்தவ ஆலயங்க ளில் சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாட்டையொட்டி ஏராளமானோர் பங்கேற்றனர்.

கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை நெற்றியில் சாம்பலால் சிலுவை குறியீடு செய்தார். கோட்டார் மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் ராஜ், பொருளாளர் அலோசி யஸ் பென்சிகர், ஆயரின் செயலாளர் சகாய ஆண்டனி, கோட்டார் மறை மாவட்ட முதன்மை பணியாளர் சகாய ஆனந்த், ஆலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், நாகர்கோவில் அசிசி ஆலயம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று சாம்பல் புதன் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பாதிரியார்கள் சாம்பல் மூலமாக நெற்றியில் சிலுவை குறியீடு செய்தனர். சாம்பல் புதன் நிகழ்ச்சியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சிஎஸ்ஐ ஆலயங்களிலும் சாம்பல் புதனையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி தஞ்சையில் கிறிஸ்தவர்கள் ஜெப நடை பயணம்

மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரங்கள் நீடித்து வருகிறது. இதனால் அம்மாநில பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று தஞ்சை மிஷனரி தெருவில் அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி ஜெப நடை பயணம் நடந்தது.

இதற்கு கூட்டமைப்பின் சேர்மன் பிஷப் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறும் போது :- மணிப்பூர் மாநிலத்தில் அமைதியும், சமாதானமும் ஏற்பட வேண்டும். இயல்பு நிலை திரும்ப வேண்டும். இதனை வலியுறுத்தி அனைத்து கிறிஸ்தவ கூட்ட மைப்பு சார்பில் ஜெப நடை பயணம் மேற்கொண்டோம். மேலும் தஞ்சை மாவட்ட த்தில் கிறிஸ்துவ பணி மேற்கொண்ட மிஷனரிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.

இந்த ஜெப நடை பயணத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர் .

எல்லீசன் கல்லறை அர்ச்சிப்பு

ராமேஸ்வரம், ஜூன் 6: ராமநாதபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட எல்லீசன் கல்லறை தென்னிந்திய திருச்சபை பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் வியாழக்கிழமை ஆசிா்வதித்து அா்ச்சிப்பு செய்தாா்.

சா்வதேச அளவில் தமிழுக்கு அங்கீகாரம் வழங்க பாடுபட்டவரும், திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் முதல் முதலில் ஒப்பிலக்கணம் எழுதியவரும், சென்னை மாகாண ஆட்சியராக இருந்தவரும், தனது பெயரை தமிழில் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் என மாற்றியவருமான எல்லீசன் துரை கடந்த 1819-ஆம் ஆண்டு, மாா்ச் 9-இல் ராமநாதபுரத்தில் உயிரிழந்தாா்.

ராமநாதபுரத்தில் உள்ள அவரது கல்லறையில் இருந்த தமிழ், ஆங்கில கல்வெட்டுகளின் வாசகங்கள் எந்தவித மாற்றமுமின்றி புதுப்பிக்கப்பட்டது.

இந்தக் கல்லறை அா்ச்சிப்பு நிகழ்வு ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதை தென்னிந்திய திருச்சபை மதுரை – ராமநாதபுரம் திருமண்டில பேராயா் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் பிராா்த்தனை செய்து, ஆசிா்வதித்து, அா்ச்சிப்பு செய்தாா்.

பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவா் மேரி ஜெயசிங், தென்னிந்திய திருச்சபை துணைத் தலைவா் பிராங்க் பென் ரூஸ்வெல்ட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஈஸ்டர் தாக்குதலில் பலியான 315ஆவது நபர்

இலங்கை:

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து ஐந்துவருடங்கள் கடந்தாலும் இன்னும் அதன் வடு ஆறவில்லை. தாக்குதல்களில் உயிரிழந்தோர் ஒருபக்கம் இருக்க காயமடைந்தவர்கள், அவயங்களை இழந்தோர் இன்றும் உடல், உள வேதனைகளுடன் அன்றாடம் போராடி வருகின்றனர். 2019ஆம் ஆண்டு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயம், கிழக்கில் சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் ஆகிய இடங்களில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்தன.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தின ஆராதனை ஆரம்பித்து அது முடிவடைவதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது.

அந்தவகையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தனது மகனை இழந்து மாற்றுத்திறனாளி என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்த திலினா ஹர்ஷனி அண்மையில் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றார். ஈஸ்டர் தாக்குதலில் பலியான 315ஆவது நபர் அவராவார்.

திலினா ஹர்ஷனி மனவலிமை மிக்க, ஆற்றல்கள் நிறைந்த பெண். எத்தகைய விமர்சனங்கள், ஏமாற்றங்கள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை புன்சிரிப்புடன் எதிர்கொள்வார். நீர்கொழும்பிலுள்ள பிரபல கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் கல்வி கற்ற அவர் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினார். பாடசாலையில் அனைவராலும் அறியப்பட்ட நடனக்கலைஞராகவும் இருந்தார்.

அவரால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்கவில்லை. தனது மூன்று பிள்ளைகளுடன் அவருடைய வாழ்க்கை அழகாய் நகர்ந்தது. எனினும் உயிர்த்த ஞாயிறு திருப்பலிக்காக நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கு சென்ற அவருக்கு எதிர்பாராத இழப்புகளும் ஏமாற்றங்களும் கிடைக்கும் என்பதை அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஒருநொடியில் அவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறியது.

அன்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிறைவடைவதற்கு சிறிதுநேரமே இருந்தது. அனைவரும் உயிர்த்த இயேசுவின் திருச் சொரூபத்துக்கு முன்பாக ஆசிர்வாதத்துக்காக காத்திருந்தனர். அப்போது திலினவின் கையிலிருந்த ஆசிர்வதிக்கப்பட்ட நூல் கழன்றமையால் அதை கட்டுவதற்காக மூத்த மகனை தூக்கி தனது மடியில் அமர்த்திக்கொண்டார்.

அப்போது திடீரென ஒரு பயங்கர சத்தம், மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் அங்கும் இங்கும் ஓடினர். திலின பலத்த காயங்களுடன் கீழே விழுந்தார். அவரின் பின்னால் அமர்ந்திருந்த தாய் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார். தாயார் உடனே பதறியடித்துக் கொண்டு மகளின் மற்றைய இரண்டு பிள்ளைகளையும் தேடி ஒருவழியாய் கண்டுபிடித்தார். அவர்கள் இருவரும் சிறுகாயங்களுடன் உயிர்தப்பியிருந்தனர். எனினும் திலினவின் மடியிலிருந்த மூத்த மகன் உயிருடன் இருக்கவில்லை. அதனைத்தொடர்ந்து திலினவை தாயார் தேடியபோது அவர் தரையில் முகம் குப்புற விழுந்து கிடந்தார். உயிர் ஊசலாடிகொண்டிருந்து. அவரைச் சுற்றி இரத்த வெள்ளமாக காட்சியளித்தது. உடனே தாய் அங்கிருந்தவர்களின் உதவியுடன் திலினவை முச்சக்கர வண்டியில் ஏற்றி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்தார். 14மாதங்களின் பின்னர் இடது கண்ணை இழந்த நிலையில் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுடன் மீண்டு வீட்டுக்கு வந்தார் திலின, அப்போது தான் மூத்தமகன் உயிருடன் இல்லையென்பதை அவர் அறிந்துகொள்கின்றார். அவரால் அதை தாங்கிகொள்ளவே முடியவில்லை. கடைசியாக தனது மடியிலே மகனின் உயிர் பிரிந்ததை எண்ணி எண்ணி மனம் நொந்தார். எனினும் எந்த சூழ்நிலையிலும் அவர் தனது நம்பிக்கையை கைவிடவில்லை.

முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. படுக்கையிலேயே இருந்தார். கிட்டதட்ட 5 பெரிய சத்திரசிசிச்சைகள், 3 சிறிய சத்திரசிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டிருந்தன. இடது கண்ணில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய முடியாத போதும் மற்றைய கண்ணை பாதுகாப்பதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

திலினவுக்கும் அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் கத்தோலிக்க திருச்சபை பெரும் பலமாக இருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கரித்தாஸ் அமைப்பின் ஊடாக திலினவுக்கான பிரத்தியேக அறையொன்று நவீன வசதிகளுடன் கட்டிக்கொடுக்கப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் திலினவுக்கு பக்கபலமாக இருந்தனர். திலினவை காப்பாற்ற போராடினர். இலங்கையிலுள்ள முன்னணி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடமும் ஆலோசனைக்காக திலினவைக் கொண்டுசென்றனர். வைத்தியர் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைத்ததுடன் அதற்கு பெருந்தொகைப் பணம் செலவாகும் எனவும் தெரிவித்தார். குடும்பத்தினர் ஆரம்பத்தில் சமூக ஊடகங்கள் மூலம் நிதி திரட்ட ஆரம்பித்த போதிலும், அவருக்கு அனைத்து மருத்துவக் கட்டணங்களும் மருத்துவமனையால் தள்ளுபடி செய்யப்பட்டது.

எனினும் எந்தவொரு முயற்சியும் கைகூடவில்லை. நீண்டகால போராட்டத்துக்கு பின்னர் அவர் கடந்த 29ஆம் திகதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்சமயம் பிள்ளைகள் இருவரும் தாத்தா, பாட்டியின் பாராமரிப்பில் இருந்து வருகின்றனர்.

திலினவின் இறந்த மூத்த மகனுக்கு அரசாங்கத்தால் வழக்கப்பட்ட நஷ்டஈட்டு தொகையையும் அவர் செலவழிக்கவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதை ஒருகாலத்தில் பிள்ளைகள் இருவரும் எடுத்துக் கொள்ளட்டும் என்று திலின வைப்பிலிட்டதாகத் தெரியவருகின்றது. அதுமட்டுமின்றி அவருக்கு கிடைத்த உதவித்தொகையும் பிள்ளைகளுக்காக வைப்பிலிட்டதாக தெரியவருகின்றது.

எதுஎவ்வாறாயினும் திலின போன்று பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

வசந்தா அருள்ரட்ணம்

நாகையில் 250 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட டச்சு தேவாலயம் மீண்டும் திறப்பு

நாகப்பட்டினம்: நாகையில் பழைய பேருந்து நிலையம் எதிரே 1774ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால் தூய பேதுரு தேவாலயம் கட்டப்பட்டது. இறை வழிபாடு, கல்வி, மருத்துவத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த தேவாலயம், நாளடைவில் சிதிலமடைந்தது. இதையடுத்து, இந்த தேவாலயத்தைப் புனரமைக்க ஓராண்டுக்கு முன் முடிவெடுக்கப்பட்டு, அதன்படி 80 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசின் பங்களிப்புடன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், பணிகள் அனைத்தும் முடிந்ததைத் தொடர்ந்து, டச்சுக்காரர்களால் எழுப்பப்பட்ட 250 ஆண்டு கால சிஎஸ்ஐ தூய பேதுரு தேவாலயத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேவாலயத்தை திருச்சி தென்னிந்திய திருச்சபையின் பேராயர் சந்திரசேகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை, பாமாலையுடன் ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், கரூர் மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பேராயர், ஆயர்கள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

பல கோடி செலவில் காலணி வடிவ கண்ணாடி தேவாலயம்

தாய்வான்: தாய்வான் நாட்டில் சீயாயி கவுண்டியில் அமைந்துள்ளது காலணி வடிவ கண்ணாடி தேவாலயம். தேவாலயம் என்றவுடன் இது ஒரு பிரார்த்தனை கூடம் என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால் இது வழக்கமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படாது. மாறாக திருமணத்திற்கு முன்பு போட்டோசூட் மற்றும் திருமண விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்திற்குள் காதலர்களுக்கான நாற்காலி, பிஸ்கட்டு, கேக்குகள் போன்றவை வைக்கப்பட்டிருக்கும். இதில் 32 க்கும் மேற்பட்ட நிறமுள்ள கண்ணாடி பேனல்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. 1060களில் வாங் என்ற பெயர் கொண்ட 24 வயது  பெண் பிளாக் ஃபுட் நோயால் பாதிக்கப்பட்டதால் அவருடைய இரண்டு கால்களையும் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணின் திருமணமானது நின்று போனது. அதன் பின்னரான காலத்தை அந்த பெண் திருமணமாகாமல் தேவாலத்திலேயே கழித்ததாக கூறப்படுகிறது. இவர் நோயால் பாதிக்கப்பட்ட காலத்தை நினைவூட்டுவது மட்டுமல்லாமல் பெண்கள் தங்களுடைய மகிழ்ச்சியான எதிர்காலத்தை நோக்கி நடக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடையாளமாகவே இந்த தேவாலயம் காலணி வடிவில் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தகத்துக்கு பைபிள் பெயர்; நடிகைக்கு கோர்ட் நோட்டீஸ்

போபால்: தன் கர்ப்பகால நினைவுகள் தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் வெளியிட்டுள்ள புத்தகத்துக்கு, ‘பைபிள்’ என்று பெயரிட்டுள்ளதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது குறித்து பதிலளிக்கும்படி அவருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், 42, பிரபல நடிகர் சயீப் அலி கானை திருமணம் செய்தார். தான் கர்ப்பமாக இருந்தது தொடர்பாக, கரீனா கபூர் ஒரு புத்தகத்தை எழுதினார்.

கடந்த 2021ல் வெளியான இந்த புத்தகத்தில், தன் அனுபவங்களுடன், தாயாக தயாராகும் பெண்களுக்கு பல ஆலோசனைகளை அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த, கிறிஸ்டோபர் ஆன்டனி என்ற வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ‘கரீனா கபூர் தன் புத்தகத்தின் தலைப்பில், பைபிள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். புனித நுாலாக கருதும் கிறிஸ்துவர்களின் மத உணர்வை புண்படுத்துவதாக இது அமைந்துள்ளது. அதனால், புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என, மனுவில் அவர் கூறிஉள்ளார்.

முன்னதாக இது குறித்த புகாரை பதிவு செய்ய போலீசார் மறுத்ததாகவும், கீழமை நீதிமன்றங்கள் அதை விசாரிக்க மறுத்ததாகவும் அவர் மனுவில் கூறிஉள்ளார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ் அனுப்ப, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.