உங்கள் முடிவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்

அவர்கள் யோசனைகெட்ட ஜாதி, அவர்களுக்கு உணர்வு இல்லை.
அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து தங்கள் முடிவை சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.
(உபாக 32 : 28 , 29), (சங் 73 : 24), (எபி 13 : 7)
இந்தக் குறிப்பில் மிகவும் மோசமான முடிவை சந்தித்த மூன்று வேதாகம புருஷர்களின் குணாதிசியங்களைக் அறிந்து நாம் எச்சரிப்படைவோமாக. உங்கள் முடிவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். வாழ்க்கையை இனிமையாக ஆரம்பித்து மோசமான முடிவை தேடிக்கொள்ள வேண்டாம். இது ஒரு எச்சரிப்பின் செய்தி.
- பிலேயாமின் தவறான ஒப்புதல்
அவர்களைக் கொன்று போட்டதும் அன்றி, மீதியானவரின் ஜந்து இராஜக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்று போட்டார்கள் பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலும் கொன்று போட்டார்கள் (உபாக 31 : 8), (உபாக 23 : 4 , 5), (எண் 12 : 17 , 18 , 19) இங்கு பிலேயாமின் பரிதாபமான முடிவை
பாருங்கள். அவனுக்கு தற்செயலாக ஏற்ப்பட்ட முடிவு அல்ல. அவன் தன்முடிவு எப்படி இருக்கவேண்டும் என்று அவனே சொன்னவை நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவு போல் இருப்பதாக என்றான் (உபாக 23 : 10) இந்த முடிவுக்கு காரணம் அவனுடைய தவறான ஒப்பந்தம். அருமையானவர்களே உங்கள் முடிவைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். தேவனுக்கு விரோதமாக துரோகம் செய்பவர்களோடு ஒப்பந்தம் செய்யாது இருங்கள். மறைமுகமாக துர்ஆலோசனை கூறாதிருங்கள். உங்கள் முடிவு நீதிமானைப் போல் காணப்படட்டும்.
- சிம்சோனின் தவறான நேசம்
பெலிஸ்தர் அவனைப்பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைகாசாவுக்கு கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குப் போட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக் கொண்டிருக்கவைத்தார்கள். (நியாயா 16 : 21)
இங்கு சிம்சோனின் பரிதாபமான முடிவை பார்க்கிறோம். நசரேய விரதத்தை மேற்க் கொண்டு பெலிஸ்தரை கதிகலங்க வைத்தவன் முடிவில் கண்கள் பிடுங்கப்பட்டு விளையாட்டுப் பொருளாக மாறினான் என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி … அவர்களோடு கூட மரித்தான். (நியாயா 16 : 30). இவனுக்கு ஏற்பட்ட முடிவுக்கு காரணம் தவறான நேசம். எபி 11 ஆம் அதிகாரத்தில் விசுவாச பட்டியலில் அவனது பெயர் உள்ளது. இவனது முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவன் தனது பிரதிஷ்டையில் உறுதியற்றவனாக இருந்தான் மதிகேடனைப்போல வாழ்ந்தவன். தெலிலால் மீது கொண்ட காதலால் பரிசுத்தத்தை இழந்தான். அவன் தன் பெலத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தி தனது சிரசின் முடி சிரைக்கப்பட்டு நசரேய விரதம் முறிக்கபட்டு பரிதாபமான நிலைமைக்கு தள்ளப்பட்டு தன் முடிவைத் தேடிக்கொண்டான். பொன்னுக்கும் , பெண்ணுக்கும் எச்சரிக்கையாக இருங்கள். சிம்சோனை போல அதிலே தவறான நேசம் கொள்ளாதீர்கள் கர்த்தர் தன்னை விட்டு விலகியதைக்கூட அறியாமல் இருந்தான் (நியாயா 16 : 20). தேவனது பிள்ளைகளே சிம்சோனது முடிவு நமக்கு ஒரு எச்சரிப்பு. உங்கள் பிரதிஷ்டையில் உறுதியாயிருங்கள். கர்த்தர் உங்களை விட்டு விலகினபின்பும் கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்று பொய் மாயையோடு ஏமாற்றத்துடன் ஊழியம் செய்யாதிருங்கள். சிம்சோனின் முடிவு நமக்கு எச்சரிப்பு.
- யூதாஸ் காரியோத்தின் தவறான உடன்பாடு.
இயேசுவை பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம்m நிறைவேற வேண்டியதாயிருந்தது அவன் எங்களில் ஒருவனாக என்னப்பட்டு இந்த ஊழியத்தில் பங்கு பெற்றவனாய் இருந்தான் அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து தலைகீழாக விழுந்தான் அவன் வயிறு வெடித்து குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று (அப் 1 : 16 , 17 , 18), (யோவா 12 : 5 , 6), (மத் 26 : 14 , 15)
இங்கு யூதாஸின் பரிதாபமான முடிவை பார்க்கிறோம். இதுவும் தற்செயலான முடிவு அல்ல அவன் நான்றுக்கொண்டு செத்தான். அவனது பரிதாபமான முடிவுக்கு இரண்டு காரணம் உண்டு. பெருமையான பேச்சு. (யோவா 12 : 5, 6) துணிகரமான உடன்பாடு. (மத் 26 : 14 , 15) ” நான் அவரைக் உங்களுக்கு காட்டிக்கொடுக்கிறேன். நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். (மத் 26 : 14 , 15).
இயேசுவோடு இருக்கவேண்டிய ஊழியன் பண ஆசையினால் தவறாக உடன்பட்டான். அந்த முப்பது வெள்ளிகாசு அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. சகேயூ கூட தன் அஸ்தியை இயேசுவுக்காக விட்டுக் கொடுத்தான். இயேசு எனக்கு வேண்டும் காசு எனக்கு வேண்டாம் என்றான். ஆனால் யூதாஸ் காசு எனக்கு வேண்டும் இயேசு எனக்கு வேண்டாம் என்று தன் முடிவை தேடிக்கொண்டான். சகேயு ஒரு பாவி. ஆனால் யூதாஸ் இயோசுவோடு கூட இருக்கிற அப்போஸ்தல ஊழியர். யூதாஸ் நம்மைப் பார்த்து சொல்வது என்னைப் போல பெருமையான பேச்சுகளை பேசாதீர் கள். அநீதியானவர்களோடு உடன்படாதீர்கள். யூதாஸின் முடிவு நமக்கு ஒரு எச்சரிப்பு.
பாராட்டத்தக்க முடிவை பெற்றுக்கொள்ளுங்கள் பிலேயாமைப் போல தவறான ஒப்பந்தப் படாதிருங்கள் . சிம்சோனைப் போல தவறான நேசம் கொள்ளாதீர்கள். யூதாஸைப்போல தவறான உடன்பாடு கொள்ளாதீர்கள். உங்கள் முடிவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
ஆமென்.
S. Daniel Balu
Tirupur