அந்த இளைஞனைப் போல் ஆகிவிடு!

இனிய இளைஞனே
துளிர்விடும் தளிரே
உனக்குள் இருக்கும்
உள்ளாற்றலை உற்றுப்பார்க்க
ஜெபத்தோட்டத்திற்குள்ளே
நுழைந்திருக்கிற ஒலிவ மரக்கன்றே
உன்னை நீ அறிந்தால்
உன் வழியை வாய்க்கப்பண்ணி
யோசுவாவை போல் ஆகிவிடலாம்
இந்திய மண்ணில்
முளைத்த இளைஞனே
ஆதியாகமத்திற்குள் நுழைந்து
37 -ல் ஓர் அழகிய 17 – ஐ இனம் கண்டுவிடு.
அந்த டீனேஜ் வாலிபனை போல் ஆகிவிடு
போதையில் சிக்கி பாதை மாறி
30- இல் முடங்கி விடுகிறது
இக்கால இளைய சமுதாயம்
நீயோ 30 -ல் அந்த இளைஞனைப் போல
முழுமை பெற்றுவிடு
சிறையிருப்பிலிருந்தாலும்
சிங்காசனத்தில் ஏறிவிடலாம்
துணிவுடன் தூய மனதுடன்
துன்மார்க்கத்தை எறிந்துவிடு
உண்மையுடன் நல்மனசாட்சியுடன்
தீமோத்தேயுவைப் போல
உத்தம கூட்டாளி ஆகிவிடு
எங்கிருந்தாலும் அங்கிருக்கும்
பவுலை போன்றோருக்கு
உடன்பங்காளி ஆகிவிடலாம்.
வில்லுகளையும் செல்லுகளையும்
வசைச்சொல்லுகளையும்
அம்புகளையும் வீண் வம்புகளையும்
அசட்டை செய்துவிடு
அந்நிய நாடானாலும்
அந்த இளைஞனைப் போல
கண்ணியத்தை காட்டிவிடலாம்.
சோதனைகள் சிலரை பதுக்கலாம்
சிலரை செதுக்கலாம்
சோதனைகள் கூட்டணி
அமைத்துக் கொண்டு
அந்த இளைஞனை ஒதுக்கியது.
இல்லை இல்லை செதுக்கியது
உன்னையும் ஒதுக்க நினைக்கும்
உலகத்தில் செதுக்க ஒப்புக்கொடுத்தால்
உரிய காலத்தில் உயர்வடைந்துவிடலாம்
நீரூற்றண்டையிலே நிற்பவனே
அந்த இளைஞனைப் போல
கனிதரும் செடியாகிவிடு
சுவரென்றும் பாராமல்
கொடிகளைப் படரவிடு
வில்வீரர் மனமடிவாக்கினாலும்
கவலையை விடு
விசுவாச வீரனாய்
செடியை கொடியாக்கி
பகைவர் என்றும் பாராமல்
படரவிடலாம்.
உனக்குள் உறைந்துகிடக்கும்
உள்ளாற்றலை உசுப்பிவிடு
யாக்கோபின் வல்லவரால்
உன் ஆற்றல்
அணு உலை ஆற்றலாகட்டும்
வல்லவரின் கரங்களால்
மேய்ப்பனாகிவிடு
இஸ்ரவேலின் தேவனால்
கன்மலையாகிவிடு
உலகத்தை ஒளிமயமாக்கிவிடலாம்
நான் ஏன் பிறந்தேன் என்றோ
நான் எதற்க்காக இங்கு வந்தேன் என்றோ
பேசாதே
உன் சிரசை சிங்காரமாக்கி
உன் உச்சந்தலையை அலங்கரிக்க
உனக்குள்ளிருக்கும் உள்ளாற்றலை
பேராற்றலாக்க
இந்த பயிற்சிப் பட்டறைக்கு
கொண்டுவந்திருக்கிறேன்
இங்கே சர்வவல்லவரோடு பழகி
சமாதானமாகிவிடு
ஆபிரகாமைப் போல
விசுவாசத்தில் வல்லவனாகிவிடலாம்
வாலிபத்தின் வாசலில் நிற்பவனே
உன்னை வாழ்த்துகிறேன்
படித்தது பிடித்திருந்தால், பதிவிடுங்கள்
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை 14

(2014 மே 19-23 தேதிகளில் ஜெபத்தோட்டத்தில், சுத்திகரிப்பின் மூலம் எழுப்புதல் ஊழியத்தின் மூலம் நடைபெற்ற வாலிபர் தரிசன முகாமில் “உள்ளாற்றல்” என்ற கருப்பொருளை மையமாக வைத்து எழுதி வாசிக்கப்பட்ட கவிதை)