பிறப்பும் ! பிறப்பும்! வித்யா’வின் பதிவு!

Share this page with friends


நீர் என்னுடைய குமாரன்,
இன்று நான் உம்மை
ஜநிப்பித்தேன்
(சங்கீதம் 2:7).

I will declare the decree:
The Lord has said to Me, 
‘You are My Son,
Today I have begotten You
.”

பிறப்பு இறப்பு – படங்களோடு
தினசரிப் பத்திரிகைகளில்
காணப்படும் விளம்பரங்களை
பார்த்துப் பழகிய உங்களுக்கு,

பிறப்பும் பிறப்பும் என்ற
தலைப்பைப் பார்த்தவுடன்
வழக்கமான தலைப்பாக
இல்லையே என்று
கொஞ்சம் சங்கடமாகத் தோன்றும்.

ஆம். பிறப்பும் இறப்பும்
மனித வாழ்க்கையின்
இயற்கை நியதி என
மார்க்கம் சொல்லுகிறது என்று
மனித வர்க்கம் தளர்
நடைபோடுகிற காலம்.

ஆம். மனிதன்
பிறந்தால் இறக்கிறான்
.

ஆனால் மனித குலத்தின்
மீட்பிற்காக இறப்பதற்கு
என்றே ஒருவர் பிறந்தார்.
அவர்தான் இயேசு கிறிஸ்து.


இயேசு பிறந்ததால் மனிதனின்
ஆத்தும மரணம் மறுபிறப்பாக
மாற்றியமைக்கப்பட்டது. 

இதுதான் இயேசு பிறப்பினால் வந்த
விந்தை நிகழ்வாகும்.
விளங்கவில்லையா?

இன்னொரு முறை
வாசியுங்கள். புரியும்.

கிறிஸ்துமஸ் கொண்டாடும்
கிறிஸ்தவ சமுதாயத்திற்கு
இன்று நன்றாகவே விளங்கும்.
இருப்பினும் என்ன?
கால நிகழ்வுகளையே
தன் கணக்கில் எடுத்துக்கொண்டு
காலத்தால் கரைந்துபோகிறான்
கிறிஸ்தவன்.

இயேசு பிறந்து (கி.மு. கி.பி. என)
சரித்திரத்தையே மாற்றினார்.


இந்த கி.மு. கி. பி என்ற
கிறிஸ்துவுக்கு முன்,
கிறிஸ்துவுக்கு பின் என்ற
சரித்திரத்தை இரண்டாகப் பிரித்த
சம்பவத்தை உள்ளூரில் வேண்டுமானால்
தங்கள் இஷ்டப்படி மாற்றி
மறைத்துக்கொள்ளலாம்.


ஆனால், உலகமெங்கிலும் உள்ள
சரித்திரப் பதிவேடுகளில்
மாற்றியமைக்க யாரால் கூடும்?


இயேசு பிறந்து (கி.மு. கி.பி. என)
சரித்திரத்தையே மாற்றினார் என்று
எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும்
வேத பண்டிதர்கள்,

அவர் பிறந்ததால், ஆத்தும மரணத்தை,
தம் மரணத்தால் அழித்து
மனிதனின் மறுபிறப்பாக
அவன் ஆத்துமாவை மாற்றினார் என்று
அழுத்தி அறிவிக்கிறார்களா?


அலங்கரிக்கப்பட்ட மரணமடைந்த
ஆத்துமாவை உன் சரீரத்தில்
பிரேத வண்டியாய் சுமந்துகொண்டு,
எத்தனை ஆண்டுகளுக்கு
ஆண்டவரின் பிறப்பை
அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகையை
புத்தாடை அணிந்து
பலகாரம் சுட்டு கொண்டாடிக்கொண்டிருப்பாய்?


இயேசுவை இரட்சகராக ஏற்று,
அவரையே விசுவாசிப்பவனை
மரணம் ஆண்டுகொள்வதில்லை.
அவன் யாராயிருந்தாலும்
உலக சரித்திரத்திற்கு அப்பாற்பட்டவன்.


அவனுக்குப் பிறப்பு உண்டு.
இறப்பு இல்லை.
ஆச்சரியமாய் இருக்கிறதா?

மனிதனுக்கு ஏழு மறு பிறப்பு
என்று சொல்லும் கதைகள் உண்டு.
நாயாக, நரியாக, கழுதையாக,
இன்னும் பல பிறவிகளாம்!


எல்லாப் பிறவிகளின் மொத்த உருவமாக
எண்ணங்களால் மனிதன் இன்னும்
காணப்படுகிறானே!


உருவத்தால்  மாறி,
இவனுக்கு இனிமேலும் என்ன பயன்?
உலகைக் கெடுக்கவா? 

இருக்கிற ஒரு ஏகப் பிரவிப் பயனை அடைவதில்
மனிதனுக்கு நாட்டமில்லையே! 

ஜீவன் இல்லாத
பாவத்தினால்
செத்துப்போன ஆத்துமாவை
வைத்துக்கொண்டு
நித்திய ஜீவாதிபதியின்
பிறப்பின் பண்டிகையைக்
கொண்டாடுவதில் என்ன நியாயம்?


கிறிஸ்துமஸ் என்பது எல்லோரும் கொண்டாடும்
ஒரு பொதுவான பிறந்த நாள் விழாவாக
உலக சமுதாயம் ஏற்றுக்கொண்டு,
இயேசுவைச் சரித்திர நாயகனாக மட்டும்
பாராட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதில்
உனக்கும் ஒரு பங்கு இருக்கலாம்.

இதினால் மட்டும்
உன் ஆத்துமா திருப்தியடைந்துவிடுமா?

அகில உலகையும் படைத்த படைப்பின் கர்த்தர்
உனக்காக மனிதனாய்ப் பிறந்திருக்கிறார். 
அவரே உன் வழி. உன் சத்தியம். ஜீவன் எல்லாம்.
அவர் பிறந்ததால், நீ மறுபடியும் பிறந்திருக்கிறாய்

என்ற உள்ள மாற்றம் வேண்டாமா?

அவர் அருளிய வார்த்தைகளிலெல்லாம்
எவற்றை நீ கைக்கொண்டு
சத்தியத்தில் நடக்கிறாய்?

அவர் மூலமாய் உன்னுள் பிறந்த
நித்திய ஜீவனின் ஒளி
இந்த உலகில் பிரகாசிக்கிறதா?


பொய்யான உலகில் பிறந்து
மாயையான வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கும்
மனிதனின் உண்மையான பிறப்பு,
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதில்தான்
தொடங்குகிறது.

நித்திய ஜீவனை உனக்குத் தந்து
உன்னிலிருந்து ஆத்தும மரணத்தை
எடுத்துப்போட்டு உன்னைப் புதிய பிறப்பாக
பிறக்கச் செய்த இயேசு பிறந்த நாள்,
நீ பிறந்த நாளாகும்.


உலகில் நீ பிறந்த நாளைக் காட்டிலும்
நீ கிறிஸ்துவுக்குள் பிறந்த நாள்
மிக முக்கியமானது.

கிறிஸ்து பிறந்ததால்
இந்த அளவில்லாத ஆத்துமாக்களெல்லாம்
நித்தம் நித்தம் மரித்த நிலையிலிருந்து
உயிர்பெற்று  மீண்டும்
பிறந்துகொண்டடே இருக்கின்றன.

இதனால் கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சி,
பெருவெள்ளமாய் ஓடிக்கொண்டே இருக்கிறது. 
இந்த மறுபிறப்பின் வாழ்வைப் பெற்ற
ஆத்துமாக்களில் நீயும் ஒருவரா?


கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பின்
உன் பிறப்பு என்று,
பிறப்பும் இறப்புமாக இல்லை. 
பிறப்பும் பிறப்புமாகவே இருக்கட்டும்.


இதுவே கிறிஸ்துமஸ்
செய்தியின்
சாரம்.

இயேசு அவனை நோக்கி;
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். 
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும்,
பிழைப்பான். உயிரோடிருந்து
என்னை விசுவாசிக்கிறவனெவனும்
என்றென்றைக்கும் மரியாமலுமிருப்பான்;
இதை நீ விசுவாசிக்கிறாயா என்றார்

(யோவான் 11:25,26).

நீர் என்னுடைய குமாரன்
இன்று நான் உம்மை
ஜெநிப்பித்தேன்
(சங்கீதம் 2:7).

கட்டுரை ஆசிரியர் :
பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (1939 -2021)
=======================================

தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
இயக்குனர் – இலக்கிய துறை (TCN MEDIA)


Share this page with friends