திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு..!

Share this page with friends

கடந்தாண்டு தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பழங்குடியின செயற்பாட்டாளர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி, மும்பையில் உடல் நலக்குறைவினால் காலமானார்.

மும்பை (மகாராஷ்டிரா): ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மற்றும் ஏழை மக்களின் நலன்களுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி, மும்பையில் உடல் நலக்குறைவினால் காலமானார். அவருக்கு வயது 84.

திருச்சியைச் சேர்ந்த ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தங்கியிருந்து ஆதிவாசி மற்றும் பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வந்தார்.

ஸ்டேன் சுவாமி மீது பாய்ந்த உபா:

மகாராஷ்டிராவில், பீமா கோரேகான் போர் நினைவு அஞ்சலி செலுத்தும் இடத்தில் மரியாதை செலுத்த சென்ற பட்டியலின மக்கள் மீது 2018ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இச்சம்பவத்தினை நினைவுகூரும் வகையில், நடத்தப்பட்ட கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக ஸ்டேன் சுவாமி மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின்கீழ் (Unlawful Activities (Prevention) Act) குற்றம் சுமத்தப்பட்டு, தேசியப் புலனாய்வு முகமை அமைப்பின் மூலம் ஒன்றிய அரசு அவரை ராஞ்சி நகரில் வைத்து கைது செய்தது. பின்னர் அவர் மீது எல்கர் பரிஷத் கூட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாகவும் வழக்குப் பதியப்பட்டது.

உடல் நிலை குன்றியநிலையில் இருந்த ஸ்டேன் சுவாமி:

அவ்வாறு கைது செய்யப்பட்ட ஸ்டேன் சுவாமி, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தலேஜா சிறையில் தண்டனை அனுபவித்துக்கொண்டு இருக்கும் நிலையில், அவரது உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவருக்கு மருத்துவக் காரணங்களுக்காக மும்பை உயர் நீதிமன்றத்தில் பரோல் வழங்க அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். முன்னதாக நேற்று (ஜூலை 4) அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டன.

ஸ்டேன் சுவாமிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் மகாராஷ்டிரா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இன்று ஸ்டேன் சுவாமி மும்பையில் உள்ள ஹோலி மருத்துவமனையில் (5.7.2021) நண்பகல் 1.30 மணிக்கு மரணம் அடைந்தார்.

அவரது இறப்புக்குப் பல்வேறு மனித உரிமைச்செயற்பாட்டாளர்களும் சமூக ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காடு மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக ஆதிவாசி சமூகங்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து 3 தசாப்தங்களுக்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இந்த வாரம் அதிகம் பேர் வாசித்த கட்டுரைகள்..


Share this page with friends