சுதந்திர கொடி ஏற்றிய காலேப் “EIGHTY FIVE”

Share this page with friends

சுதந்திர கொடி ஏற்றிய காலேப் EIGHTY FIVE

பார்வை இல்லாதிருப்பதைவிட
பெரிய கொடுமை
தரிசனம் இல்லாது வாழ்வதுதான்
என்று
பார்வையற்றோருக்குப்
பாதையமைத்துக் கொடுத்தப் பாவை
ஹெலன் கெல்லர் (1880-1968) அம்மையார்
எழுதிவைத்துள்ளார்.

திராணியுள்ளவன் என்று அர்த்தமுள்ள
எப்புன்னேயின் குமாரன் காலேப்,
வேவு (உளவு) பார்க்கப்போன
பன்னிரண்டு கோத்திரத் தலைவர்களில் ஒருவர்

காலேப் என்று உங்கள் நாவு
சொல்லி முடிப்பதற்குள்
யோசுவா என்ற பெயர்
உங்கள் நினைவுக்கு
வருவதைத் தடுக்க முடியாது.
அந்த அளவுக்கு மோசேயோடு
இணைந்து தோள்கொடுத்தவர்கள்

இவர்கள் ஒரு தாய் வயிற்றுப்
பிள்ளைகள் அல்ல,
இரட்டையர்களும் அல்ல,
இருவரும் தேவ தரிசனம்
பெற்றத் தலைவர்கள்

காலேப், கானானை உளவு
பார்க்கப் போனபோது,
நாற்பது வயது நடுத்தர மனிதர்

கானான் தேசம் பற்றிய
செய்திகளைச் சேகரிக்கச்
சென்றவர்களில் காலேபும்,
யோசுவாவும் தவிர
மற்ற பத்துப் பேருமே,
விசுவாசப் பாதையைத்
தவற விட்டுவிட்டு,
விசுவாசப் பார்வையை
பறிகொடுத்துவிட்டு,
கர்த்தர் சொன்னதை
மறந்துவிட்டு, கண் கண்டபடி
துர்ச்செய்திகளை
விரைவுச் செய்திகளாகப்
பரப்பிவிட்டு,
ஜனத்தின் இருதயத்தைக்
கரையப்பண்ணியவர்கள்.

இன்றைக்கும்
இப்படிப்பட்டவர்கள்
வீட்டிலும் நாட்டிலும்
உலகமெங்கிலும்
நல்ல சுகத்துடன்
இருக்கிறார்கள்

அந்தப் பத்துப் பேரும்
விசுவாசிகள் அல்ல,
வெறும் விமர்சகர்கள், அதாவது,
கனிகளை விட்டுவிட்டு
முட்களையும்,
காய்ந்த சருகுகளையும் மட்டுமே
மேய்ந்துகொண்டிருக்கும்
ஒட்டகங்களைப் போல
கரடுமுரடானவர்கள்.

தலைவர்களைப் போல, சும்மா
தலையைத் தூக்கிப்
பார்ப்பார்களே தவிர,
தலைவர்களாக இருப்பதற்கு
தகுதி இல்லாதவர்கள்

எகிப்திலிருந்து புறப்பட்ட
ஆறு லட்சம் புருஷரில்
காலேபும் யோசுவாவும் மட்டுமே
கானானுக்குள் காலடி
எடுத்துவைத்து….

FR BERCHMANS
Father. Berchmans, Jebathotta Jeyageethangal

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண்பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடிபறக்கும்
என்ற

தந்தையின் பாடலை, முந்திப் பாடி
தங்களுடைய சுதந்திர வீதத்தில்
பங்கெடுத்தவர்கள்.

இருபது வயதிற்கு மேற்பட்ட
விசுவாசியாத மற்ற அனைவருமே
அழிந்துபோனார்கள்
(யூதா 5)

அந்த வனாந்தரத்தில்
நாற்பது ஆண்டுகளும்
ஒருபுறம் ஆராதனை,
இன்னொருபுறம்
அடக்க ஆராதனை
எப்படித்தான் பாஸ்டர் மோசே
சமாளித்தாரோ!

கொரோனாவின் தாக்கம்
ஏதுமில்லை
அத்துமீறிய நாவின்
தாக்கம் மட்டுமே
அத்தனை இலட்சம்
வனாந்தரச் சாவுகளுக்கு
காரணமாகிவிட்டது.

இந்தக் காலேப் என்பவர்
ஓர் வித்தியாசமான மனிதர்

அவர் ஒரு வாலிபனும் அல்ல,
ஏலியனும் அல்ல,
எலியாவின் முன்னோடியும் அல்ல,
ஏனோக்கின் வம்சாவளியும் அல்ல,
எப்புன்னேயின் குமாரனவர்

கண் கண்டபடி,
காது கேட்டபடி அல்லாமல்
இருதயத்தில் உள்ளபடி
மோசே என்ற தனது
தலைவனுக்கு நற்செய்தியைக்
கொண்டுவந்தவர்

வாயில் ஒன்று,
வீட்டு வாயிலில் மற்றொன்று
உள்ளத்தில் ஒன்று,
இல்லத்தில் இன்னொன்று
என்றெல்லாம்
பேசத் தெரியாதவர்

உதாரணமாக,
இயேசுவே இந்த வீட்டின்
தலைவர் என்று வாயிலில்
போர்டு போட்டிருப்பார்கள். ஆனால்
இவர்களே தலைமைப்
பொறுப்பில் இருப்பார்கள்

கர்த்தருக்குப் பண்டிகை என்று
போர்டில் போட்டுவிட்டு,
கன்றுக்குட்டிக்கு ஆராதனை
செய்தவர்களைப் பற்றி வேதத்தில்
வாசித்திருக்கிறீர்களா?

”என்னோடேகூட வந்த
என் சகோதரர்,
ஜனத்தின் இருதயத்தைக்
கரையப்பண்ணினார்கள்;
நானோ என் தேவனாகிய
கர்த்தரை உத்தமமாய்ப்
பின்பற்றினேன்” என்று
உரக்கச் சொன்ன உத்தமர்
என்றுகூடச் சொல்லலாம்.

இன்று நான் 85 வயதுள்ளவன்
(எனது பிறந்தநாள் பரிசாக)
எபிரோன் என்ற
மலைநாட்டையும் தாரும்
என்று கேட்டு,
ஏனாக்கியர்களை முறியடித்து
வெற்றியைச்
சுதந்தரித்துக்கொண்டவர் காலேப்.

இலவசமாய் எதுவுமே
வேண்டாம்.
போராடிப் பெறுவதே
மேலானது, என்ற உயர்ந்த
கொள்கையுடையவர்.

ஓய்ந்து, சாய்ந்து, உட்கார்ந்து
மருந்து மாத்திரைகளுடன் பழகி
ஊன்று கோலை அல்லது
உடனிருப்பவரை
உற்ற நண்பனாக்கிக்கொள்ளும்
முதிர்ந்த வயதில்,

கர்த்தர் அந்நாளிலே சொன்ன
இந்த மலை நாட்டை
எனக்குத் தாரும்….
கர்த்தர் என்னோடிருப்பாரானால்
கர்த்தர் சொன்னபடி
அவர்களைத் துரத்திவிடுவேன்
என்று நெஞ்சை உயர்த்திச் சொன்ன
அந்த மாமனிதரின்
வயதைக் கொஞ்சம்
உற்றுப்பாருங்கள்

இன்றைய இளம்
சமுதாயத்திற்கு
CHICKEN 65 என்றால் தெரியும்
சாதிக்கச் சந்தர்ப்பம் தாரும்
என்று கேட்ட
CALEB 85 என்றால் தெரியுமா?

முடவன் கொம்புத் தேனுக்கு
ஆசைப்பட்டது போன்றதொரு
நிலை இவருக்கு இல்லை

எதுக்கும் கேட்டுப்பார்ப்போம்
Application போட்டுப் பார்ப்போம்
வந்தால் வரட்டும்,
போனால் போகட்டும்,
தேவ சித்தம் என்று
சித்தாந்தம்
பேசிக்கொண்டிருக்கவில்லை.

தான் கேட்பதை
பெற்றுக்கொள்ள முடியும்
என்ற விசுவாசம்,
நாற்பது ஆண்டுகளுக்கு
முன் இருந்த பெலன்
இன்றைக்கும் இருக்கிறது
என்ற நம்பிக்கை,
இந்த இரண்டுமே
இந்த உத்தம மனிதரை
உந்தித்தள்ளியது

கர்த்தர் சொன்ன
வார்த்தை மாறவில்லை
கர்த்தரோடு நடந்த காலேபுக்கு
வயது ஏறியது, ஆனாலும்
பெலன் குறையவில்லை

அரண்களை நிர்மூலமாக்கி
ஏனாக்கியர்களை எதிரிட்டுப்
போராடி முறியடித்து
மலைமேல் ஏறி வெற்றிக்கொடி
நாட்டுவேன் என்ற
நிச்சயத்தோடு
யோசுவாவிடம் கேட்டார்

காலேப் பிரதர், உங்களுக்கு
வயதாகிவிட்டது,
இந்த விஷப் பரீட்சையும் வேண்டாம்
வீராவேஷமும் வேண்டாம்

கொஞ்சம் சும்மா இருங்க என்று
சொல்லி, யோசுவா
அவரை ஒதுக்கிவிடவில்லை

சாதிக்கச் சந்தர்ப்பம் கேட்டவர்
எந்த வயதை உடையவரானாலும்
வயதைப் பார்க்காமல்
வாய்ப்பளித்தவர்தான் யோசுவா.

காலேப் ’85 சுறுசுறுப்பில் ஒரு தேனீ
நிதானத்தில் அவர் ஒரு ஞானி

காலேப் EIGHTY FIVE தாழ்மையின் வஸ்திரத்தை
ஆடையாக அணிந்திருந்தார்

நீதிபரருக்குத் தலைவணங்க
படித்திருந்தார்

விசுவாசம் என்னும் கேடகத்தைப்
பிடித்திருந்தார்

உண்மையுள்ளவனாயிருக்கிறதற்கு கர்த்தரால்
இரக்கம் பெற்றிருந்தார்.
(1 கொரிந்தியர் 7:25)

இன்றைக்கு வாய்ப்புகளுக்குக்
காத்திருக்கும்
இந்திய இளைஞர்கள் ஏராளம்

இவரோ, வாய்ப்புக்கு
வாய்ப்பளித்த இஸ்ரேலியர்

எபிரோன் என்ற
மலைநாட்டில் ஏறி
சுதந்திர கொடியை ஏற்றி
சுதந்திர காற்றை சுவாசித்த
காலேப் 85 என்னும் வயதான
இந்த இளைஞரை Role Model
ஆக வைத்துக்கொள்ளுங்கள்

சுதந்திர இந்தியாவில் வாழும்
இன்றைய இளைஞனே,
நாளைக்கு என்ன செய்யப்போகிறாய்?

உன்னைச் சுற்றிலும்
நம்பிக்கையற்றவர்கள்
நலிந்து, மலிந்து, பின் மெலிந்து
புசிப்போம் குடிப்போம்,
நாளைக்குச் சாவோம் என்று
கூட்டணி அமைத்து
அறிக்கை விட்டுக்
கொண்டிருக்கும்போது,
கனியற்ற வார்த்தைகளாலும்
பணிவற்ற செயல்களாலும்
ஒட்டகங்களைப் போல
பாலைவனத்தில்
ஒய்யாரமாய் நடந்து
வாழ்வே மாயம் என்று
சொல்லிக் கொண்டிருக்கும்
இந்த ஊரடங்கின் நாட்களில்,

நீ ஒரு காலேப் என்ற
திராணியுள்ளவனாக மாறிவிடு
வற்றாத நீரூற்றாகிவிடு
வளமான தோட்டமாகிவிடு
நீ வாழும் தேசத்தை
வார்த்தைகளால் நிரப்பிவிடு

காலேப் ஓர் கவரிமான்
நீதியில் பிரியப்படுகிற நீதிமான்

எனவே கர்த்தர் அவர் கால்களை
மான் கால்களைப் போலாக்கி
உயரமான ஸ்தலங்களில் ஏறி
கொடியேற்றச் செய்தார்

இந்தியா சுதந்திரம் பெற்று
73 ஆண்டுகள்
கடந்து போய்விட்டது
இந்த 74-வது ஆண்டிலாவது
உனக்கு உண்மையான
சுதந்திரம் வேண்டாமா?

வயதைப் பாராதே,
வார்த்தையைப் பார்
உன்னைத் தேடி வரும்
வாய்ப்புக்களைப் ‘பார்’

BAR வேண்டாம் WAR வேண்டாம்
BEER வேண்டாம்
NEER மாத்திரம் போதும்
என்று உரக்கச் சொல்லி
உன்னதரைத் துதித்துவிடு

நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து
எங்கள் தேவனுடைய நாமத்தில்
கொடியேற்றுவோம்
என்று (சங்கீதம் 20:5)
உனக்குக் கிடைத்த
இரட்சண்யத்தின்
விடுதலையைக்
கொடியேற்றிக் கொண்டாடு

கர்த்தர் நன்மையானதைத் தருவார்;
நம்முடைய தேசமும்
தன் பலனைக் கொடுக்கும்.

வாழ்ந்திருக்க வாழ்த்துகிறேன்
அன்புடன்
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள் மதுரை -14

 

Caleb hoisted the Flag of Independence “EIGHTY-FIVE”

× என்னை எழுத வைத்த வேத பகுதிகள்
× வேத பகுதிகள்: எண்ணாகமம் 13,14 அதிகாரங்கள் யூதா 5 , யோசுவா 14- ம் அதிகாரம் 1 கொரிந்தியர் 7:25, சங்கீதம் 20:5 சங்கீதம் 85:12

Share this page with friends