கேத்தரின் லூயிஸ்

Share this page with friends

சிங்சிங் (Singsing) என்பது உலகப் பிரசித்தி பெற்ற சிறைச்சாலைகளில் ஒன்றாகும். அதில் மிகவும் மோசமான கொலை குற்றவாளிகளை தனிமையில் அங்கு அடைப்பது வழக்கம். அந்த சிறைச்சாலைக்கு பின்னால் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்திருக்கின்றார். உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கின்ற ஒளியான இயேசுகிறிஸ்துவின் அன்பு, கொலையாளிகளாகிய அவர்களையும் மாற்றி, தேவனின் அன்பை அவர்கள் ருசித்து பார்க்கும்படியான கிருபையை அவர்களும் பெற்றார்கள். கிறிஸ்து அந்த இடத்தில் பிரத்தியேகமாக வரவில்லை, ஆனால் கிறிஸ்து தனக்குள் இருந்ததால், அவரை அந்த கொடும் சிறையிலும் கொண்டு வந்து, அவருடைய அன்பை வெளிப்படுத்தினார்கள் ஒரு அம்மையார்! அவர்கள் தான் கேத்தரின் லூயிஸ்! (Catherine Lewis – Lawes).

அந்த சிறையில் வார்டனாக பணிபுரிந்த லூயிஸ் என்பவரின் இளம் மனைவி கேத்தரின் லூயிஸ் சிங்சிங் சிறைச்சாலைக்கு 1921ம் ஆண்டு வந்தார்கள். அவர்களுக்கு மூன்று சிறிய குழந்தைகள் இருந்தன. அவர்க்ள சிறைச்சாலைக்கு அடுத்து குடியிருந்தார்கள். கேத்தரின் அங்கு சிறைச்சாலையில் விசேஷித்த நாட்களில் வருவது வழக்கம். அப்போது தனிப்பட்ட முறையில் அங்கிருந்த கைதிகளிடம் பரிவு காட்ட ஆரம்பித்தார்கள். அங்கு இருந்த கைதி ஒருவர் கண் தெரியாதவர் என்று அறிந்த போது, அவருக்கு பொறுமையாக குருடர் படிக்கும் Braille கற்று கொடுத்தார்கள். அவரும் கேத்தரின் பரிவோடு சொல்லி கொடுத்தபடியால் கற்க ஆரம்பித்தார். மற்றொரு கைதி செவிடும் ஊமையுமாக இருந்ததை கண்டு, மற்றவர்களோடு எப்படி தொடர்பு கொள்ளலாம், பேசலாம் என்பதை கற்றுக் கொடுத்தார்கள். அவர் கிறிஸ்துவை ஏற்று கொண்டார்

இப்படி கேத்தரின் சிறைசாலையில் அநேகருக்கு உதவி செய்து, எல்லாருடைய இருதயத்திலும் இடம் பிடித்தார். அந்த சிறைச்சாலையின் இறுக்கமான நிலைமையை மாற்றி, அநேகரை கிறிஸ்துவுக்குள் நடத்தி, அவர்களுக்கு நித்திய வாழ்வு பெறும்படியாக வகை காட்டினார். அந்த கைதிகள், எப்போது கேத்தரின் வருவார்கள் என்று ஆவலோடு காத்திருக்கும்படியாக, அவர்களை கேத்தரின் கிறிஸ்துவின் அன்போடு நேசிக்க ஆரம்பித்தார்கள். முரட்டு தனமான இருதயமும், கொலை வெறியும் கொண்ட அந்த கைதிகள் குழந்தைகளை போல மாறி, கர்த்தரை துதித்து பாடி, அந்த நேரம் எப்போது வரும் என்று தினமும் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

அந்த கைதிகளை உண்மையான அன்புடன் நேசித்த கேத்தரின், 1937ம் ஆண்டு, ஒரு கார் விபத்தில் சிக்கி, திடீரென்று மரித்துப் போனார். அதைக் கேள்வியுற்ற அந்த கைதிகள் அடைந்த துக்கத்திற்கு அளவேயில்லை. வாய்விட்டு கதறி அழுதார்கள். தங்களுடைய அன்னையே மரித்தது போன்று அவர்கள் ஒவ்வொருவரும் இடிந்து போனார்கள். அதை கண்ட அங்கு புதிதாய் வந்திருந்த வார்டனுக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. கொலை குற்றம் சுமத்தப்பட்டு, தங்கள் வாழ்நாளை சிறையில் கழித்து கொண்டிருக்கும் இந்த கைதிகளுக்குள் இப்படிப்பட்ட அன்பு உண்டா என்று அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.

அந்த கைதிகள் கேத்தரினின் உடலை பார்க்க ஆசைப்பட்டார்கள். அவர்களது அன்பைக் கண்ட வார்டனும் அனுமதி கொடுத்தார். ஏறக்குறைய நூறு கொலை குற்றம் சாட்டப்பட்ட கைதிகள், இரட்சிக்கப்பட்டவர்களாய், தங்களை நித்திய வாழ்வுக்குள் நடத்திய தங்கள் அன்பு சகோதரியும், அன்னையுமாயிருந்த கேத்தரினின் சரீரத்தை வரிசையாக நின்று, கண்களில் கண்ணீர் வழிய அமைதியாக விடை கொடுத்து, திரும்ப சிறைச்சாலைக்குத் திரும்பினர். ‘இயேசுகிறிஸ்து கேத்தரினின் மூலமாக சிங்சிங் சிறையில் வாழ்ந்தார்’ என்று அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். – (யோவான் 13:34) என்று இயேசுகிறிஸ்து கூறினார்.

இந்த உலகில் அன்பிற்காக ஏங்குகிறவர்கள் அநேகர் உண்டு. நம்மிடம் இருந்து வரும் ஒரு அன்பான வார்த்தை, ஒரு அன்பான புன்னகை, ஒரு அன்பான விசாரிப்பு இதை தானே எதிர்ப்பார்க்கிறார்கள்! நம்முடைய ஒரு புன்னகை அவர்களுக்கு வாழ்ககையில் ஒரு நம்பிக்கையை கொடுக்கலாம், ஒரு விசாரிப்பு, நம்மையும் விசாரிக்க ஆளுண்டு என்கிற தெம்பை அவர்களுக்கு கொடுக்கலாம், அந்த அன்பை காட்டுவோமா!

ஆமென் அல்லேலூயா!


Share this page with friends