கிறிஸ்தவ நலவாரியம் அமைப்பது குறித்து தமிழ் நாடு அரசு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவருடன் கிறிஸ்தவ தலைவர்கள் கலந்தாலோசனை

தமிழக அரசின் கிறிஸ்தவ நல வாரியம் விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாக ஆணைய அலுவுலகத்தில் கிறிஸ்தவ தலைவர்களுடன் கலந்தாலோசனை கூடுகை:
தமிழக முதல்வரின் உத்தரவுபடி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் பேரவையில் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்களுக்கென தனியாக ஒரு நலவாரியம் அமைக்கப்படும் என ஒரு அறிவிப்பு வெளியானது.
இந்த நல வாரியம் அமைப்பது தொடர்பாக செப்டம்பர் 21 அன்று (21.09.21) காலை தமிழக அரசு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவருடன் கிறிஸ்தவ தலைவர்கள் பங்குபெற்ற கலந்தாலோசனை கூடுகை ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஏற்கெனவே சட்டப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி கிறிஸ்தவ நல வாரியம் அமையப் பெறும் போது கிறிஸ்தவ ஊழியர்கள் பயன்பெறுவதற்கு அவசியமான ஆலோசனைகளை சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் உயர்திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பங்குபெற்றிருந்த பல்வேறு கிறிஸ்தவ அமைப்பின் தலைவர்களிடம் கேட்டறிந்து குறித்துக் கொண்டார்.

குறிப்பாக கிறிஸ்தவ இயக்கங்கள் பல அமைப்புகளாக, பல்வேறு பெயர்களில் இயங்குகிற நிலையில் அனைத்து கிறிஸ்தவ ஊழியர்களை மற்றும் பணியாளர்களை வரையறுத்து அங்கீகரிக்கும் அதிகாரத்தை யாரிடம் கொடுப்பது என்கிற கேள்வி எழுந்தது. அதைத் தொடர்ந்து தீவிரமான கலந்துரையாடல் நடைபெற்றது.
பின்னர் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த குருமார்களை வரையறுத்து அங்கீகரிக்கும் அதிகாரத்தை அவர்களது தலைமை பேராயர்களுக்கு வழங்குவதாக பேசப்பட்டது.
சி.எஸ்.ஐ திருச்சபைகள், மெத்தடிஸ்ட் திருச்சபைகள் , லுத்தரன் திருச்சபைகள், இ.சி.ஐ திருச்சபைகள், அட்வென்ட் சால்வேஷன் ஆர்மி திருச்சபைகள் மற்றும் ஆங்கிலிக்கன் திருச்சபைகளை புராட்டஸ்டன்ட் என்ற பிரிவில் ஒன்றிணைத்து, அதன் குருமார்களை வரையறுத்து அங்கீகரிக்கும் அதிகாரத்தை அவர்களது தலைமை பேராயர்களுக்கு வழங்குவதாக பேசப்பட்டது.
பெந்தெகொஸ்தே பிரிவில் பல சபைகள் இயக்கங்களாகவும், அமைப்புகளாகவும், சுயாதீன திருச்சபைகளாகவும் இயங்கி வருகிறது. இத்தகைய போதகர்களை ஒன்றிணைத்து வரையறுத்து அங்கீகரிக்கும் அதிகாரத்தை பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்திற்கு வழங்குவதாக பேசப்பட்டது.
மேற்கண்ட அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் தலைவர்கள் தங்கள் இயக்கத்திற்கு கீழ் இருக்கும் உபதேசியார் மற்றும் ஊழியர்களை தமிழக அரசுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களை தமிழக கிறிஸ்தவ நலவாரியத்தில் இணைக்க வழிவகை செய்வார்கள் என்று ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது.
ஊழியர்கள் மற்றும் கிறிஸ்தவ பணியாளர்கள் அரசின் கிறிஸ்தவ நல வாரியத்தில் இணைக்கப்படவும், உதவிபெறவும் குறைந்த பட்ச கல்வித்தகுதி, அங்கீகரிக்கப்பட்ட இறையியல் கல்வி தகுதி, வயது, ஊழிய அனுபவம் குறித்து வரும் நாட்களில் பேசி முடிவு செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த அரசு கிறிஸ்தவ நலவாரியத்தின் வாயிலாக ஊழியர்கள் குடும்பத்திற்கான திருமண உதவி, விபத்துக்காப்பீடு, வியாதி மற்றும் இழப்பு நேரங்களில் உதவி உள்ளிட்ட பலவற்றிற்கும் உதவி பெறும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும் என்று சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் கூறியுள்ளார்.
மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் அவர்களது அனுபவம் மற்றும் பணிக்காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதிய திட்டமும் நலவாரியத்தின் மூலம் செயல்பாட்டுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தின் இணைத் தலைவர் பேராயர் K. B. எடிசன், துணைத் தலைவர் ஆயர் சாம் ஜெயபால், இணைச் செயலாளர் ஆயர் டேனியல் சஃபையர், இ.சி.ஐ. சபைகளின் சென்னைப்பேராயர் பேரருட்திருமதி கதிரொளி மாணிக்கம், ஆசிய சுயாதீன திருச்சபைகளின் மாமன்றத்தின் நிர்வாகிகள் அப்போஸ்தலர் டேனியல் தேவநேசன், ஆயர் ஐசக் டேனியல், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆயர் பால் தயாநிதி, தமிழ் நாடு கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவர் ஆயர் லியோ நெல்சன் மற்றும் சில இயக்க தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூடுகையின்போது கிறிஸ்தவ சமுதாயத்தின் வெவ்வேறு கோரிக்கைகள் குறித்தும் ஆணையத்தலைவரிடம் நினைவூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
