குடியரசுத் தலைவருக்கு மத்தியப்பிரதேச கிறிஸ்தவர்கள் வேண்டுகோள்

Share this page with friends

மத்தியபிரதேச கிறிஸ்தவத் தலைவர்கள், இந்து சார்பு தேசியவாதக் குழுக்களிடமிருந்து தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

21 January 2022, 15:55

“நாங்கள் பயமுறுத்தப்படுகிறோம்”, “பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றும் “மதமாற்றம் செய்கிறோம்” என்று பொய்க்குற்றம் சாட்டப்படுகிறோம் என்றும் ஜாபுவா மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் ராக்கி ஷா ஜனவரி 20, வியாழன்று UCA செய்தியிடம் தெரிவித்தார்.

 பல்வேறு கிறிஸ்தவ குழுக்களைச் சேர்ந்த தலைவர்கள், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. இரமணா உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள தீர்மானத்தில், தங்களின் மத உரிமைகளில் தலையிடுவதாக விஷ்வ ஹிந்து பரிஷத், மற்றும் அதன் இளைஞர் அமைப்பான   பஜ்ரங்தளம் போன்ற இந்து சார்பு அமைப்புகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர் என்று UCA செய்தி தெரிவிக்கிறது.

இந்து சார்பு தேசியவாத குழுக்கள், அருள்பணியாளர்கள், மற்றும் போதகர்கள் மீது மதமாற்றம் தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்றும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக தவறான சமூக ஊடக பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன், காவல் துறையில் கிறிஸ்தவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்கின்றனர் என்றும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் UCA செய்தி தெரிவிக்கிறது.   

கல்வி, சமூக மேம்பாடு, மருத்துவம் ஆகிய பல துறைகளில் கிறிஸ்தவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தபோதிலும், இந்த அரிய சேவைகளெல்லாம் மற்றவர்களை மதம் மாற்றுவதற்கே என்று இந்து சார்பு தேசியவாத குழுக்களால் தவறாகத் திசைதிருப்பப்படுகின்றன என்றும், இந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்டவரும், மக்கள் தொடர்பாளருமான அருள்பணியாளர் ராக்கி ஷா UCA செய்திக்குத் தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில்தான், இம்மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எங்களுக்கான பாதுகாப்பைக் கோரி குடியரசுத்தலைவர்,  தலைமை நீதிபதி, உயர் அரசியலமைப்பு அதிகாரிகள் ஆகியோர்களை அணுக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்று அருள்பணியாளர் மேலும் தெரிவித்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் vaticannews.va/ta/church/news/2022-01/


Share this page with friends