“கர்த்தரின் பந்தியில் வா”

Share this page with friends

கிறிஸ்தவர்களாயிருக்கிற ஒவ்வொருவருக்கும் நன்கு தெரிந்த பாடல், ‘‘கர்த்தரின் பந்தியில் வா’’ என்னும் பாடலாகும். இந்தப் பாடலின் பிண்ணனி மிகச் சிறந்தது. இதை எழுதியவர், மரியான் உபதேசியார் என்பவராவார். பாடலின் ஒவ்வொரு வரியும் ஆழமான சத்தியங்களை நமக்கு சொல்லித் தருகிறது என்றால் மிகையாகாது. உபதேசியாருக்கும், சபையின் மூப்பர் ஒருவருக்கும், இடையில் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டது.

மூப்பர் ஆலயத்திற்கு வந்து ஆண்டவரை ஆராதிக்க ஆவலில்லாமல் ஆராதனையை புறக்கணித்தார். நற்கருணை ஆராதனை நடத்த சபையில் போதகரும் வந்து விட்டார். உபதேசியார், மூப்பர் வருவார் எனக் காத்திருந்தார். அப்போது கல்வாரி காட்சியை அவரது உள்ளம் தியானித்தது. இயேசுவின் அன்பை உணர்ந்தார். இன்னும் மூப்பர் வராததால், உபதேசியார் உடனே புறப்பட்டார். தன்னோடு மனஸ்தாபம் கொண்டு, மூப்பர் நற்கருணை ஆராதனையை புறக்கணிக்காதபடிக்கு, மூப்பரின் வீட்டண்டை நின்று உபதேசியார் பாடிய பாடல்தான் இது. இனிமையான ராகம்கொண்ட அற்புதப்பாடலைக் கேட்ட மூப்பர், மனஸ்தாபத்தை மறந்து, உடனே புறப்பட்டு, உபதேசியாருடன், ஆலயத்திற்கு சென்று அன்பின் விருந்தில் கலந்துக் கொண்டாராம். ‘’அன்பின் விருந்து’’, ‘‘கர்த்தருடன் ஐக்கிய பந்தி’’ போன்ற வார்த்தைகள், கர்த்தர் உபதேசியார் மூலம் நமக்கு கிருபையாய் கொடுக்கப்படட்ட வார்த்தைகள் ஆகும்.

பிரியமானவர்களே, கிறிஸ்துவின் அன்பு உபதேசியாரை நெருக்கியதால் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. பகையை மறந்தார். மூப்பரிடம் அன்பு செலுத்தினார். தன்னை தாழ்த்தினார். மூப்பரை சென்று அழைத்தார். உறவுகள் புதுப்பிக்கப்பட்டன. இருவரும் ஓப்புரவாகினர். ஆண்டவரின் நாமம் மகிமைப்பட்டது.

கிறிஸ்து நமக்கு தலையாக, நாம் ஒவ்வொருவரும் அவருடைய தலையின் கீழ் சரீரத்தின் அங்கங்களாக இருக்கிறோம் என்று வேதம் நமக்கு கூறுகிறது. சரீரத்தின் ஒரு அங்கம் மற்றொரு அங்கத்துடன், சண்டையிட்டு வாழ முடியுமா? “உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நிறைவேற்றும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவோம்.

கர்த்தரின் பந்தி கிறிஸ்துவின் அன்பைத்தான் நமக்கு வெளிப்படுத்துகிறது. ‘’காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்’ – (1 கொரிந்தியர் 11:23-26) என்று இயேசு கூறினார். அவரது மரணத்தை நினைவுகூர்ந்தவர்களாக நாம் அந்த பரிசுத்தபந்தியில் பங்கு பெறுகிறோம்.

‘நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே’ என்று இயேசு கூறியதாக (யோவான் 6:51) நாம் வேதத்தில் வாசிக்கிறோம். ஜீவ அப்பமாகிய அவரை புசித்து நாம் என்றென்றும் வாழும்படியாக எப்போதெல்லாம் தருணம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் கண்டிப்பாக நாம் பந்தியில் பங்கு பெற வேண்டும். ஏனெனில் இயேசுகிறிஸ்து நமக்கு கட்டளையாக சொன்னதை நாம் நிறைவேற்ற வேண்டும். கர்த்தரின் பந்தியில் பங்குபெற்று தேவ ஆசீர்வாதத்தை பெறுவோமாக!!!

கர்த்தரின் பந்தியில் வா – சகோதராகர்த்தரின் பந்தியில் வா
கர்த்தர் அன்பாய் சொந்த ரத்தத்தை சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி கர்த்தரின் பந்தியில் வா!!

ஜெபம்:

எங்களை அளவில்லாமல் நேசிக்கும் எங்கள் நல்ல தகப்பனே, கர்த்தரின் பந்தியில் எங்களுக்கு அளவில்லாத ஆசீர்வாதத்தை வைத்திருக்கிறவரே உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்-போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கும்படியாக நீர் எங்களுக்கென்று ஆயத்தபடுத்தியிருக்கிற இந்த அற்புதமான பந்திக்காக உம்மைத் துதிக்கிறோம். இயேசு சிலுவையில் பட்ட பாடுகளை நாங்கள் தியானித்து, அருமையான அந்தப் பந்தியில் பங்கு பெற்று உமக்கென்று சாட்சியாக வாழ கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.!!.. ஆமென்.!!!…


Share this page with friends