மதமாற்றம் செய்வதாக புகார்… கிறிஸ்தவ புத்தகங்களை எரித்த வலதுசாரி அமைப்புகள்

Share this page with friends

வீடு வீடாகச் சென்று பிரசங்கம் செய்வதன் மூலம் மத விரோதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கிறிஸ்தவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு: டிசம்பர் 12, 2021 22:10 IST

பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கோலார் நகரில் தேவாலயம் சார்பில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டிய வலதுசாரி அமைப்பினர், கிறிஸ்தவ பிரசார புத்தகங்களை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கிறிஸ்தவர்கள் சிலர் வீடு வீடாகச் சென்று மத போதனை செய்ததுடன், மத பிரசார புத்தகங்களையும் விநியோகம் செய்தனர். அப்போது அங்கு வந்த வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்துக்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக கூறி கேள்வி எழுப்பினர். பின்னர் அவர்களிடம் இருந்த புத்தகங்களை பிடுங்கி தீ வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வீடு வீடாகச் சென்று பிரசங்கம் செய்வதன் மூலம் மத விரோதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கிறிஸ்தவ சமூகத்தினரிடம் எச்சரித்துள்ளோம். இரு தரப்பினரும் சுமுகமாக பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளனர்’ என்றார்.

கட்டாய மத மாற்றம் தொடர்பான மசோதா குறித்து சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்றும், இது மாநிலத்தில் பரவலாகி வரும் கட்டாய மதமாற்றங்களைத் தவிர்க்கும் என்றும்  முதல்வர் பசவராஜ் பொம்மை கூறி உள்ளார். 
தூண்டுதல்கள் காரணமாக நடக்கும் மத மாற்றங்களைத் தடுப்பதற்காக மட்டுமே இந்த மசோதா என்று கூறிய பொம்மை, மற்ற மாநிலங்களில் இது தொடர்பாக இயற்றப்பட்ட சட்டங்களை ஆய்வு செய்த பிறகே கர்நாடகத்திலும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புகிறார்கள், என்றார்.

கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற சட்டம் தொடர்பாக, பாஜக அரசு பரிசீலனை செய்யத் தொடங்கியதில் இருந்து, வலதுசாரி அமைப்பினர் தங்கள் பகுதிகளில் கிறிஸ்தவர்கள் மத பிரசாரம் செய்வதை தடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share this page with friends