தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்கு கிறிஸ்தவ தலைவர்கள் வாழ்த்து

Share this page with friends

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் திருத்தியமைப்பு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கடந்த 1989ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 13ஆம் நாள் அன்று அப்போதைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகு கடந்த 2010ஆம் ஆண்டு, மீண்டும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010 (Act 21 of 2010)-இன் படி, சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினர் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆணையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திருத்தியமைத்து, அதன் தலைவராக திரு எஸ். பீட்டர் அல்போன்ஸ் அவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள். திரு எஸ்.பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கடந்த 1989 மற்றும் 1991ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தென்காசி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.

நமது கருத்து:

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் நியமனம். அறிவாற்றல் மிக்கவர், நிதானமானவர், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற அவைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சரியான தேர்வு என பொதுமக்கள் உட்பட பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளும், சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் பொதுவான அமைப்புகளும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மை மக்களின் நலனுக்காக இனி சட்டசபையில் ஓங்கி குரல் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this page with friends