தேவனே எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகர்

Share this page with friends

தேவனே எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகர் (ஆதியாகமம் 1:1-2:25):
1️⃣ படைப்பின் வரலாறு (1:2-3):
வேதாகமம் சொல்லுகிறதாவது: ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின் மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தில் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். முதலாம் நாள் தேவன் பகலையும், இரவையும், இரண்டாம் நாள் வானத்தையும், மூன்றாம் நாள் பூமியையும், சமுத்திரத்தையும், தாவரங்களையும், நான்காம் நாள் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், ஐந்தாம் நாள் நீர்வாழ் மச்சங்களையும், பறவைகளையும், ஆறாம் நாள் மிருகங்களையும் ஆணும் பெண்ணுமாக மனுஷனையும் உண்டாக்கினார். தேவன் தான் உண்டாக்கின யாவற்றையும் பார்த்து அது மிகவும் நன்றாயிருந்தது என்றார். பின்பு தம்முடைய கிரியைகளை எல்லாம் முடித்த பின்பு ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தாராம். எனவே அண்டங்கள் முழுவதும் தாமாக நிகழவோ அல்லது படிப்படியாக தோன்றவோ இல்லை. ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன் இந்த அதிசயமான அண்டங்கள் முழுவதையும் சிருஷ்டித்தார்.
2️⃣ சகலமும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மூலமாக சிருஷ்டிக்கப் பட்டது:
(1) ஏசாயா 44:24 இல் கர்த்தர் சொன்னதாவது: “நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.”
(2) யோவான் 1:1-3 இலிருந்து நாம் அறிந்து கொள்வதாவது: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
(3) கொலோசெயர் 1:15-17 இலிருந்து நாம் அறிந்து கொள்வதாவது: குமாரன் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கபட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும் , கர்த்தத்துவங் களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப் பட்டது.
(4) எபிரேயர் 1:2,3 இலிருந்து நாம் அறிந்து கொள்வதாவது: தேவன் குமாரனை சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவர்.
3️⃣ தேவன் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபட்டதாகப் படைத்தார்:
நாம் 1 கொரிந்தியர் 15:38-41 இலிருந்து அறிந்து கொள்வதாவது: தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே; மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்‌ (சங்கீதம் 147:4).
தேவன் பகல், இரவு, வானம், பூமி, சமுத்திரம், தாவரங்கள், சூரியன், சந்திரன்,நட்சத்திரங்கள், மச்சங்கள், பறவைகள், மிருகங்கள் போன்றவற்றைப் படைத்தார். ஆனால் தேவனாகிய கர்த்தர் தேவசாயலாக மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். சங்கீதம் 147:8 இல்: கர்த்தர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார் என்று கூறபட்டுள்ளது. தேவன் எல்லா பசுமையான தாவரங்களை மிருகங்களுக்கு உணவாகக் கொடுத்தார். ஆனால் ஆதாம் ஏவாளுக்காக ஏதேன் தோட்டத்தை உண்டாக்கி பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணி புசிக்கச் சொன்னார் (2:9). எனவே நமது சிருஷ்டிகரும், நமக்கு உணவளிப்பவருமாகிய தேவனாகிய கர்த்தரை கீர்த்தனம் பண்ணுகிறது நல்லது. மேலும் துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!
ஜேஸ்மின் கிறிஸ்டல்டா மோகன் (200437 குழு நிர்வாகி), சென்னை, இந்தியா.


Share this page with friends