மகுடம் சூடும் வருடம் 2021

Share this page with friends

வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிறீர்
(சங்கீதம் 65:11)

கிறிஸ்துவுக்குப் பின் 2020 வருடங்கள் வந்து போயிற்று.

வந்து போன ஒவ்வொரு வருடமும் 365 நாட்களை ஆட்சி செய்து, முடிந்து, முடியிழந்து, முடங்கிப் போயிற்று.

மீண்டும் அரியணையேற அவைகள் அறுகதையற்றவை. வேண்டுமானால், மனிதனின் உள்ளத்து நினைவுகளாக மட்டும் அவைகள் ஆட்சி செய்யலாம்.  அவ்வளவுதான். 

இப்போது அரியணை ஏறி இருப்பவர் 2021 என்பவர். இவர் ஆளுகை எத்தனை நாட்களுக்கு?  அதே 365 நாட்கள்தான். லீப் வருடத்தில் ஒரு சின்ன ப்ரோமோஷன் 366 நாட்கள்! அதன்பின் காலமானவர். காலமாகிவிடுவார். என்றாலும் இன்றைக்கு அவர் உயிரோடிருப்பவர்.

இவரைப் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது? இவருக்கு முடிசூடியவர் யார்? கர்த்தர்.

காலங்கள் அவருடைய கரத்தில் இருப்பவை. வருகின்ற வருடங்களெல்லாம் அவர் வலது கையில் இருப்பவை. அவைகளை அவர் நினைவு கூர்ந்து செயல்படுகிறவர் (சங்கீதம் 77 :10).

செத்துப்போன வருடங்களுக்கு தேவன் முடிசூட்டுகிறதில்லை.

ஜீவனுள்ள வருஷத்துக்கு மட்டும் முடிசூட்டுகிறவர்.  வருஷத்தை முடிசூட்டுவது யாருக்காக? உனக்காகத்தான். 

காலங்கள் அவர் கரத்தில் இருப்பதுபோல் சத்தியத்தின்படி நீயும் அவர் கரத்தில் இருக்கிறாய். உனக்காகவே வருடங்களை உருவாக்கிய ஆண்டவர் உனக்கும் வருஷங்களுக்கும் ஒரு உறவையும் உண்டாக்கியிருக்கிறார். வருஷத்தை முடிசூட்டுகிறவர் உன்னையும் முடிசூட்டுகிறார். முடிசூட்டுதல் என்பது ஆளுகையைக் குறிப்பதாகும். காலங்கள் உன்னை ஆளுகை செய்வதோ அல்லது காலங்களை நீ ஆளுகை செய்வதோ, எதை நீ விரும்புகிறாய்?

இந்த வருடம் உனக்கு கர்த்தருடைய நன்மையினால் முடிசூட்டப்பட்ட வருடமாக இருக்கவேண்டுமானால் காலத்தின் கணக்கு வழக்குகளை கணிப்பதாக ஜாலம் காட்டும் ஜாதகங்களையும், குறி சொல்பவரையும் நாடாதே! ஜாதிப் புத்தகங்களோ, பத்திரிகைகளோ உனக்கு வேண்டாம்.   காலம் கணித்து செயல்படுபவர்களையும், ஜாதகம் பார்ப்பவர்களையும், சவுல் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயை நாடினது போல,  குறி கேட்பவர்களையும் காலம் காலனாக வந்து சபித்துக்கொண்டிருக்கிறது. இது தேவனுக்கு விரோதமான பாவம் என்பதை உணர்ந்துகொள்.

கர்த்தருடைய நன்மையினால் முடிசூட்டப்பட்ட இந்த வருடம், (2021) எல்லோருக்கும் அல்ல.  அப்படியென்றால் யாருக்கு கர்த்தருடைய நன்மை வந்து சேரும்? இதை அறிந்து செயல்பட உனக்கு உண்மையில் ஆர்வம் இருக்கிறதா? அப்படியானால் தொடர்ந்து வாசி. வார்த்தைகளை விசுவாசி, அப்பொழுது நீ சுகவாசி.

யார் கர்த்தரால் முடிசூட்டப்பட்டவர்களாக காணப்படுகிறார்களோ அவர்கள் கர்த்தரின் நன்மையை புசிப்பார்கள். கர்த்தரால் முடிசூட்டப்பட்டவர்கள் யார்? உலகத்தின் அடிமைத்தனங்களி னின்று விடுபட்டு பாவத்தினின்றும் சாபத்தினின்றும் இயேசுவின் நாமத்தினாலும் இரத்தத்தினாலும் மீட்கப்பட்ட ஜனம் இரட்சிக்கப்பட்ட தேவ ஜனம் என்றழைக்கப்படுகிறது. ஜீவகிரீடத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், நீதியின் கிரீடத்திற்கு சொந்தக்காரர்கள். காலங்களுக்கு அப்பாற்பட்ட பரலோக ராஜ்யத்திற்கு உரிமையுள்ளவர்கள்.

இந்த வருஷத்தில்தானே கானானின் பலனை புசிப்பவர்கள் (யோசுவா 5:12). முடிசூட்டப்பட்ட ராஜாவின் வருஷங்கள் தலைமுறை தலை தலைமுறையாகஇருக்கும் (சங்கீதம் 61:6)

அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டுள்ள  
இந்த உலகத்தின் குறுகிய வருஷங்களுக்கு
முடிவு வரும் (யோபு 16:22)

கர்த்தருடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது (ஏசாயா 63:4)

இந்த வருஷம் கர்த்தருடைய அனுக்கிரக வருஷமாக உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது (ஏசாயா 61:2)

இது, இந்த வருஷமும் இருக்கட்டும்
(லூக்கா 13:8) என்று இந்த வருஷத்தையும்  கூட்டிக் கொடுத்திருக்கிறாரே!

கர்த்தருடைய நன்மையால் முடிசூட்டப்பட்ட வருஷத்தை தொடர்ந்து, ஒரு பாதை உனக்கு உண்டாவதாக. வசனம் சொல்லுகிறது; அது கர்த்தருடைய பாதைகளாம். அது நெய்யாய் பொழிகிறதாம். அதாவது பெரிய செழிப்பு உனக்கு உண்டாகுமாம். மகிழ்ச்சிதானே.

முடிசூட்டப்பட்ட வருடம் உனக்கு வெற்றியின் வருடம்.  கிறிஸ்துவுக்குள் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். 

கர்த்தர் உங்களை  ஆசீர்வதிப்பாராக.

பாஸ்டர் S. விக்டர் ஜெயபால்
போதகர் / எழுத்தாளர்
ஆசிரியர் : வழிப்போக்கனின் வார்த்தைகள்

தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள் மதுரை -14


Share this page with friends