நடன ஆராதனைகள் ! ஜாக்கிரதை (ஓர் எச்சரிக்கைப் பதிவு!)

Share this page with friends

நடன ஆராதனைகள்! ஜாக்கிரதை
(ஓர் எச்சரிக்கைப் பதிவு!)

நடனம் (DANCING) என்பது, இசையுடனோ அல்லது இசையில்லாமலோ உடலை அசைத்து ஆடுவது ஆகும்.

“நடனம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை choros என்பதாகும். மூல எபிரெய பாஷையில் நடனமாடுதல் என்பதற்கான எபிரெய வார்த்தைக்குக் குதித்தல், சுற்றுதல், தவழுதல் என்னும் பொருளும் உள்ளன.

யூத ஜனங்களில் பொதுவாக
அவர்களுடைய ஸ்திரீகளே நடனமாடினார்கள். சில சமயங்களில் தனியாகவும், வேறுசில சமயங்களில் குழுவாகவும் அவர்கள் நடனமாடியிருக்கிறார்கள்.

எகிப்து தேசத்திலும் பாபிலோனிலும் மேலும் புறஜாதி தேசங்களிலும் நடனமாடுவதைத் தொழிலாகக் கொண்ட கலைஞர்கள் இருந்தார்கள். ஆனால், எபிரெயர்கள் மத்தியில் நடனமாடும் தொழில் பண்ணுகிறவர்கள் காணப்படவில்லை. – இவைதான் நடனம் பற்றிய பொதுவான செய்திகள்.

பரிசுத்த வேதாகமத்தில் பலவித காரணங்களுக்காக, மனிதர்கள் நடனமாடியதற்கு, பலசம்பவங்கள் எடுத்துக்காட்டாக கூறப்பட்டுள்ளன.

தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துவதற்காக அவர்கள் நடனமாடினார்கள் (சங் 30:11; பிர 3:4; லூக் 15:25)

யுத்தத்தில் ஏற்பட்ட வெற்றிகளை ஸ்திரீகள் நடனமாடிக் கொண்டாடினார்கள் (1சாமு 18:16).

சீலோவில் கன்னிகைகள் நடனமாடியது, அவர்களது மார்க்க சம்பந்தமான காரியமாகும் (நியா 21:19-23).

சிறு பிள்ளைகள் பெரியவர்களைப் போன்று நடனமாடிப் பழகுவார்கள்
(யோபு 21:11; மத் 11.17)

தாவீது சணல்நூல் ஏபோத்தை தரித்து தன் முழு பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக மகிழ்ச்சியோடு நடனமாடினார். (2சாமு 6:14). – ஏதோமிலுள்ள ஓபேத்தின் வீட்டிலிருந்து உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமிற்கு எடுத்துச் சென்றபோது, தாவீது, பெட்டிக்கு முன்பாக இவ்வாறு நடனமாடினார்.

இஸ்ரவேல் புத்திரர் நடனமாடும் போது தம்புரு போன்ற இசைக் கருவிகளை இசைப்பது வழக்கம் (நியா 11:34). இஸ்ரவேல் தேசத்தில் தேசிய பண்டிகைகளை கொண்டாடும் போது பலவிதமான இசைக்கருவிகளை இசைப்பது வழக்கம் (சங் 150:4).

பொதுவாக புருஷர்களும் ஸ்திரீகளும் சேர்ந்து நடனமாடுவது இல்லை. மார்க்க காரியங்களில் அவர்கள் நடனமாடும்போது புருஷர்கள் தனியாகவும், ஸ்திரிகள் தனியாகவும் பிரிந்து நடனமாடினார்கள் (சங் 68.25; எரே 31.13)

தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக ஆராதிப்பதின் ஓர் அம்சமாக சிலர் நடனமாடினார்கள். (யாத் 15:20; சங் 149:3; 150:4).

பழைய ஏற்பாட்டின் கட்டளைகளில் நடனம் என்பது தேவகட்டளை அல்ல. மார்க்க சம்மந்தமான காரியங்களில் மனிதர்கள் தாங்களாகவே நடனம் ஆடினார்கள். தேவனாகிய கர்த்தர் அதனை ஆதரித்தோ, எதிர்த்தோ எதுவும் சொன்னதாக நிகழ்வுகள் இல்லை!

ஆயினும் நடனங்களுக்குப் பிந்தைய சம்பவங்கள் கடும் அதிர்ச்சிகரமாக இருந்தன. (இவைகள், மனிதர் தாங்களாகவே உணர்ந்துகொள்ளட்டும் என தேவன் விட்டுவிட்டதைப்போல உள்ளது!)

புதிய ஏற்பாட்டுப் பகுதியில்,

ஏரோதியாளின் குமாரத்தி நடனமாடி அதற்கு பரிசாக யோவான் ஸ்நானனின்
தலையை சிரச்சேதம் பண்ணச்செய்தாள் (மத் 14:6).

ஆண்டவராகிய இயேசுவின் உவமையிலும்கூட நடனம் என்பது சொல்லப்பட்டு உள்ளது.

“அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;”
(லுூக்கா 15:25)

  • இப்படி சில சூழ்நிலைகளில் நடன காரியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தேவகாரியங்களில் எந்த ஒரு நடனமும் ஆண்டவராகிய இயேசுவின் வாழ்விலோ, அப்போஸ்தலர்களின் ஊழியத்திலோ இருந்ததாக எந்தவொரு ஆதாரமும் இல்லை!

மனிதர்கள் தங்கள் இச்சைக்காகக்கூட ஊழியத்தைப் பயன்படுத்தக்கூடும்! நாம் மாடர்ன் உலகத்தில் இருக்கிறோம். பாவமும் டிசைன் டிசைனாக உள்ளது.

விலையுயர்ந்த மொபைல்கள் வாங்குவது நம் இச்சையாக இருக்கலாம். அதனை ஊழியத்துக்குத்தானே பயன்படுத்தப்போகிறேன் என்று சொல்லி வாங்கவைப்பது, சாத்தானின் வேலை!

விலையுயர்ந்த ஆடைகள், கார்கள் வாங்குவதும் அப்படியே!

புகைக்கு நடுவே நடனம், அருவருக்கத்தக்க ஆட்டம், சினிமா பாணியில் இசைப்பாடல்கள் இவையெல்லாம் தேவசித்தம் அல்ல! அப்படி இருந்திருந்தால், அப்போஸ்தலர்கள் எத்தனை இடங்களில் ஆட்டம்போட்டு இருப்பார்கள்? ஆண்டவரும் ஆடிப்பாடியிருப்பாரே! அப்போஸ்தல உபதேசத்துக்கும் ஆட்டத்துக்கும் துளியும் சம்மந்தமே இல்லை!

அர்ப்பணிப்புதான் ஆராதனை, ஆட்டம் பாட்டம் அல்லவென்று, ஆண்டவராகிய இயேசுவும், அப்போஸ்தலர்களும் ஜீவனைக் கொடுத்தல்லவா நிரூபித்தார்கள்!

ஆன்லைனில் ஆட்டம்போட்டு லைக்குகளும், ஷேர்களும் பெற்று, பிரபலமாகிப் பெருவாழ்வு வாழ்வது தேவனுக்கு உகந்ததல்ல.

தேவபிள்ளைகளை அவர்களுக்கு தெரியாமலே, சத்தியத்தைவிட்டு விலகச் செய்கிற, கள்ள உபதேசங்கள், கலர்புகை நடனங்களாக உலாவிக்கொண்டிருக்கிற காலமிது. ஊழியர்களை ஆதர்ஷ புருஷர்களாக, விருப்பக் கதாநாயகர்களாகக் கொண்டாடும் கூட்டமும் உண்டு! அழகாய்த் தென்படும் உலகக்காரியங்கள் தேவனுக்கு அருவருப்பாய் தென்படலாம்.

சிறு அசைவுகளாகத் தொடங்குகிற ஆட்டம், சைக்காலஜிகலாக ஒருவரின் உடலில் சிறு பரவசத்தை ஏற்படுத்துவது உண்மை! அதனை வைத்துப் பிழைப்போட்டுவது, அசகாய சூரர்களின் திட்டம்!

கிறிஸ்தவரல்லாத அனேக இனங்களில் விக்கிரகங்களுக்கான ஆராதனைகளில் நிச்சயம் ஆட்டங்கள் உண்டு! அப்படிப்பட்ட பின்புலத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு வருவோர், இப்படிப்பட்ட நிகழ்வுகளால், திரும்பவும் ஆடும்படி சூழ்நிலைகள் வரும்போது, நடனம் பண்ணுவது இன்னும் எளிதாகிவிடுகிறது! அப்படிச் செய்யப்பண்ணுவது பாவம்!

(நடன) ஆட்டங்களுக்குப் பின்னால் விபசாரத்தின் ஆவியும், வேசித்தனத்தின் ஆவியும் மிக வல்லமையாய் செயல்படுகின்றன. நடனத்தை ஓர் அங்கமாகக் கொண்டு செயல்படுகிற ஊழியர்கள் விபசாரப் பாவத்தில் விழுந்த கதைகள் ஏராளம் உண்டு. கர்த்தரின் வருகை தாமதித்தால், இன்னும் பல கதைகள் வெளிவரலாம்.

நவீன ஊழியர்கள், பெரும்பாலும் வாலிபரைக் குறிவைத்தே காரியங்களை நடத்துகிறார்கள். பொல்லாங்கன்களுக்கு விலகியோடுங்கள்…

நடனத்தை நியாயப்படுத்துவதோ, நடனமாடுவோரைக் காயப்படுத்துவதோ அடியேனின் நோக்கமல்ல… நாம் சத்தியத்தின்படி சிந்தித்துப்பார்க்கவேண்டியது அவசியம் அல்லவா?

மெல்லிய இசையோடு பாடி தேவனை ஆராதியுங்கள். உங்கள் இருதயம் பரிசுத்தமாய் அர்ப்பணிக்கப்படட்டும். அழியப்போகிற உடலை ஆட்டிப் பிரயோசனம் இல்லை! அழியாத ஆத்துமா சத்தியத்தால் கட்டப்பட்டு ஆடாமல் இருக்கட்டும்! நாம் சேரப்போவது அசையாத ராஜ்ஜியம்! ஆமென்!

மக்கள் அதிகம் வாசித்தவை:

மன்னனின் பிறந்த நாள் - சிறுகதை
கிறிஸ்தவ சபைகள், மற்றும் யூத பிரதிநிதிகளுக்கு போப்பாண்டவர் உரை
மரித்த பின்பு செய்ய முடியாதது என்னென்ன?
பருத்திப்பால் வியாபாரி ஒருவர் இயேசுவை புகழ்ந்து பாடுவதை பாருங்கள்
நான்கு நற்செய்தி நூல்கள் ஏன்?
LOCKDOWN in நோவாவின் நாட்களில்
கிறிஸ்துவின் உயித்தெழுதலுக்கு மூன்று நிரூபணங்கள்
கொரோனாவை அழிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிறிஸ்துமஸ் திருப்பலி!!
திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு..!
தாவீதின் விழுகையும் அதன் தாக்கமும் : வேதாகம பிரசங்க குறிப்புகள்

Share this page with friends